அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"
'ஆன்மீக ஊற்று", "அனைவரின் செல்லப்பிள்ளை" "அரங்கனின் புகழ்பாடும் அரும்பெரும் தொண்டர்" "என்னரும் நண்பர் " திரு.ரவி கண்ணபிரான்" என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கேட்ட பாடலை இங்கு இடுவதில் பெருமகிழ்சி அடைகிறேன்.
***************************************************************************************
------------- பாடல் ------------------
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
*************************************************
................பொருள்...................
[பின் பார்த்து முன்]
"ஆதி அயன் ஒடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகையுறு சிறைமீளா"
கொடுஞ்சூரன் கெடுமதியால்
மதிகெட்டு மனமயங்கி
அடுசெயலால் ஆதியாம்
பிரமன்முதல் அமரர்யாவரையும்
கொடுஞ்சிறை அடைத்து
சுடுமொழி பேசி இழித்து
கடுஞ்சொற்களால் பலவாறிகழ்ந்து
மிகவும் வாட்டி உடல் வருத்தி
நடுங்கச் செய்து அவர் பணி மாற்றி
வருந்திடும் துயர் மாற்ற
திருவுளம் கொண்டு வேற்படையேந்தி
தேவர்தம் சிறை மீட்க
"ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே"
பொன்மலையாம் மேருவிற்கு
நிகரான ஆடுகின்ற
பொன்மயிலின் மீதமர்ந்து
சூரனுடன் போர் புரிந்து
விண்ணவரைச் சிறைமீட்டு
அமரர் புடை சூழ
மண்ணதிர விண்ணதிர
என்னவரும் மனமகிழ
தும்பிக்கையான் தம்பியும்
மயில்மீதில் அமர்ந்துவர
"சூத மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனில் உறைவோனே"
மாமரங்கள் அடர்ந்திருக்கும்
சோலைவனம் சூழ்ந்திருக்கும்
சுவாமிமலை தனில் வாழும்
என் குருநாதனே!
"சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வல பெருமாளே."
மாயப்போர் புரிந்து
நீலக்கடலுள் ஒளிந்துகொண்ட
சூரனை வெளிக்கொணர
வேலெடுத்து வீசிக்காட்டி
கடல் வற்றச் செய்து
சூரன் உடல் இருகூறுபட
அசுரனைப் பிளந்து
அருளுடன் ஆட்கொண்ட
பெருமைமிகு வேலவனே!
"பாதி மதிநதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா"
தான் பெற்ற மகளிரை
மணம் கொண்ட சந்திரன்
ரோஹிணியை மட்டும்
தன்னோடு சேர்த்து
மற்றவரைத் தள்ளியதால்
மனம் கொதித்த தந்தையாம்
தக்கன் அளித்த சாபத்தால்
ஒளிகுன்றி, மதி குன்றி
நிலவனும் தான் தேய
வேறெங்கும் அலைந்தும்
வழிகாணா மனத்தினனாய்
கருணைக்கடலாம் சிவனைநாட
குற்றம் தள்ளி குணம் நாடும்
காருண்ய மூர்த்தியும்
குறைமதியைப் பிறைநுதலாய்
தன்தலையில் சூடிக் காத்த,
தேவலோகம் விட்டுச்செல்லும்
தாபத்தால் கோபம்கொண்டு
உலகினை அழிக்க உக்கிரமாய்ச்
சீறிப் புறப்பட்ட கங்கையவள்
செருக்கடக்க, உலகுய்ய
கருணைத்திருவுளம் கொண்டு
தன்சடையில் தான் தாங்கி
தணிவோடு தண்ணீர்தந்த,
அன்புருவாம் சிவனாரின்
திருநுதற்கண்ணினின்று
உலகோரின் துயர்துடைக்க
தேவர்களைக் காத்திடவே
ஈசனே தன்னைத் தானளித்த
சங்கரன்குமாரனே! குமரேசனே!
"பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா"
குறமகள் வள்ளியைக்
கடிமணம் புரியத்
திருவுளம் கொண்டு
அவருடன் விளையாட,
வேங்கை மரமாய்
வேடனாய், விருத்தனாய்
வம்புகள் பலசெய்து
வள்ளியின் கோபம் தூண்டி
அவர்தம் கனிமொழிகேட்க
கைகால்களைப் பிடித்து
கெஞ்சிக் கொஞ்சிய
அழகிய மணவாளனே!
"காதும் ஒருவிழி காகம் உற அருள்
மாயன் அரிதிரு மருகோனே"
கானகம் சென்றிட்ட இராமன்
ஓர்நாள் கண்ணசந்து மைதிலியின்
மடிமீது தலைவைத்து துயிலுகையில்
சீதையைக் கண்டு மோகித்து
இந்திரன் மகனாம் சயந்தனென்பான்
காகம் வடிவெடுத்து காரிகையின்
தனங்களைக் குத்த, ரத்தம் தெறிக்க
இராமனின் முகத்தில் அது பட்டு,
கண்விழித்த அண்ணலும் காரணம் கேட்க
காகத்தைக் காட்டி காரிகையும் சொல்லிவிட
கோபம்கொண்டு ஒரு புல்லெடுத்து
"காதும்" கொல்லுக இதனையென
காகுத்தன் ஏவிவிட, பயங்கொண்ட
காகமதும் கடிவேகம் கொண்டு
மூவுலகும் சுற்றிவர, எவரும் உதவாமல்
சிவனைத் தஞ்சமடையச், சிவனாரும்,
'குற்றம் செய்தவிடம் தேடி கும்பிட்டுக் கேள்!
குணமுடையோன் குறைகளைவான்' எனவுரைக்க
சீதாபதியின் தாள்பணிந்து காகம் வேண்ட,
'தஞ்சமென வந்தவரை தட்டுவது பண்பல்ல
பிறன்மனை நோக்கிய குற்றத்தால்
ஒரு கண்ணை பாணம் துளைக்கும்
உயிர் குடிக்காமல் உனைப் பிழைக்கும்'
எனவருளிய மாயனின் மருகோனே!
"காலன் எனை அணுகாமல் உனது
இருகாலில் வழிபட அருள்வாயே"
தக்கன் சாபம் துரத்திய
சந்திரனைப் போலவும்
பிரம்மாஸ்திரம் துரத்திய
காகம் போலவும்
காலன் எனைத் துரத்தும்
கோலம் கண்டிங்கு
கருணை என்மீது கொண்டு
கங்கையைத் தலைமேல்
கொண்டது போலவே
பிறைதனை நுதல்மேல்
அணிந்தது போலவே
காகத்துக்கும் கருணை
காட்டியது போலவே
என்னையும் உன்னிருகாலில்
சேர்த்திங்கு அருள்வாயே!
************************************************
....அருஞ்சொற்பொருள்.......
காதும் -- கொல்லும்
சூதம் -- மாமரம்
வாரி -- கடல்
சுவறிட -- வற்றிட
வல -- வலிமையுடைய
***********************************************
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!
Friday, June 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment