Thursday, February 10, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 3 [முதல் பகுதி]

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 3 [முதல் பகுதி]

[இந்தப் பாடலுக்கான மன்னாரின் விளக்கம் இரண்டு பகுதிகளாக அடுத்தடுத்து வரும்! அருள்கூர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கவும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!]

உல்லா சநிரா குலயோ கவிதச்
சல்லா பவிநோ தனுநீ யலையோ
எல்லா மறவென் னையிழந் தநலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.

உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனு[ம்] நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.

மேலும் கேட்கும் ஆவலில் மூன்றாம் பாடலைப் படித்தேன்.
மன்னாரின் முகத்தில் ஒரு புதிய உற்சாகம் தெரிந்தது!
கண்களை மூடிக்கொண்டு பாடலை இரண்டு, மூன்று தரம் படிக்கச் சொல்லிக் கேட்டான்!
ஏதோ தியானத்தில் ஆழ்ந்தவன் போல் அவன் முகம் இருந்தது.
முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது!
'என்னோடு வா! இந்தச் சந்தடி இனிமே நமக்கு வேண்டாம்! நாயர்! நீயும் சீக்கிரமாக் கெளம்பி ஐயரு வூட்டாண்ட வா!' எனச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கலானான்! நானும் நாயரும் கூடவே நடந்தோம்.

'ஹோட்டல் சங்கீதா' தாண்டி தெற்கு வீதியில் திரும்பியதும், என் தோளில் கை போட்டுக்கொண்டு மயிலை மன்னார் பேசலானான்!

'இந்தப் பாட்டு ரொம்பவே ஒசத்தியானுது! சொல்றவங்க சொன்னா அப்பிடியே சொல்லிக்கினே போலாம்! அவ்ளோ மேட்டர் க்கீது இதுக்குள்ள!
இந்தப் பாட்டை புரிஞ்சுக்கறதுக்கு, எப்பிடிப் படிக்கணும்னு சொல்றேன் கேட்டுக்கோ! மிச்சத்த அப்பாலிக்கா ஐயரு வூட்ல வந்து சொல்றேன்!

கடசி வரிலேர்ந்து அப்பிடியே படிப்படியா மேல போயிப் பார்க்கணும் இத்த!
சுரபூபதியே! முருகா! நலம் சொல்லாய்!
இன்னா நலம்?
என்னை இள[ழ]ந்த நலம்!
என்னை இள[ழ]க்கணும்னா இன்னாத்தயெல்லாம் தொலைக்கணும்?
இது அதுன்னு எதுவுமே இல்லாம, எல்லாம் அற என்னை இள[ழ]ந்த நலம்!
இப்ப மொத ரெண்டுவரியையிம் சேர்த்துப் படிக்கணும்!
உல்லாசலேர்ந்து ஆரம்பிச்சு, நீயலையோ வரைக்கும்!

எங்கே நான் சொன்னமாரி சொல்லிக் காட்டு, பார்க்கலாம்' என்றான்

வரிகளைப் பார்த்துக்கொண்டே நானும் சொன்னேன்.

சுரபூபதியே! முருகா! எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்!
உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!

'சரிதான்!' என்பதுபோல நாயர் தலையாட்டினான்! சந்தோஷமாகச் சிரித்தான் மன்னார்.
பேசிக்கொண்டே சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையை அடைந்தோம். ஆளரவம் கேட்டு அவரும் வந்து மௌனமாக உட்கார்ந்தார்!
மன்னார் தொடங்கினான்!

'சுர பூபதி'ன்னு சொல்றாரு!
சுரர்னா ஆரு? நீதான் கொஞ்சம் திருப்புகள்[ழ்]லாம் படிச்சிருக்கியே! அதுல நெறைய வரும் இந்த வார்த்தை! 'சுரர்'னா தேவருங்க! 'பதி'ன்னா ராசா! 'பூ'ன்னா பூமி! ஒலகம்! 'பூபதி'ன்னா ஒலகத்துக்கே ராசா! எந்த ஒலகத்துக்கு? தேவருங்களோட ஒலகத்துக்கே ராசாவேன்றாரு!

இப்ப ஒனக்கு ஒரு டவுட்டு வரும்!
தேவருங்களுக்கெல்லாம் இந்திரந்தானே ராசா! இவுரு எப்பிடி ராசாவாக முடியும்னு!
சூரங்கிட்டேர்ந்து அல்லாரையும் வெளில கொணாந்து, இந்திரனுக்கு மறுபடியும் பட்டம் கட்ட வராரு நம்ம முருகன்!
அப்ப, அவன், 'எனக்கு இதெல்லாம் வோணாம் முருகா! நீயே ராசாவா இரு!'ன்னு சொல்லி, பொண்ணையும் கட்டிக் குடுத்திட்டு ஒக்கார வைச்சுடறான்!
அப்பாலிகா, இவுரு 'நம்ம வேலை நெறைய க்கீது! நம்மளோட அடியாருங்கல்லாம் காத்துக்கினு க்கீறாங்க! அதுனால, இங்க நமக்குத் தோதுப்படாது! நீயே ராசாவா இருப்பா!'ன்னு இந்திரன் கையுல சொல்லிட்டு கெளம்பிடறாரு!
அதான் இவுரு சுர பூபதி!

இப்ப ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க!
ஒரு மந்திரி இருக்காரு.
அவரு முன்னால அல்லாரும் சலாம் போட்டுக்கினு நிக்கறாங்க.
இப்ப முதல்மந்திரி அங்க வராரு.
அப்போ இன்னா ஆவும்?
இந்த மந்திரியே எளு[ழு]ந்திரிச்சு அவரு முன்னாடி கைகட்டிக்கினு, வாய் பொத்திக்கினு, பயபக்தியா நிப்பாரு!
முதல் மந்திரியும் அமத்தலா இந்தாளோட சேர்ல போயி குந்திக்குவாரு!
அதும்மாரித்தான் இதுவும்!
இவுரு எப்ப தேவலோகத்துக்கு வந்தாலும் தேவேந்திரன் எளுந்து தன்னோட நாக்காலியக் குடுத்திருவான்!
அதுனால... இவுரு சுரபூபதி!

ஆச்சா! இப்ப 'முருகா'ன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும்! 'அள[ழ]கு'ன்னு சொல்லலாம்! 'சின்ன வயசு'ன்னு சொல்லலாம்! எப்பிடிச் சொன்னாலும் முன்னே வந்து நிப்பான் முருகன்!

இதுக்கு முந்தின வார்த்தையப் பாரு!
'சொல்லாய்'னு வருது!
ரொம்பவும் இஸ்டமானவங்களத்தான் இப்பிடிக் கூப்புடுவோம்!
அதுலியும் முக்கியமா சின்னக் கொளந்தையா இருந்தா, 'சொல்லும்மா, எங்கண்ணுல்ல, சொல்லுவியாம்'னு இன்னான்னாமோ சொல்லிக் கொஞ்சுவோம்!
அதான் இந்தச் "சொல்லாய்"!

இன்னா சொல்லச் சொல்றாரு அருணகிரியாரு?

எல்லாமற என்னை இள[ழ]ந்த நலத்தை எனக்கு சொல்லித்தாப்பான்னு கொஞ்சிக் கொஞ்சிக் கேக்கறாரு!
இவுரே ஒரு கிளி! அதான் இதுவும் கொஞ்சுது!

'எல்லாம்'னா இன்னா?
சைவசித்தாந்தத்துல இந்த பஞ்ச பூதத்தப் பத்தியும், அதுனால வர்ற மத்த சமாச்சாரமும் அன்னிக்கு சொன்னேன்ல,
அந்த இருவதும் [ஐம்பூதங்கள்[5] ஐம்புலன்கள்[5],ஞானேந்திரியங்கள்[5], கன்மேந்திரியங்கள்[5]] வெளியே தெரியுது! மனம், புத்தி, சித்தம், அகங்காரம்னு உள்ளார க்கீற நாலும் சேர்ந்ததுதான் இந்த 'எல்லாம்'!

இதெல்லாம் அத்துப் போச்சுன்னாலும்,' நானு'ன்ற ஆணவமலம் மட்டும் வுடாம தொத்திக்கினே இருக்கும்! அத்தயும் தொலைச்சுட்டு, ஒரு தனி நெலைல இருக்கற அந்த சொகமான அனுபவத்த நீ எனக்கு சொல்லுன்னு கொஞ்சறாரு!

அந்த நெலையுல இன்னா ஆவும்னா, கண்ணு எத்தயோ பார்க்கும்! ஆனா பார்த்ததே தெரியாது! காது கேக்கும்! ஆனா கேக்குதுன்னு தெரியாது! புத்தி இருக்குன்னு புரியும்! ஆனா, அதுவா ஒண்ணுத்தியும் முடிவு பண்ணாது! இப்பிடி சொல்லிக்கினே போலாம்! அதும்மாரி ஒரு ஆளரவமே இல்லாத நெலையாம் அது! அதைச் சொல்லித் தாப்பான்னு முருகங்கிட்ட கொஞ்சிக் கேக்கறாரு!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

****************
[தொடரும்]

Monday, February 7, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 2

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 2

'ம்ம். புள்ளையாரைக் கும்புட்டுக்கிட்டாச்சு! மேல அடுத்த பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

"நூல்"

1.
ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
சாடுந் தனியானைசகோ தரனே.

[ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே.]

இந்தப் பாட்டுங்கல்லாம் ஒரு அநுபூதி அனுபவத்தைச் சொல்ற பாட்டுங்கன்னு மட்டும் எப்பவுமே மனசுல வைச்சுக்கோ! ஒரு சில விசயம் கொஞ்சம் முந்திப் பிந்தி வரலாம்; இல்லேன்னா, ஒரு சிலது அப்பிடியே 'கடகட'ன்னு வரிசையாக் கொட்டலாம்! அதுனால, நான் சில சமயம் ஒரே ஒரு பாட்டுல ஒரு வரிக்கு மட்டுமே ஒளறிக்கினு இருப்பேன்! சில சமயத்துல, ஒரு அஞ்சாறு பாட்டுக்கு
ஒண்ணா வெளக்கம் சொல்லுவேன்! சரியா! நீ கண்டுக்காம கேட்டுக்கினே இரு!' என ஒரு பெரிய பீடிகையைப் போட்டுவிட்டு, மன்னார் தொடர்ந்தான்!

மொதப் பாட்டுல 'காப்பா' கணபதியப் பாடினாரு! ஆனாக்காண்டியும், இன்னும் அவரோட தாக்கம் தீரலை! நூலோட மொதப் பாட்டுலியும் அவரைக் கொணாந்து வைக்கறாரு! அப்பிடியே தான் சொல்லப்போற சமாச்சாரம் இன்னான்னும் இதுல ஒரு கோடி காட்டுறாரு!

ஒரு மூணு விசயத்த மொத வரியுல சொல்றாரு!

ஆடும் பரி, வேல், அணி சேவல்னு!

ஆடிக்கினே போற ஒரு பரி.... அதான், குதிரை, வேலு, அளகான ஒரு சேவலு!
முருகனைப் பத்தி நெனைச்சதுமே ஒன்னோட மனச்சுல வர்றதுதான் இந்த மூணுமே!

அதெப்பிடி குதிரை நெனைப்பில வரும்ன்றியா?
குதிரைன்னா இன்னா?
சவாரி பண்ற ஒரு வாகனம்!
ஆடு, மாடு, கோளின்னு எத்த நெனைச்சாலும் அதுங்கள வைச்சு ஒண்ணுத்துக்கும் மேலியும் ஒவ்வொரு நெனைப்பு வரும்!
ஆனாக்க, குதிரைன்னா, ஒடனே ஒண்ணே ஒண்ணுதான் ஞாபகத்துக்கு வரும்.
அதான்.... ஏறி சவாரி பண்ற ஒரு வாகனம்!

ஆனா, முருகனுக்கு எது வாகனம்?.... மயிலு!
சும்மா தத்தித் தத்திப் போவும் இந்த மயிலு!
மெய்யாலுமே மத்த பறவைங்க மாரி, பறக்கக்கூட முடியாது!
ஆனாலும், இத்த ஆரு வாகனமா வைச்சிருக்காரு? .... முருகன்!
அவரோட வாகனம் குதிரை மாரி பறக்குமாம்!

அது மட்டுமில்ல!
'இங்கே போயி அவனை அடிக்கணுமா? அங்க போயி அவனுக்கு ஆறுதல் சொல்லணுமா? அல்லாத்துக்குமே ரெடி'ன்றமாரி எப்பவுமே ஆடிக்கினே இருக்குமாம்! அதான் 'ஆடும் பரி'ன்னு சொல்லிப் பாடறாரு! அது இன்னா தெரியுமா?

ஒரு மயிலை நல்லா தோகை விரிச்சு ஆடறப்ப பாரு! அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி இருக்கும்! அப்பனுக்கே வெளக்கம் சொன்ன அந்த ஓமு "இப்ப எப்ப சாமியை ஏத்திக்கினு போவணும்"னு காலடியுல காத்துக்கினு க்கீது!
அது ஒரு பக்கத்துல!

அப்பாலிக்கா, இன்னோரு பக்கத்துல 'அணி சேவல்'னு வைக்கறாரு!
அளகான சேவலாம்!
ஆரு அது?
ஆணவம் புடிச்சு அலைஞ்ச சூரன்!
இப்ப இன்னா பண்றான்?
அடங்கி ஒடுங்கி சேவகம் பண்றான்!

இன்னாதான் ஆணவம் புடிச்சு அலைஞ்சாலும், இவன் எதுத்தாப்புல வண்ட்டா, அடங்கி ஒடுங்கி 'அம்பேல்'னு நிக்க வேண்டியதுதான்ற மாரி அந்தச் சேவலு நிக்குது! அதுவும் இன்னா சொல்லிக்கினு?
'வாங்கப்பா! வாங்க! அல்லாரும் வாங்க! வந்து இவரோட காலுல வுளுந்து சரணாகதி பண்ணுங்க' ன்னு சொல்றமாரி அந்தக் கொக்கரக்கோ சேவலு கூவிக்கினே க்கீது!
அது இந்தாப் பக்கமா!

நடுவுல 'வேலு'!
அதுக்கு ஆடும் பரின்னு சொன்னாரு! இதுக்கு அணிசேவல்னு சொன்னாரு!
ஆனாக்காண்டிக்கு, வேலுக்கு மட்டும் ஒண்ணுமே சொல்லலை!
ஏன்னு கொஞ்சம் நெனைச்சுப் பாரு!

வேல்னா இன்னா?
ஞானம்!
ஆரு குடுக்கறது அத்த?
அவந்தான் !... அந்த கந்தந்தான்!

உண்மைக்கு எப்பிடி பட்டம் குடுக்கறது?
உண்மை உணமைதான்!... மெய்யி மெய்யிதான்! ... ஞானம் ஞானந்தான்!
அந்த ஞானத்துக்கு, இது, அதுன்னு சொல்லி பெருமைப் படுத்தவே முடியாது!
அதான் ஒண்ணுமே சொல்லாம சும்மா 'வேலு'ன்னு மட்டும் சொல்லிடறாரு!
ஆகக்கூடி, மயிலு, , சேவலு, ...நடுவுல வேலு!

இந்த மூணைப் பத்தி மட்டுமே நான் எப்பவுமே பாடிக்கினு இருக்கணும்னு .... அதுவே என்னோட தொளிலா இருக்கணும்னு முருகன்கிட்ட வேண்டுறாரு அருணகிரிநாதரு!

அப்பிடி வேண்டறப்ப, கொஞ்சம் புள்ளையாரையும் கூடவே சேர்த்துக்கறாரு!
இன்னான்னு சொல்லி?

நீ முந்தி புள்ளையார் கதைன்னு ஒண்ணு எளுதினியே... அதுல ஒரு கதை வருமே...
அதாம்ப்பா.. தங்கிட்டியே வரம் வாங்கிக்கினு, தேவருமாருங்கள அல்லாம் எங்க எங்கன்னு தேடிப்போயி, தொல்லை பண்ணிக்கினே இருந்தானே, கஜமுகன்னு ஒரு ராட்சசன்....
அவனைத் தீர்த்துக் கட்றதுக்குன்னு புள்ளையாரை அனுப்பி வைச்சாரே நம்ம கபாலி!...
கெருவம் ஜாஸ்தியாப் போயி, எதுத்தாப்புல வர்றது ஒரு ஆனைதானேன்னு நெனைச்சு சண்டை போட்டானே கஜமுகாசுரன்! அந்தக் கதைதான்!

ஆனா, இவுரு இன்னா சாதாரண ஆனையா? தனி ஆனை! அதாவுது ஸ்பெசல் ஆனை!
இவுரப் போல ஒரு ஆனைய ஆருமே பாத்திருக்க முடியாது.... பார்த்ததும் கெடையாது!
தனின்னா இன்னா?

இவுருக்கு சோடி கெடையாது! அதும்னால தனி!
இவுரு ரொம்பவே விசேசமானவரு! அதுனாலியும் இவுரு தனி!
அல்லாரும் ஒருமாரி நெனைச்சா, இவுரு மட்டும் தனியா நெனைப்பாரு....
அப்பா அம்மாவச் சுத்திவந்து மாம்பளம் வாங்கின கதை மாரி... அதுனாலியும் தனி!
அதான், தனி ஆனைன்னு சொல்றாரு அருணையாரு... புள்ளையாரை!

அவரோட தம்பிதான் நம்ம கந்தன்!
இவுருகிட்ட ஒரு பக்கம் மயிலு!.... தேடி வந்து ஒதவுறதுக்காவ!
மறுபக்கம் சேவலு!..... ஆணவமே சேவகம் பண்ணும்ன்றதக் காட்றமாரி!
நடுவுல ஞானம்!......
இவுங்க ரெண்fடு பேரையும் கும்ப்ட்டுகிட்டா.... ஏன் அவருக்கு அனுபூதி கெடைக்காது?!
அதான் இந்த மொதப் பாட்டு!

ரொம்ப இளுத்துட்டேன்ல!?
மொதப் பாட்டுன்றதால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டேன்! இனிமே அடக்கி வாசிக்கறேன்,... இன்னா?' என கபடமின்றிச் சிரித்தான் மயிலை மன்னார்!
'நீ சொல்லு மன்னார்!' என உற்சாகப் படுத்தினேன் நான்!
****************
[தொடரும்]

Sunday, January 16, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்! -1

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

எனது கேள்விகளுக்கெல்லாம் விடையாக வந்து உதவும் எனது "நண்பன்"
மயிலை மன்னார், நாயர், சாம்பு சாஸ்திரிகள் பங்குபெறும் குறிப்புகளை இந்த
இழையில் அளிக்க நினைக்கிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!

[மயிலை மன்னார் பற்றிய ஒரு சிறு குறிப்பு! என்னுடைய பால்ய சிநேகிதன். தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் நல்ல நட்பு மலர்ந்து, அது இன்றும் தொடர்கிறது! மயிலாப்பூர் பகுதியில் ஒரு பேட்டை ரவுடியாக இவன் காலம் திசை மாறிப் போனாலும், எங்களது நட்பு இன்னமும் அப்படியேதான்
இருக்கிறது! பார்ப்பதற்கு முரடன் போல இருந்தாலும், மிகப் பெரிய விஷயங்களையும் அநாயசமாகச் சொல்லிவிடுவான்! நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடம் [எப்போவாவதுதான்!] மயிலை வடக்கு மாட வீதியில் இருக்கும் நாயர் டீக்கடை! நாயரின் மசால் வடையும் டீயும்
உலகிலேயே சிறந்த இரண்டு என நான் அடித்துக் கூறுவேன்! சாம்பு சாஸ்திரிகள் என்னும் மிகப் பெரிய வேத பண்டிதர் ஒருவர் இந்த மன்னாரின் பேச்சுக்கு அடிமை! இவனுக்கும் அவர் மீது நல்ல மதிப்பு உண்டு. இந்தச் சிறு குறிப்புடன் மேலே பயணிப்போம்! வணக்கம்.]

"கந்தர் அநுபூதி" -- 1

வழக்கம் போலவே கலகலப்புக்குக் குறைவில்லாது மயிலாப்பூர் மாடவீதி நிறைந்திருந்தது!

'மன்னாரைப் பார்த்தியா?' எனக் கேட்டபடியே நாயர் கடைக்குள் நுழைந்தேன்.

'ஞான் கண்டிட்டில்லா. எந்து சமாச்சாரம்?' என அக்கறையுடன் கேட்டான் நாயர்.

'ரெண்டு மசால்வடை, ஒரு டீ கொண்டா. சொல்றேன்' எனச் சொல்லிலிவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன்.

சற்று நேரத்தில் சூடான மசால்வடை, டீ சகிதமாய் என் முன் வந்து, டேபிளில் வைத்துவிட்டு, 'இப்ப பறையு!' என்றான்.

'ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான்' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு ஆட்டோவில் வந்து அலட்சியமாக இறங்கி உள்ளே வந்தான் மயிலை மன்னார்! என்னைப் பார்த்ததும் நேராக வந்தவன் என் முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.

'ம்ம்... இன்னா சமாச்சாரம்? சொல்லு!' என அமர்த்தலாகக் கேட்டான்.

ஒண்ணுமில்லை. பொங்கலும் அதுவுமா நல்ல நாளில் உன்னிடம் ஏதாவது கேட்கலாமே என வந்தேன். அதுக்காக நீதான் புதுசா ஒண்ணு சொல்லணும்' என்றேன்.

'இவ்ளோதானே! அல்லாம் நல்லபடியா நடக்கும்! கவலிய வுடு! எத்தத் தொடங்கினாலும் புள்ளையாரை வைச்சுத்தான் தொடங்கணும். அதுக்காப்பால, ஒனக்கு ரொம்பவும் இஸ்டமான முருகனைச் சொல்லணும்.

அதுனால, கந்தரனுபூதி பத்தி சொல்றேன் கேட்டுக்கோ. அருணகிரிநாதரு முருகனைக் கும்பிட்டு ஆருக்கும் கெடைக்காத ஒரு அற்புதமான உணர்வை அடைஞ்சாராம். அதுக்கு அனுபூதின்னு பேரு.

'அனு'ன்னா ஒரு விசயத்த உணர்றபோது உள்ளுக்குள்ள வர்ற ஒரு ஆனந்தம்.
'பூதி'ன்னா இந்தப் பஞ்சபூதத்த இன்னான்னு அறிஞ்சுகினு கெடைக்கற ஞானம்!
ஆகக்கூடி, 'அனுபூதி'ன்னா ஞானத்த உணர்றதுனால கெடைக்கற ஆனந்தம்னு சொல்லலாம்.

இதெல்லாம் தெரியலைன்னாலும் கூடப் பரவாயில்ல. இத்தப் படிச்சாலே, ஒனக்குள்ள ஒரு ஆனந்தம் பொறக்கும்! அதுக்காவ மட்டுமே இத்தப் படிச்சாலே ஒனக்கும் ஒரு தெளிவு கெடைக்கும். அதுனாலத்தான், இத்தச் சொல்லலாம்னு நெனைக்கறேன்! சரி, ஒங்கிட்ட அந்தக் குட்டிப் பொஸ்தவம்
இருக்குமே! அதுலேர்ந்து அந்த மொதப் பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

படித்தேன்!

திருச்செந்திலாதிபன் துணை
கந்தரநுபூதி - 1

'காப்பு'

நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்.

[ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.]

"எப்ப ஒனக்கு ஒரு கஸ்டம் வந்தாலும் நீ இன்னா பண்றே? ஒடனே 'முருகா ஒன்னிய வுட்டா கெதியில்ல எனக்கு! நீதான் காப்பாத்தணும்'ன்னு ஒரு சவுண்டு வுடறே! அவனும் இன்னா பண்றான்?
'நான் இருக்கக்கொள்ள ஒனக்கு எதுக்குரா பயம்?'னு அந்த ஆறுமுகசாமி ஆறுதலா வந்து ஒனக்கு ஒரு தெளிவைக் குடுக்கறாரு!

அந்த முருகன் மேல நம்ம அருணகிரிநாதரு பாட்டாலியே ஒரு மாலை கட்டறாரு. தானா அப்பிடியே வந்து வுளுந்த வார்த்தையால கட்டின மாலை! இந்த மாலையப் படிச்சா இன்னா ஆவும்னும் சொல்றாரு.

பலான பலான விசயத்தையெல்லாம் பார்த்துப் பார்த்துக் கல்லாயிப் போயிட்ட ஒன்னோட மனசு, அப்பிடியே ஒரு பாகு மாரி கொளைஞ்சு போறமாரி ஆயிருமாம்...இத்தப் படிச்சாலே..... அந்தமாரி ஒரு மாலை!

அப்பிடி எளுதின இந்தப் பாட்டுல்லாம் எப்ப ஒசந்ததா ஆயிப்போவும் தெரியுமா?
நாலு கையோட கூட, அஞ்சாவது கையா ஒரு தும்பிக்கையும் வைச்சுக்கினு ஆத்தங்கரையிலியும், அரசமரத்தடியிலியுமா குந்திக்கினு க்கீறாரே, அந்தப் புள்ளையாரோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினு தொடங்கற எந்தக் காரியமும் கெலிச்சிரும்! அதுனால, அவரோட காலடியுல போயி
இத்தை வைச்சு,'நீதான் இத்த நல்லபடியா ஆக்கித் தரணும்'னு தொடங்கறாரு. அதான், இதுக்கு 'காப்புச் செய்யுள்'னு பேரு.

இப்பவும் அப்பிடித்தானே இன்னைக்குன்னு பாத்து, சினிமா, பீச்சுன்னு அலையாம எங்கையுல வந்திருக்கே? ஒரு கொறைவும் வராது" என ஆதரவாய் என்னைத் தட்டிக் கொடுத்தான் மயிலை மன்னார்.

'கணபதி எல்லாம் தருவான்!' என்னும் புத்துணர்வோடு மேலும் கேட்கத் தயாரானேன் நான்!
************
[தொடரும்]
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
****************