"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 13 "அந்தகன் வருந்தினம்"
மஹா ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு, திருச்செந்தூர் பெருமை பாடும் ஒரு பாடல்.
"பாடல்"
அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடிச்
செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையு மவிழ்ந் தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் படுவேனோ
கொந்தவிழ் சரண் சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே.
-----------------------------------------------------------
"பொருள்"
[பின் பார்த்து முன் !]
"கொந்து அவிழ் சரண் சரண் சரண் எனக்
கும்பிடு புரந்தரன் பதி பெற"
சிவனாரை வணங்கித் தவமியற்றி
அவராலே பற்பல வரங்கள் பெற்று
எவராலும் வெல்லவொணா வீரங்கொண்டு
அவுணர் தலைவனாம் சூரபதுமன்
இந்திர லோகத்தைத் தாக்கவே
தந்திரமாய் இந்திரனும்
மனைவியுடன் தப்பியோடி
மேருமலைக் குகையொன்றிலெ
மறைந்து ஒளிந்திருக்க,
சூரனும் தன் மகனாம் பானுகோபனை
'சென்று சிறைபிடித்துக் கொண்டுவா' என ஏவ
மைந்தனும் தந்தை சொல் ஏற்று
இந்திரனைக் காணாது கோபமுற்று
இந்திரபுரியைத் தீக்கு உணவாக்கி
இந்திரன் மகனாம் சயந்தனையும்
மற்றுமுள்ள தேவரையும் சிறைப்பிடிக்க,
நகரிழந்த விண்னவர்கோனும் மனம்வருந்தி
நாயகனாம் கந்தவேளைத் தஞ்சமுற
அஞ்சேல் என அபயம் அளித்து கந்தவேளும்
வேல்விடுத்து சூரனை அழித்து தேவரைச்
சிறைமீட்டு பொன்னுலகு அளித்து அருளவும்,
"குஞ்சரி குயம் புயம் பெற"
தேவர்கோனின் யானையாம் ஐராவதம்
அன்புடன் வளர்த்த தேவயானையின்
மார்புத் தனங்கள் முருகனது
சீர்மிகு தோளில் இசைந்து பரவவும்,
"அரக்கரும் மாள, குன்று இடிய"
அரக்கர் குலம் மாளவும்
கிரௌஞ்சமலை பொடிபடவும்,
"அம் பொனின் திருவரைக் கிண்கிணி
கிணின்கிணின் கிணினென,
குண்டலம் அசைந்து இளம் குழைகளில் ப்ரபைவீச,
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கை கொஞ்சிட,
மணித் தண்டைகள் கலின்கலின் கலினென,"
அழகுறு பொன்னாலான கிண்கிணி என்னிடும்
எழில்மிகு இடுப்பினில் ஆடும் ஒலியும்,
இளமையாய செவிகளிலே குண்டலங்கள்
அசைவதினால் பேரொளி வீசிடவும்,
பாதச் சலங்கைகள் பல்வித ஓசையை
தந்தன தனந்தனந் தனவென எழுப்பவும்,
இரத்தினத்தால் செய்திட்ட மணித் தண்டைகள்
கலின்கலின் கலினென சுகமாய் ஒலிக்கவும்,
"திருவான சங்கரி மனம் குழைந்து
உருகமுத்தம் தர"
தனம் தரும் திருமகளும் சேர்ந்தமைந்த
இதம் தரும் உமையவளும் மனம் கனிந்து
அன்பு மிகக் கொண்டு முத்தம் தந்திடவும்,
"வரும் செழுந் தளர்நடைச் சந்ததி
சகம் தொழும் சரவணப் பெருமாளே."
மெல்ல அசைந்து தளர்நடை போட்டுவரும்
சிவனாரின் இளங்குமரனே!
இவுலகெலாம் உய்யும் பொருட்டும்
உன்னைத் தொழும் பொருட்டும்
சரவணப் பொய்கையினில் வெளிப்பட்ட
பெருமையிற் சிறந்த முருகோனே!
"அந்தகன் வரும் தினம் பிறகிட"
எனை நாடி, என் உயிர் பறிக்க
இயமன் வரும் நாளன்று எனைப் பார்த்து
குமரக்கடவுள் தெரிசனம் கண்டவன் இவன்
எனத் தெளிந்து, புறம் கொடுத்து ஓடவும்,
"சந்ததமும் வந்து கண்டு
அரிவையர்க்கு அன்பு உருகு சங்கதம் தவிர"
விலைமகளிர் இடம் நாடி நாளும் வந்து
அவர்தம் அழகினைக் கண்டு மயங்கி உருகி
அவரோடு இணங்கிடும் குணம் நீங்கவும்,
"முக் குணம் மாள, அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து,
இந்திரிய சஞ்சலங்களை அறுத்து"
சத்துவம், இராசசம், தாமசம் என்கின்ற
மூவகைக் குணங்களும் மாண்டு போகவும்,
அந்தியில் வருவது தூக்கம்
அப்போது நிகழ்வது மறப்பு
பகலில் வருவது விழிப்பு
உடன் நிகழ்வதோ நினைப்பு
அந்தி பகல் என்கின்ற,
மறப்பு நினைப்பு என்கின்ற,
கேவலம் சகலம் என்கின்ற,
இரு அவத்தைகளும் அழியவும்,
மெய்,வாய், கண், நாசி, செவி எனப்படும்
ஐம்புலனால் வருகின்ற துன்பமனைத்தையும்
அடியோடு அறுத்தெறிந்து ஒழிக்கவும்,
"அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி"
தாமரை மலரினையொத்த
திருவடிகளின் துதி பாடி,
"செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற"
செந்திலை உணர்தல் எங்ஙனம்?
அலைகள் வந்து ஓயும் இடமாதலின்
அலைவாய் எனப் பெயரும் செந்திலுக்குண்டு!
அந்தியும் பகலும் அனவரதமும்
மறப்பு நினைப்பெனும் அலைகள் நம்மை
வாட்டுவதெல்லாம் செந்தில் அலைவாயை
நினைத்திடவே ஒடுங்கிடுமாம்!
ஆலயத்தின் உட்சுற்று எப்போதும்
வட்டமாயோ சதுரமாயோ அமைந்திருக்கும்
செந்தில் கோவில் சுற்றோ ஓம் எனும்
பிரண்வத்தின் பால் விளங்கி நிற்கும்
தூண்டுகை விநாயகர் தொடங்கி
ஆனந்தவிலாசம் சென்று
வதனாரம்ப தீர்த்தம் அடைந்து
ஷன்முக விலாசம் வழியே நடந்து
செந்திலாண்டவனைத் தெரிசிக்க
சுற்றி வந்த சுற்று ஓம் எனும் வடிவமையும்!
செந்திலை நினைக்குங்கால்
ஈதெல்லாம் உணர்ந்து உணர்ந்து
உணர்வுறுதல் வேண்டும்!
"கந்தனை அறிந்து அறிந்து
அறிவினில் சென்று செருகும் தடம் தெளி தர"
சொந்தக் கடவுளாம் கந்தக் கடம்பனை
சிந்தையில் பற்றி அவன் பெருமை உணர்ந்து......
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
குறிஞ்சி என்றாலோ அழகென்னும் பொருள்படும்
குறிஞ்சிக்கடவுளாம் கந்தனும் அழகே
காந்தமென இழுப்பவன் கந்தன்
மனதிற்கு இனியவன் கந்தன்
இவ்வுலகில் நிலைத்து நிற்பவன் கந்தன்
இப்படி பலவாறும் கந்தனை மனதில்
அறிந்து அறிந்து அவ்வறிவின் மூலம்
அறவழிச் சென்று, தன் செயல் அழிந்து
அனைத்தும் அவனே அவனே என்பதை உணரும்
"என்றுநின் தெரிசனைப் படுவேனோ"
நின் தெரிசனம் என்று யான் பெறுவேன்?
---------------------------------------------------
"அருஞ்சொற்பொருள்"
அந்தகன் = இயமன், கூற்றுவன்
பிறகிட = புறமுதுகிட்டு ஓட
சந்ததமும் = எப்போதும்
அரிவையர் = பொது மாதர்
சங்கதம் = நட்பு
அம்புயம் = தாமரை [அம்புஜம்]
கொந்து அவிழ் சரண் = பூங்கொத்துகள் மலர்ந்திருக்கும் திருவடிகள்
புரந்தரன் = இந்திரன்
குஞ்சரி = ஐராவதம் எனும் தேவ யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானை
குயம் = மார்பகங்கல்
புயம் = தோள்கள்
அம் = அழகிய
குழை = செவி
திரு = இலக்குமி
சங்கரி = பார்வதி, சுகத்தைக் கொடுப்பவள்
சந்ததி = புதல்வன் [குலம் தழைக்கப் பிறந்தவன்]
சகம் = உலகம்
--------------------------------------------------------
வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் தாள் வாழ்க !!!
----------------------------------------------------------
Tuesday, October 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment