Wednesday, December 13, 2006

அ.அ.திருப்புகழ் -- 15 - " செகமாயை உற்று"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 15 " செகமாயை உற்று"

குழந்தை வரம் வேண்டும் என ஏங்குவோர் தவறாது படிக்க வேண்டிய ஒரு பாடல் இது!

சுவாமிமலை குருநாதன் மீது பல பாடல்கள் அருணையார் பாடியிருக்கிறார். இதுவே நான் பதியும் முதல் ஏரகப் பாடல்!

-------------------பாடல்-------------------------

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
********************************************************

------------------- பொருள் ----------------------

[வழக்கம் போல் பின்பாதி பார்த்து முன் பார்க்கலாம்.]

"முகமாயம் இட்ட குறமாதினுக்கு முலைமேல் அணைக்க வரும் நீதா"

அழகுறு முகவசீகரம் கொண்ட
குறவள்ளிதனை அணைத்து
இகசுகம் அருளிட எண்ணியே
தினைப்புனம் வந்த நீதியரசே!

"முது மாமறைக்குள் ஒரு மா பொருட்கு
உள் மொழியே உரைத்த குருநாதா"

வேதநாயகனை அன்றொருநாள்
வேதத்தின் பொருள் கேட்க
ஓமெனத் துவங்கிய பிரமனை நிறுத்தி
பிரணவத்தின் பொருள் கேட்க,
தயங்கிய பிரமனை உதைத்து,
தலையில் குட்டி, சிறையில் தள்ள,
தடுத்துக் கேட்ட தந்தை சிவனாரை
பொருளுரைக்க துணிந்து கேட்டு
அவரறியாப் பிரணவப் பொருளை
பணிந்து நின்ற சிவனாரின் காதில்
ஓம எனும் சொல்லுக்குப்

பொருளுரைத்த என் குருநாதா!

"தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே"

கடவுளர்க்கு அளித்திட்ட
சிரமங்கள் ஏதுமின்றி,
ஒருவிதத் தடையுமின்றி
அடியவனான எனக்கு
தங்கத் திருவடி தரிசனம்
காட்டி அருளிச் செய்த
ஏரகம் எனும் சுவாமிமலையில்
விருப்புடன் வீற்றிருக்கும்
திருமுருகப் பெருமானே!

"தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேல் எடுத்த பெருமாளே"

சூரனை மாய்த்திட அருள் கொண்டு
வீரனாம் மகனுக்கு சக்திவேலை
தாயவளும் வழங்கிடவே,
காவிரிக்கு வடபுலத்தில்
ஏரகமெனும் திருத்தலத்தில்
போர்புரிய ஆயத்தமாகி
வீரவேலைத் தாங்கிய
பெருமைக்கு உரியவரே!

"செகமாயை உற்று, என் அக வாழ்வில் வைத்த,
திருமாது கெர்ப்பம், உடல் ஊறித்,
தெசமாதம் முற்றி, வடிவாய் நிலத்தில்
திரம் ஆய் அளித்த, பொருளாகி,"


உலகெனும் மாயையில் சிக்குண்டு
இல்லறமெனும் கட்டில் அகப்பட்டு
அவளுடன் உறவாடி அவள் கருவுறவும்
பத்து மாதம் நிறைவாய்ச் சுமந்து
குறையா அழகுடன் புவியில் உதித்த
மகவு போல பெருமானே நீவிரும்
எம் குலத்தில் அருளிச் செய்து,

"மக அவாவின் உச்சி, விழி, ஆநநத்தில்,
மலைநேர் புயத்தில் உறவாடி,
மடிமீது அடுத்து விளையாடி"

தேவரீரே எனக்கு உதிக்க
அவா மிகுதியினால் நானும்
குழந்தைப் பாசம் மிகுந்திடவே
கண்களில் எடுத்து ஒத்தியும்,
முகத்தோடு முகம் சேர்த்தும்,
மலை போலும் புயங்களில்
உம்மைத் தவழவிட்டும்,
என் மடி மீது அமர்ந்து
விளையாடி மகிழ்ந்தும்,

"நித்தம் மணிவாயின் முத்தி தரவேணும்!"

ஒவ்வொரு நாளிலும்
உம் மணிவாயினால்
எனக்கு முத்தம் தந்து
அருளிடல் வேண்டும்!
---------------------------------------------------

---------அருஞ்சொற்பொருள்---------------


தெச மாதம் = பத்து மாதங்கள்
திரம் ஆய் = சிறந்த குழந்தை
ஆநநத்தில் = முகத்தோடு முகத்தில் [அநம் என்றால் முகம்][அநம்+அநம்=ஆநநம்]
முத்தி = முத்தம்
முக மாயம் = முக வசீகரம்
முது மா மறை = ஆதி வேதம்
ஒரு மா பொருட்குள் மொழி = ஓம் என்னும் பிரணவம்
தகையாது = தடையின்றி
ஏரகம் = சுவாமி மலை
பாரிசம் = பக்கம் [side]
சமர் = போர்
--------------------------------------------------


வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!
---------------------------------------------------

No comments: