Friday, March 21, 2008

"அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"

"அ.அ. திருப்புகழ்" -- 26 "விலைக்கு மேனியில்"

சமீபத்தில் சிவராத்திரி குறித்து ஒரு பதிவு, 'சிவமாய் நிறைவாய்' என எழுதினேன். அந்த சமயம் எனது இனிய நண்பர் திரு. குமரன் மூலம் ஒரு ஒளிப்படம் கிடைத்தது. இலங்கையில் இருக்கும் திருக்கோணமலையின் இயற்கை எழில் கொஞ்சும் ஆலயக் காட்சிகள் அடங்கிய தொகுப்பு அது. அதில் வந்த ஒரு காட்சி என் கருத்தில் பதிந்தது. அருணையார் எழுதிய திருப்புகழ் ஒன்று போர்டில் எழுதப்பட்டுப் பதிக்கப் பட்டிருந்தது. அந்த புகழ் என்ன எனப் பார்க்கும் ஆவலையும் தூண்டியது. மிக அற்புதமான பொருள் அடங்கிய பாடல் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்ற, எல்லாம் வல்ல முருகனை வேண்டிக் கேட்கும் பாடலை, பங்குனி உத்திர நன்நாளில் இங்கு இடுவதில் மகிழ்கிறேன். அனைவரும் ஓதி எண்ணியது எண்ணியாங்கு எய்த என் முருகனை இறைஞ்சுகிறேன்.

************** பாடல் **************

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே.
******************************************************************************************


சற்று பெரிய பாடல்! சந்தத்துக்காக சில குறில் நெடில் மாற்றங்கள் இப்பாடலில் வருவது ஒரு புதுமை!வழக்கம் போல பின் பார்த்து முன்![நீட்டி முழக்காமல்]!!

**************** பொருள் *****************

"மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே"



மலைக்கு நாயக! சிவகாமி நாயகர்
திருக்கு மாரனே! முகத்து ஆறு தேசிக!
வடிப்ப மாது ஒரு குறப்பாவையாள் மகிழ்தரு வேளே!

மலையிருக்குமிடமெல்லாம் தானிருக்கும்
இடமெனக் கொண்டு தலைவனாய்த் திகழ்பவரே!
சிவன் உமை எனும் பேரிறையின் செல்வக்குமரனே!
கண்ணினின்று பொறிவிட்டு ஆறு பாலனாய்
ஆற்றினில் தவழ்ந்து பொய்கையடைந்து
ஆறு மாதர் முலைப்பாலுண்டாலும்
மாறுபாகம் கொண்ட உமையவளின் அணைப்பினால்
ஆறுமுகமாய் ஆனவனே!
அழகினுக்கே அழகுசெய்யும் வள்ளிக்குறமாதின்
ஒப்பற்ற மனவழகும் பொருந்திய தன்மையில்
உள்ளம் பறிகொடுத்து உவப்பாய் விரும்பும் தலைவனே!


"வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே"



வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்திய மாமுநி இடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோலமாய் வரு முருகோனே

தவத்திரு யோகிகள் வசிட்டர், காசிபமுனிவர்,
பெருமைமிகு அகத்தியர்,, இடைக்காடர், நக்கீரர்
இவர் அனைவரும் இயற்றிய பாடல்களிலெல்லாம்
தனிப்பெரும் பொருளாக இருக்கும் முருகனே!

"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே"

நிலைக்கும் நான்மறை மகத்து ஆன பூசுரர்
திருக்கொணாமலை தலத்து ஆர் கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே!


என்றுமே நிலைத்து நிற்கின்ற நான்மறைகளை அன்புடன் ஓதிவரும்
பெருமைமிகு அந்தணர்கள் வாழுகின்ற திருக்கோணமலை என்கின்ற
திருத்தலத்தில் ஓங்கிநிற்கும் கோபுர வாயிலினுள் அமைந்திருக்கும்
'கிளிப்பாடுபூதி' என்னும் நிலையினுள் எழுந்தருளி இருப்போனே!

" நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி பெருமாளே."

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே
எடுத்த வேல்கொடு பொடி தூளது ஆ எறி
நினைத்த காரியம் அநுகூலமே புரி பெருமாளே.


பிறவிகள் ஏழென்று சொல்லிடுவார்
ஒவ்வொன்றும் ஓர் கடலென்றும் சொல்லிடுவார்
வேல் விடுத்து கடல் மாய்த்து
சூர் என்னும் அசுரனையும்
சூறையாடிக் கொன்ற வேலன்
பிறவிப் பெருங்கடலையினையும்
தூளாகிப் போகுமாறு செய்யவல்ல
பெருமைபெற்ற முருகோனே!
நீயென்றன் மனத்தினில் எண்ணிய
கருமங்கள் யாவினையும் நிறைவேற்றித்
தரவல்லவன் எனப் பணிகின்றேன்!


"விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ மயலூறி"

விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை
தரித்த ஆடையும் அணிப்பூணும் ஆகவே
மினுக்கு மாதர்கள் இடக்காமம் மூழ்கியே மயல் ஊறி


தன் உடலையே விலைக்கு விற்கின்ற விலைமாதர்கள்
அதனை மிகவும் அழகூட்டவென மாலைகளும்
மேகலைஎன்கின்ற இடுப்பிலணியும் ஆபரணமும்
அழகிய ஆடைகளும், இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களும்
அழகுற அணிந்து மினுக்குகின்ற அவரிடத்தே ஆசைவைத்து
காமமெனும் கடலினில் மூழ்கி அந்த மயக்கத்தில் மிகவுமே திளைத்து


"மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்"

மிகுத்த காமியன் என, பார் உளோர் எதிர்
நகைக்கவே, உடல் எடுத்தே, வியாகுல
வெறுப்பது ஆகியே, உழைத்தே விடாய்படு கொடியேனை


காமத்தில் மிகவுமே விருப்பமுள்ளவன் இவன் என
உலகத்தில் உள்ளோர் என்னைப் பார்த்து சிரிக்குமாறு
ஒரு உடலை எடுத்து, அதனால் துன்பமடைந்து
அந்த உடல் மீதே வெறுப்புற்று, மீண்டும் மீண்டும்
இந்த உலக வாழ்விலேயே உழன்று [காதல்]
தாகம் அடைகின்ற கொடியவனாகிய என்னை


"கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைஇத்தேற வேசெயு மொருவாழ்வே"

கலக்கமாகவே மலக் கூடிலே மிகு
பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை
கவிக்குளாய் சொ[ல்]லி கடைத்தேறவே செ[ய்]யும் ஒரு வாழ்வே!

என்னறிவு கலக்கமுற்றுப் போகும்படி செய்து
ஒன்பது வகையான கூடுகள் வழியே
விளைகின்ற மலங்களை வெளிக்கிடும்
இந்த உடலாகிய கூட்டுடன் சேர்ந்து
பலவிதமான நோய்களுக்கு ஆளாகி
இவைகளினால் நான் தவிக்காமல்
உன்னுடைய புகழினைப் போற்றுகின்ற
தமிழ்க்கவிதைகளைச் சொல்லி
எனது ஆன்மா இவ்வுடற் கூட்டினின்று
கடைத்தேறும்படி செய்யவல்ல
நிகரற்ற வாழ்வாக அமைந்த பொருளே!

"கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்"

கதிக்கு நாதன் நீ உனைத் தேடியே புகழ்
உரைக்கும் நாயேனை அருட்பார்வையாகவே
கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும்!

என் ஜென்மம் கடைத்தேற இருக்கின்ற ஒரே தலைவன் நீயே!
நினைப் போற்றி புகழ் பாடுகின்ற நாய் போன்றவன் யான்!
நினது அருட்பார்வையை என்மீது செலுத்தி
நினது திருவடிகளில் என்னையும் ஏற்றுக்கொண்டு
இவ்வுலகிலேயே மிகவும் சிறந்ததான
தாயின் கருணையினை ஒத்த அருளை
எனக்கு நீ தந்தருளவேண்டும் முருகப்பெருமானே!
******************************************************


திருக்கோணமலை இலங்கையில் உள்ள ஒரு சிவத்தலம். தக்ஷிண கைலாயம் என வழங்கப்படும் மூன்று தலங்களில் ஒன்று. மற்ற இரு தலங்கள், திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி.
கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோபுரநிலையில் உள்ள ஓரிடத்தின் பெயர்.
**************************************************************


வேலும் மயிலும் வாழ்க !
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க !!!
*******************************