Saturday, August 5, 2006

அ. அ. திருப்புகழ் -- 6 "புகரப் புங்கப்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 6

"புகரப் புங்கப் பகரக் குன்றில்"

மூவரும் அறியா முதன்மொழிப் பொருளாம் "ஓம்" எனும் பிரணவப்பொருளைத் தனக்கு உபதேசிக்க அருணையார் வேண்டும் அற்புதப் பாடல் இது.
இப்பாடலின் சந்தம் பாடி மகிழக்கூடிய ஒன்று. அருஞ்சொற்கள் நிறைந்த,.. ஆனால், எளிய பாடல்!

ராகம் -- ரஞ்சனி
தாளம் --ஆதி..திஸ்ர நடை

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ......தனதான

.......பாடல்........

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் பொலிவோனும்

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் புகல்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கத் திருமாலும்

திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
தெளிதற் கொன்றைத் தரவேணும்

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் துறைவோனே

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் றருள்வோனே

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே.

-------------------------------------------------------------------------------------

[பின் பார்த்து முன் பார்ப்போம்!]

"தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றித்
தட நல் கஞ்சத்து உறைவோனே"


வீடு பேறு பெற விழைவோர் வேண்டிடும் வித்தையொன்று
இதயமெனும் தாமரையின் உள்ளின்று ஒளிர்ந்திடும்
பரமான்வாவினைத் உணர்ந்து தெரிதலே !
தகராகாசம் எனும் அவ்வழகிய தாமரையின்
உயரிய சிகரத்தின் உச்சியில் உறைவோனே!

"தருணக் கொங்கைக் குறவிக்கு இன்பத்தையளித்து
அனபுற்று அருள்வோனே"


இளமுலை நாயகியாம் குற வள்ளிப் பிராட்டிக்கு
பேரின்பம் வழங்கி அன்புவைத்து அருள்பவனே !

"பகரப் பைம்பொன் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா"


பொன் போலும் ஒளி சிந்தும் உயரிய சிகரங்களை
ஆங்காரமாய்த் தான் கொண்ட கிரவுஞ்ச மலையினை
விட்ட வேலாயுதம் விடுத்து படபடவெனப் பொடிசெய்து
இப்பூமியில் விழுமாறு செய்திட்ட அதிதீரனே!

"பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே."


பவளம்போற் சிவந்து தூய்மையுடன் விளங்கும்
திருமதில்கள் சூழ்ந்து நிற்கும் திருச்செந்தூர்
எனும் பதியில் பெருமையுடன் எழுந்தருளி நிற்கின்ற
கந்தனெனும் பெருமை மிக்க தலைவனே!

"புகரப் புங்கப் பகரக் குன்றில்"

முறம் போலும் காதினிலும், அழகிய துதிக்கையிலும்,
புள்ளிகளைக் கொண்டு மற்றெல்லா உடல் முழுதும்
வெள்ளை நிறம் கொண்டு அழகுற மலைபோல் விளங்கும்
ஐராவதம் என்னும் யானை வாகனத்தின் மீதினிலும்,

"புயலில் தங்கிப் பொலிவோனும்"

மற்றொரு வாகனமாம் மேகத்தின் மேலும்
உலவுகின்ற விண்ணவர் கோமான் இந்திரனும்,

"பொருவில் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பில் புகல்வோனும்"


இணையற்றதும், அனைத்துக் கலைகட்கும் புகலிடமுமான
வேதத் தொகுதிகளின் சீர்மிகு பொருளை உணர்ந்து
சொல்ல வல்ல நான்முகனெனும் பிரமனும்,

"திகிரிச் செம் கட்செவியில் துஞ்ச
அத் திகிரிச் செங்கைத் திருமாலும்"


மலையினை ஒத்ததும், செம்மைப் பண்புகள் மிக்கதுமாய
ஆதி சேடன் எனும், கண்களே காதாய்க் கொள்ளும்
அரவத்தின் மேல் அறிதுயில் கொள்பவரும்,

"அத் திகிரிச் செங்கைத் திருமாலும்"

சக்கராயுதம் தாங்குவதால் சிவந்த கரமலருடைய
நாரயணன் என்னும் திருமாலும்,

"திரிய"

இவர்கள் அனைவரும் தமக்கிந்த உபதேசம்
கிடைத்திடவில்லையே என இங்கும் அங்குமாய்
அலைந்து திரிந்திடும் வேளையினில்,

"பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் தரவேணும்"


மனதினிலே உவகை பொங்கி, எண்ணமெனும் மாய அலைகள்
என் உள்ளத்தினின்று அகன்று செல்லுமாறும்
பேரின்பப் பொருளான சிவானுபூதியினை
யான் உட்கொண்டு, என் உள்ளம் தெளியும் வண்ணம்
அருள் மொழி ஒன்றினை அடியேன் எந்தனுக்கு
உபதேசித்து அருள வேணும்.
-------------------------------------------------------------------------------------

"அருஞ்சொற்பொருள்"

புகர = புள்ளிகளை உடைய
புங்க; துங்க = தூய்மையானது
பகர = அழகியது; ஒளி பொருந்தியது
பொரு இல் = இணையற்றது
சுருதிச் சங்கம் = வேதத் தொகுப்புகள்
திகிரி = மலை; சக்கரம்
கட்செவி = கண்+செவி= கண்ணையே காதாய் உடைய்து பாம்பு. பாம்புக்கு காதுகிடையாது. கண்களாலேயே உணரும் ஆதலின், கட்செவி எனப்படும்.
செங்கை = செம்+கை + சிவந்த கை
திரை அற்று = [எண்ண]அலைகள் நீங்கி
தகரம் = இதயத் தாமரை எனும் கோயில் = தகராலயம்; தகராகாசம் = தகரத் தடம் = எல்லையற்ற பரந்த ஆனந்த வெளி
கஞ்சம் = தாமரை
படி = பூமி
தொடு = விட்டு எறிந்த
புரிசை = மதில்
பெருமாளே = பெருமை மிக்கவரே
-------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!


********************************************************************

No comments: