Wednesday, December 13, 2006

அ.அ.திருப்புகழ் -- 15 - " செகமாயை உற்று"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 15 " செகமாயை உற்று"

குழந்தை வரம் வேண்டும் என ஏங்குவோர் தவறாது படிக்க வேண்டிய ஒரு பாடல் இது!

சுவாமிமலை குருநாதன் மீது பல பாடல்கள் அருணையார் பாடியிருக்கிறார். இதுவே நான் பதியும் முதல் ஏரகப் பாடல்!

-------------------பாடல்-------------------------

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
********************************************************

------------------- பொருள் ----------------------

[வழக்கம் போல் பின்பாதி பார்த்து முன் பார்க்கலாம்.]

"முகமாயம் இட்ட குறமாதினுக்கு முலைமேல் அணைக்க வரும் நீதா"

அழகுறு முகவசீகரம் கொண்ட
குறவள்ளிதனை அணைத்து
இகசுகம் அருளிட எண்ணியே
தினைப்புனம் வந்த நீதியரசே!

"முது மாமறைக்குள் ஒரு மா பொருட்கு
உள் மொழியே உரைத்த குருநாதா"

வேதநாயகனை அன்றொருநாள்
வேதத்தின் பொருள் கேட்க
ஓமெனத் துவங்கிய பிரமனை நிறுத்தி
பிரணவத்தின் பொருள் கேட்க,
தயங்கிய பிரமனை உதைத்து,
தலையில் குட்டி, சிறையில் தள்ள,
தடுத்துக் கேட்ட தந்தை சிவனாரை
பொருளுரைக்க துணிந்து கேட்டு
அவரறியாப் பிரணவப் பொருளை
பணிந்து நின்ற சிவனாரின் காதில்
ஓம எனும் சொல்லுக்குப்

பொருளுரைத்த என் குருநாதா!

"தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே"

கடவுளர்க்கு அளித்திட்ட
சிரமங்கள் ஏதுமின்றி,
ஒருவிதத் தடையுமின்றி
அடியவனான எனக்கு
தங்கத் திருவடி தரிசனம்
காட்டி அருளிச் செய்த
ஏரகம் எனும் சுவாமிமலையில்
விருப்புடன் வீற்றிருக்கும்
திருமுருகப் பெருமானே!

"தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேல் எடுத்த பெருமாளே"

சூரனை மாய்த்திட அருள் கொண்டு
வீரனாம் மகனுக்கு சக்திவேலை
தாயவளும் வழங்கிடவே,
காவிரிக்கு வடபுலத்தில்
ஏரகமெனும் திருத்தலத்தில்
போர்புரிய ஆயத்தமாகி
வீரவேலைத் தாங்கிய
பெருமைக்கு உரியவரே!

"செகமாயை உற்று, என் அக வாழ்வில் வைத்த,
திருமாது கெர்ப்பம், உடல் ஊறித்,
தெசமாதம் முற்றி, வடிவாய் நிலத்தில்
திரம் ஆய் அளித்த, பொருளாகி,"


உலகெனும் மாயையில் சிக்குண்டு
இல்லறமெனும் கட்டில் அகப்பட்டு
அவளுடன் உறவாடி அவள் கருவுறவும்
பத்து மாதம் நிறைவாய்ச் சுமந்து
குறையா அழகுடன் புவியில் உதித்த
மகவு போல பெருமானே நீவிரும்
எம் குலத்தில் அருளிச் செய்து,

"மக அவாவின் உச்சி, விழி, ஆநநத்தில்,
மலைநேர் புயத்தில் உறவாடி,
மடிமீது அடுத்து விளையாடி"

தேவரீரே எனக்கு உதிக்க
அவா மிகுதியினால் நானும்
குழந்தைப் பாசம் மிகுந்திடவே
கண்களில் எடுத்து ஒத்தியும்,
முகத்தோடு முகம் சேர்த்தும்,
மலை போலும் புயங்களில்
உம்மைத் தவழவிட்டும்,
என் மடி மீது அமர்ந்து
விளையாடி மகிழ்ந்தும்,

"நித்தம் மணிவாயின் முத்தி தரவேணும்!"

ஒவ்வொரு நாளிலும்
உம் மணிவாயினால்
எனக்கு முத்தம் தந்து
அருளிடல் வேண்டும்!
---------------------------------------------------

---------அருஞ்சொற்பொருள்---------------


தெச மாதம் = பத்து மாதங்கள்
திரம் ஆய் = சிறந்த குழந்தை
ஆநநத்தில் = முகத்தோடு முகத்தில் [அநம் என்றால் முகம்][அநம்+அநம்=ஆநநம்]
முத்தி = முத்தம்
முக மாயம் = முக வசீகரம்
முது மா மறை = ஆதி வேதம்
ஒரு மா பொருட்குள் மொழி = ஓம் என்னும் பிரணவம்
தகையாது = தடையின்றி
ஏரகம் = சுவாமி மலை
பாரிசம் = பக்கம் [side]
சமர் = போர்
--------------------------------------------------


வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!
---------------------------------------------------

Thursday, November 30, 2006

அ.அ.திருப்புகழ் -- 14 - "திருமகள் உலாவும்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 14 - "திருமகள் உலாவும்"

முருகப்பெருமானின் எட்டுவிதக் குணங்களைக் கூறும் அருமையான பாடல் இது.
என்னை மிகவும் கவர்ந்த இப்பாடலில் அக்கருத்தினை எவ்வளவு அழகுறச் சொல்கிறார் பாருங்கள்!
இசைத்துப் பாடிக் கேட்பதற்கும் மிக இனிமையான பாடல்.

அதுவும் சித்ராவின் தேன்குரலில் இப்பாட்டினைக் கேட்கணும்!

வலையேற்ற முயற்சிக்கிறேன், தெரிந்தவர் உதவி கொண்டு.

.................பாடல்.....................

தனதனதந்தன தனதனதந்தன
தனதனதந்தன தனதான

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் --பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் --பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் --பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் --பெருமாள்காண்

அருவரைகள் நீறு பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் --பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் --பெருமாள்காண்

இருவினையி லாத தருவினை விடாத
இமையவர்கு லேசப் --பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் --பெருமாளே.

............................................................

.................பொருள்................


இதற்கான பொருள் மிகவும் எளிது!

"திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள் காண்"

காக்கும் கடவுளாம் பரந்தாமன்
காப்பதெல்லாம் யார்துணை கொண்டு?
வீரமிகு தோள்களில் வீற்றிருக்கும்
வீரலக்ஷ்மியின் வீரியத்தாலன்றோ!


முரனென்னும் அசுரனை அழித்து
முராரியெனப் பெயர்பெற்றதுவும்
இன்னுமிந்த உலகினைக் காப்பதுவும்
அவள் அளிக்கும் புயவலிமையாலன்றோ!

இவ்விருவர் மருகரென பேர்பெற்று விளங்கிடும்
எம்பெருமான் இவனெனவே அறிந்திடுவாய்!
அடியவர் மானம் காத்து அருளுவதால்
இவனே "மானமூர்த்தி" என உணர்ந்திடுவாய்!

"ஜெகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள் காண்"

மண்ணவரும் விண்ணவரும் மனமுருகிப் பாடுகின்ற
பண்ணிசைக்கும் பாடல்களின் இன்னிசையைக் கேட்டுணரும்
என்னருமைக் கந்தன்பிரான் இவனென்றே தெளிவாய் மனமே!
அண்ணலிவன் "கானமூர்த்தி" என உணர்வாய் மனமே!

"மருவும் அடியார்கள் மனதில் விளையாடும்
மரகத மயூரப் பெருமாள் காண்"


சிறுபிள்ளைக் குமரனவன்
சிரித்தாட இடம் வேண்டும்!
இரவும் பகலும் அவனை எண்ணி
உருகும் அடியார்கள் மனமே ஆடுகளம்!
பச்சைமயில் வாகனனும்
பரவசமாய் அதை நாடி
ஆடாமல் ஆடுகிறான்
அடியவரின் மனத்தினிலே!
அதை அறிந்து அவனொன்றே
"தியானமூர்த்தி" எனத் தெளிவாய்!

"மணிதரளம் வீசி அணி அருவி சூழ
மருவு "கதிர் காமப்" பெருமாள் காண்"

அவுணர்கோமானாம் சூரனை அழித்திடவே
சிவனார் கண்ணினின்று பிறந்திட்ட பாலனவன்
சீரலைவாய் கடந்து தென்னிலங்கை சென்றடைந்து
போர்க்கோலம் தாங்கி நின்று கோபாவேசமாய்
நின்றிட்ட புண்ணியத்தலம் கதிர்காமம்


பொங்கிவரும் மாணிக்கநதி நீரில் திரண்டுவரும்
இரத்தினமும் முத்துகளும் திருமுருகன் காலடியில்
அருவியங்கே பொழிந்துவரும் அழகான காட்சியுண்டு.
உருவமங்கு கிடையாது; திரையொன்றே வணங்கப்படும்
விண்ணுக்கும் மண்ணுக்கும் வானளாவி நிற்பவனை
"வானமூர்த்தி" என நீயும் வணங்கிடுவாய் மனமே!

"அருவரைகள் நீறுபட அசுரர் மாள
அமர் பொருத வீரப்பெருமாள் காண்"

அங்கிருந்து வேல்விடுத்து அசுரர் குலமழித்து
தீங்குசெய்த சூரனையும் மலைகளையும் பொடியாக்கி
வீரமிகு போர்செய்து அடியவர் துன்பமகற்றிய
தீரனிவனை "வீரமூர்த்தி" என பணிந்திடுவாய் நெஞ்சே!

"அரவு, பிறை, வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள் காண்"

தவமொன்றே தனிப்பயன் அளித்திடும்
சிவனெமக்கு வேண்டாமென்று ஆணவத்தால்
அபிசாரவேள்வி செய்து அழிக்கவல்ல பாம்புகளை
ஏவிவிட்ட முனிவர்களை முறியடித்து அரவங்களை
ஆபரணமாய் அணிதிட்டான் ஆலவாயழகன்.

தக்கன் சாபத்தால் கலையழிந்து உருக்குலைந்த
சந்திரனைக் காக்கவெண்ணி அஞ்சேலென்று
தன் தலையில் சூடிக்கொண்ட சந்திரமௌளி.

உலகத்தை அழிக்கவென உக்கிரமாய்ப் புறப்பட்ட
கங்கையின் சீற்றமடக்கி தன்சடையில் அதைத்தாங்கி
உலகுய்யச் செய்திட்ட உத்தமனாம் கங்காதரன்.

இத்தனையும் தான் கொண்டும்
அத்தலை பணிந்து வணங்க
பிரணவத்தின் பொருள் கேட்ட
தகப்பனுக்கே உபதேசித்த
குருநாதன் என்னப்பன்
சாமிநாதன் "ஞானமூர்த்தி"
என்றே வணங்கிடு நன்னெஞ்சே!

"இருவினை இலாத தருவினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்"

நல்வினை தீவினை என்னுமிரண்டும்
தமக்கென்று இல்லாமல், மனிதருக்கு
அவரவர் வினைக்கேற்ப பலனளிக்கும்
தேவர்களின் குலமழியாமல் காத்து
வாழ்வளித்த வள்ளலாம் குமரக்கடவுள்
"தியாகமூர்த்தி" என அல்லும் நினைத்திடுவாய்.

"இலகுசிலை வேடர் கொடியின் அதிபார
இருதன விநோதப் பெருமாளே."

பரம், அபரம் எனும் இருவித ஞானமுண்டு.

இவ்வுலக சிந்தனையில் இன்பமுடன் ஈடுபட்டு
செய்கருமம் செப்புடனே செய்து பரம் உணரலாம்.
செய்வதெல்லாம் அவன் செயலேயென்றுணர்ந்து
இறைவனிடம் பக்திவைத்து அபரம் அறியலாம்.

இவ்விரண்டும் தன்னகத்தே வைத்திருந்து
உலகனைத்தும் இன்புறவேயென்று இன்முகம் காட்டி
இன்பசக்தியாம் வள்ளியம்மையுடன் இனித்திருக்கும்
"போகமூர்த்தி"யாய் விளங்கும் முருகனை பணிந்திடுவாய்.
.............................................................

இவ்வண்ணம் இப்பாடலில் எட்டுமூர்த்தியும் காட்டி
நல்வண்ணம் நம்வாழ்வில் நாம் உய்ய நமக்களித்து
பொன்வண்ணக் குமரனின் கோலமெல்லாம் காட்டிய
பண்வண்ணன் அருணையானின் பதம் பணிந்து போற்றுவோம்.
------------------------------------------------------------


அருஞ்சொற்பொருள்:

தரளம் == முத்து
அருவரைகள் == சிறந்த மலைகள்
அரவு == பாம்பு
பிறை == நிலவு
வாரி == நீர் [கங்கை]
விரவு சடை வேணி == [மேற்கூறிய மூன்றும்] கலந்து வாழ்கின்ற சடைமுடியை உடைய [சிவன்]
அமலர் == சிவன்
தருவினை == நமது வினையால் வரும் விளைவுகள்
இமையவர் == தேவர்
இலகு சிலை வேடர் == கையில் வில் தாங்கி நிற்கும் வேடர்

-----------------------------------------------------------------


வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க!

******************************************************************

Tuesday, October 24, 2006

"அ.அ. திருப்புகழ்" - 13 "அந்தகன் வருந்தினம்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 13 "அந்தகன் வருந்தினம்"

மஹா ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு, திருச்செந்தூர் பெருமை பாடும் ஒரு பாடல்.

"பாடல்"

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையு மவிழ்ந் தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் படுவேனோ

கொந்தவிழ் சரண் சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே.
-----------------------------------------------------------


"பொருள்"
[பின் பார்த்து முன் !]

"கொந்து அவிழ் சரண் சரண் சரண் எனக்
கும்பிடு புரந்தரன் பதி பெற"


சிவனாரை வணங்கித் தவமியற்றி
அவராலே பற்பல வரங்கள் பெற்று
எவராலும் வெல்லவொணா வீரங்கொண்டு
அவுணர் தலைவனாம் சூரபதுமன்
இந்திர லோகத்தைத் தாக்கவே

தந்திரமாய் இந்திரனும்
மனைவியுடன் தப்பியோடி
மேருமலைக் குகையொன்றிலெ
மறைந்து ஒளிந்திருக்க,

சூரனும் தன் மகனாம் பானுகோபனை
'சென்று சிறைபிடித்துக் கொண்டுவா' என ஏவ
மைந்தனும் தந்தை சொல் ஏற்று
இந்திரனைக் காணாது கோபமுற்று
இந்திரபுரியைத் தீக்கு உணவாக்கி
இந்திரன் மகனாம் சயந்தனையும்
மற்றுமுள்ள தேவரையும் சிறைப்பிடிக்க,

நகரிழந்த விண்னவர்கோனும் மனம்வருந்தி
நாயகனாம் கந்தவேளைத் தஞ்சமுற
அஞ்சேல் என அபயம் அளித்து கந்தவேளும்
வேல்விடுத்து சூரனை அழித்து தேவரைச்
சிறைமீட்டு பொன்னுலகு அளித்து அருளவும்,

"குஞ்சரி குயம் புயம் பெற"

தேவர்கோனின் யானையாம் ஐராவதம்
அன்புடன் வளர்த்த தேவயானையின்
மார்புத் தனங்கள் முருகனது
சீர்மிகு தோளில் இசைந்து பரவவும்,

"அரக்கரும் மாள, குன்று இடிய"

அரக்கர் குலம் மாளவும்
கிரௌஞ்சமலை பொடிபடவும்,

"அம் பொனின் திருவரைக் கிண்கிணி
கிணின்கிணின் கிணினென,
குண்டலம் அசைந்து இளம் குழைகளில் ப்ரபைவீச,
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கை கொஞ்சிட,
மணித் தண்டைகள் கலின்கலின் கலினென,"


அழகுறு பொன்னாலான கிண்கிணி என்னிடும்
எழில்மிகு இடுப்பினில் ஆடும் ஒலியும்,

இளமையாய செவிகளிலே குண்டலங்கள்
அசைவதினால் பேரொளி வீசிடவும்,

பாதச் சலங்கைகள் பல்வித ஓசையை
தந்தன தனந்தனந் தனவென எழுப்பவும்,

இரத்தினத்தால் செய்திட்ட மணித் தண்டைகள்
கலின்கலின் கலினென சுகமாய் ஒலிக்கவும்,

"திருவான சங்கரி மனம் குழைந்து
உருகமுத்தம் தர"

தனம் தரும் திருமகளும் சேர்ந்தமைந்த
இதம் தரும் உமையவளும் மனம் கனிந்து
அன்பு மிகக் கொண்டு முத்தம் தந்திடவும்,

"வரும் செழுந் தளர்நடைச் சந்ததி
சகம் தொழும் சரவணப் பெருமாளே."


மெல்ல அசைந்து தளர்நடை போட்டுவரும்
சிவனாரின் இளங்குமரனே!
இவுலகெலாம் உய்யும் பொருட்டும்
உன்னைத் தொழும் பொருட்டும்
சரவணப் பொய்கையினில் வெளிப்பட்ட
பெருமையிற் சிறந்த முருகோனே!

"அந்தகன் வரும் தினம் பிறகிட"

எனை நாடி, என் உயிர் பறிக்க
இயமன் வரும் நாளன்று எனைப் பார்த்து
குமரக்கடவுள் தெரிசனம் கண்டவன் இவன்
எனத் தெளிந்து, புறம் கொடுத்து ஓடவும்,

"சந்ததமும் வந்து கண்டு
அரிவையர்க்கு அன்பு உருகு சங்கதம் தவிர"


விலைமகளிர் இடம் நாடி நாளும் வந்து
அவர்தம் அழகினைக் கண்டு மயங்கி உருகி
அவரோடு இணங்கிடும் குணம் நீங்கவும்,

"முக் குணம் மாள, அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து,
இந்திரிய சஞ்சலங்களை அறுத்து"

சத்துவம், இராசசம், தாமசம் என்கின்ற
மூவகைக் குணங்களும் மாண்டு போகவும்,

அந்தியில் வருவது தூக்கம்
அப்போது நிகழ்வது மறப்பு
பகலில் வருவது விழிப்பு
உடன் நிகழ்வதோ நினைப்பு
அந்தி பகல் என்கின்ற,
மறப்பு நினைப்பு என்கின்ற,
கேவலம் சகலம் என்கின்ற,
இரு அவத்தைகளும் அழியவும்,

மெய்,வாய், கண், நாசி, செவி எனப்படும்
ஐம்புலனால் வருகின்ற துன்பமனைத்தையும்
அடியோடு அறுத்தெறிந்து ஒழிக்கவும்,

"அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி"

தாமரை மலரினையொத்த
திருவடிகளின் துதி பாடி,

"செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற"

செந்திலை உணர்தல் எங்ஙனம்?

அலைகள் வந்து ஓயும் இடமாதலின்
அலைவாய் எனப் பெயரும் செந்திலுக்குண்டு!

அந்தியும் பகலும் அனவரதமும்
மறப்பு நினைப்பெனும் அலைகள் நம்மை
வாட்டுவதெல்லாம் செந்தில் அலைவாயை
நினைத்திடவே ஒடுங்கிடுமாம்!

ஆலயத்தின் உட்சுற்று எப்போதும்
வட்டமாயோ சதுரமாயோ அமைந்திருக்கும்
செந்தில் கோவில் சுற்றோ ஓம் எனும்
பிரண்வத்தின் பால் விளங்கி நிற்கும்

தூண்டுகை விநாயகர் தொடங்கி
ஆனந்தவிலாசம் சென்று
வதனாரம்ப தீர்த்தம் அடைந்து
ஷன்முக விலாசம் வழியே நடந்து
செந்திலாண்டவனைத் தெரிசிக்க
சுற்றி வந்த சுற்று ஓம் எனும் வடிவமையும்!

செந்திலை நினைக்குங்கால்
ஈதெல்லாம் உணர்ந்து உணர்ந்து
உணர்வுறுதல் வேண்டும்!

"கந்தனை அறிந்து அறிந்து
அறிவினில் சென்று செருகும் தடம் தெளி தர"

சொந்தக் கடவுளாம் கந்தக் கடம்பனை
சிந்தையில் பற்றி அவன் பெருமை உணர்ந்து......

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
குறிஞ்சி என்றாலோ அழகென்னும் பொருள்படும்
குறிஞ்சிக்கடவுளாம் கந்தனும் அழகே
காந்தமென இழுப்பவன் கந்தன்
மனதிற்கு இனியவன் கந்தன்
இவ்வுலகில் நிலைத்து நிற்பவன் கந்தன்
இப்படி பலவாறும் கந்தனை மனதில்
அறிந்து அறிந்து அவ்வறிவின் மூலம்
அறவழிச் சென்று, தன் செயல் அழிந்து
அனைத்தும் அவனே அவனே என்பதை உணரும்

"என்றுநின் தெரிசனைப் படுவேனோ"

நின் தெரிசனம் என்று யான் பெறுவேன்?
---------------------------------------------------


"அருஞ்சொற்பொருள்"

அந்தகன் = இயமன், கூற்றுவன்
பிறகிட = புறமுதுகிட்டு ஓட
சந்ததமும் = எப்போதும்
அரிவையர் = பொது மாதர்
சங்கதம் = நட்பு
அம்புயம் = தாமரை [அம்புஜம்]
கொந்து அவிழ் சரண் = பூங்கொத்துகள் மலர்ந்திருக்கும் திருவடிகள்
புரந்தரன் = இந்திரன்
குஞ்சரி = ஐராவதம் எனும் தேவ யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானை
குயம் = மார்பகங்கல்
புயம் = தோள்கள்
அம் = அழகிய
குழை = செவி
திரு = இலக்குமி
சங்கரி = பார்வதி, சுகத்தைக் கொடுப்பவள்
சந்ததி = புதல்வன் [குலம் தழைக்கப் பிறந்தவன்]
சகம் = உலகம்
--------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் தாள் வாழ்க !!!

----------------------------------------------------------

Monday, October 16, 2006

"அ.அ. திருப்புகழ்" 12 -- "ஓராதொன்றைப்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 12 "ஓராதொன்றைப்"


"சூரனை அடர்ந்த வேலவரே! சிவபாலனே! செந்திலாதிபதியே! மாதர் வசப்படாது உமது புகழைப் பாட அருள் புரியும் !"

---------------------------பாடல்-----------------------------------
ஓரா தொன்றைப் பாரா தந்தத்

தோடே வந்திட் டுயிர் சோர
ஊடா நற்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் பெருமாளே.

---------------------------பொருள்:-----------------------------

[வழக்கம் போல் பின் பார்த்து முன்]

"தோரா வென்றி போரா"

போரினைப் புரிபவன்
வெற்றியும் காண்பான்
தோல்வியும் காணுவன்
குமரனுக்கோ வெற்றியன்றித்
தோல்வியே இல்லை- அங்ஙனம்
தோல்வியறியாது
வெற்றிப் போர் செய்பவரே !

"மன்றல் தோளா"

மன்றத்தில் வீசிவரும்
தென்றல் காற்றைப் போன்று
நறுமணம் வீசிடும்
தோள்களை உடையோரே !

"குன்றை தொளையாடீ"

கிரௌஞ்சமெனும் குன்றத்தை
வீரமுடன் வேலெடுத்து
தொளையாகிப் போகும்வண்ணம்
தீரமுடன் செய்தவரே!

"சூதாய் எண் திக்கு ஏயா"

நேரடியாய்ப் போர் செய்திட
துணிவு இன்றிச் சூதாக
மாயங்கள் பல காட்டி
திக்கெட்டிலும் பரவி நின்று

"வஞ்சச் சூர்மா அஞ்சப் பொரும்வேலா"

வஞ்சனையாய்ப் போர் செய்த
சூரனெனும் வலிய அரக்கன்
அஞ்சி நடுங்கும் வண்ணம்
வெஞ்சமர் செய்த வேலாயுதா

"சீர் ஆர் கொன்றைத் தார்மார்பு ஒன்றச்
சே ஏறு எந்தைக்கு இனியோனே"

சீராய்ப் பூத்து
சிறப்பாய் மலர்ந்திட்ட
ஆத்தி மலரினையும்
கொன்றை மலரினையும்
ஒன்றாகச் சேர்த்தங்கு
கட்டியதோர் மாலையினை
மார்பினில் பொருந்திட
அழகுறத் திகழ்ந்திடவே
திமிர்ந்த திமில் உடைய
நிமிர்ந்த எருதின் மேல்
உயர்ந்து எழுந்துவரும்
என்னப்பனாம் ஈசனுக்கு
மிகுதியும் இனியவரே!

"தேனே!
அன்பர்க்கே ஆம் இன்சொல் சேயே!
செந்தில் பெருமாளே!"

அடியவரின் சித்தத்தில்
தேன் போன்று தித்திக்க
நினைத்திடும் போதெல்லாம்
இனித்திடும் தெய்வமே!

அருள் புரிவதும் உன் செயலே
அவ்வருளைப் புரிகையிலே
வன்சொற்கள் பேசாமல்
இன்சொல்லால் எமை மகிழ்த்தும்
செம்மைப் பண்பு காட்டும்
இன்சொல் விசாகனே!

சிறப்பான தெய்வம் நாடி
ஆரும் அலையா வண்ணம்
ஆரலைவாயில் அமர்ந்திருக்கும்
பேரறிவாளன் திருவே!

"ஓராது ஒன்றைப் பாராது"

ஒன்றெனும் ஒருமொழியாம்
ஓம் எனும் பிரணவம்
அம்மொழியை அறிந்திடவோ
குருவருளின் துணை வேண்டும்
அறிந்த பின்னர் அம்மொழியை
ஆராய்ந்து பார்த்திடல் வேண்டும்
அத்தோடு நின்றிடாமல் அதையென்றும்
மனத்தினில் உன்னுதல் வேண்டும்

அவையெல்லாம் செய்யமாட்டார்
உண்மைப் பொருளை அறிய மாட்டார்

"அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர,
ஊடா,
நன்று அற்றாற் போல் நின்று,
எட்டா மால் தந்திட்டு,
உழல் மாதர்"

அளவற்ற அழகுடனே வந்து நின்று
ஆடவரின் உயிர் சோர்ந்து போகுமாறு
கூடாமல் கூடுவார் போல் பிணங்கியும்

விருப்புடன் அணைவார் போல் இணங்கியும்
தனக்கென ஒன்றும் இல்லாதார் போன்று

தம் நடிப்பைக் காட்டியே அங்கு நின்று
அளவிலா மயக்கத்தைத் தருகின்ற

விழியுருட்டி எனை மயக்கி
இங்குமங்குமாய்த் திரிகின்ற

விலை மக்கட் பெண்டிரின்

[மேற்கூறிய குணமிங்கே
விலைமகளிர்க்கே பொருந்துவதால்
மாதர் என்று சொன்ன போதும்
அது விலைமாதரையே குறிக்கும் என அறிக
கற்புடைப் பெண்டிர் செய்வதன்று
காசுக்குச் சோரம் போவது]

"கூரா அன்பில் சோரா நின்று
அக்கு ஓயா நின்று
உள் குலையாதே"

உண்மையிலே அன்பின்றி
வெளியினிலே பகட்டு காட்டி
நடிப்பதனைச் செய்கின்ற
பொய்யான தோற்றத்தில்
உடைமைகளைப் பறிகொடுத்து,
அத்தோடு நில்லாமல்
எலும்புடன் கூடி நிற்கும்
தோல், தசை, மூளை
சுக்கிலம், இரத்தம், இரதம்
என்னும் எழுபொருளால் ஆன
இவ்வுடம்பும் ஓய்ந்து போக,

உடைமையும் போகவிட்டு
உடலையும் ஓயவிட்டு
உள்ளமும் மிக வாடி
நிற்கின்ற நிலை வராமல்,

"கோடார் செம்பொம் தோளா!"

மலை போலும் சிவந்திருக்கும்
பொன்மயமாய தோளுடைய முருகனே!

"நின் சொல் கோடாது என்கைக்கு அருள் தாராய்!"

உனைப் பாடும் சொல் ஒன்றே
புகழ் என்ற சொல்லாகும்
அதுவே திருப்புகழாகும்
மற்றெல்லாம் வீணே

வீணான செயல்கள் இங்கு
நான் செய்து மாளாமல்
தளராது உன் புகழை
நாள்தோறும் சொல்லிவர

தளராது என்னுடலும்
மறவாது உன் புகழை!
இவ்வருள் தந்திடவே
நீயெனக்கு அருள் தருவாய்!********************************************************************

அருஞ்சொற்பொருள்:

ஓராது = முழு முதற் பொருளான பிரணவ்த்தை உணராது

அந்தத்தோடே = அழகுடனே

எட்டா மால் = அளவில்லாத மயக்கம்

கூரா = பொய்யான, விருப்பமில்லாத

அக்கு = எலும்பு

கோடார் = கோடு ஆர் = மலை போன்று [உ-ம்: திருச்செங்கோடு] கூம்பி, உயர்ந்து நிற்கின்ற

கோடாது = தாழாது, வளையாது [உ-ம்: கோடாமை சான்றோர்க்கு அணி]

தோரா = தோல்வி என்பதே இல்லாது

வென்றி = வெற்றி

போரா = போர் புரிபவனே

மன்றல் = வாசனை வீசும்

பொன்ற = பொருந்தச் செய்ய

சே = எருது

சே ஏறு எந்தை = எருதின் மேல் ஏறி அமர்ந்து வரும் ஈசன், சிவன்

*************************************************************

வேலும் மயிலும் துணை !

முருகனருள் முன்னிற்கும் !

அருணகிரிநாதர் தாள் வாழ்க !

Tuesday, October 10, 2006

"அ.அ. திருப்புகழ்" -- 11 "சந்ததம்"

"அருணகிரிநாதரின் திருப்புகழ்" -- 11 "சந்ததம்"

இந்த வாரம் ஒரு எளிமையான, இனிமையான, பொருள் பொதிந்த, சுருக்கமான திருப்புகழ்!

" பாடல்"

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.

"பொருள்"

"சந்ததம் பந்தத் தொடராலே"

தன்மைக்குத் தக்கவாறு கயிறு பிணைக்கப்படும்
பசுவினைக் கட்டுவதோ ஒரு கயிற்றால்
யானையைப் பிணைப்பது இரு சங்கிலியால்
குதிரையைக் கட்டவோ கயிறு மூன்று வேண்டும்
ஊஞ்சலைக் கட்ட சங்கிலிகள் நான்கு வேண்டும்
ஆன்மாவைக் கட்டவோ ஐந்து கயிறு வேண்டும்!

கயிற்றின் எண்ணிக்கை கூடக்கூட
கட்டுவதின் முரட்டுத்தனம் விளங்கும்.
ஒருகயிற்றால் கட்டிய பசு
சுற்றளவைச் சுற்றிவரும்
இருகயிற்று யானையோ
அங்குமிங்கும் அசைந்து நிற்கும்
முக்கயிற்று குதிரையும்
முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும்.
நாற்கயிற்று ஊஞ்சலும்
மேலும் கீழும் ஆடிவரும்
ஐங்கயிற்று ஆன்மாவோ
சொர்க்கம் நரகம் பூதலம் என்னும்
மூவுலகும் சுற்றிவரும்.

கயிற்றினை அறுத்துவிடின்
கட்டுகளும் விட்டுவிடும்
பசுவென்னும் ஆன்மாவும்
பஞ்ச சங்கிலி அறுந்திடவே
பரமான்வைப் பரவி நிற்கும்.

அது போல,
தொடராக வந்து நிற்கும்
கட்டிங்கே அமைவதினால்,

"சஞ்சலத் துஞ்சித் திரியாதே
"

கட்டுண்ட ஆன்மாவும்
காலா காலமும்
உள்ளம் மடிந்து
துன்பம் அடைந்து
உணர்வு மடிந்து
உழலாமல் இருப்பதற்கு,

"கந்தன் என்று என்று உற்று
உனைநாளும் கண்டுகொண்டு
அன்புற்றிடுவேனோ"

கலியாணப் பந்தலிலே
கால்கள் கட்டியிருக்கும்
குழந்தைகளும் அதைச் சுற்றி
களிப்புடனே ஆடிடுவர்
கம்பில்லா குழந்தை அங்கே
தான் சுழன்று ஆடுகையில்
தலை சுற்றிக் கீழே வீழும்
அது போல,
உயிர்களுக்கும் ஆன்மாவிற்கும்
உறுதுணையாய்க் கம்பமாய்
உறுப்பவனே கந்தனாவான்
அவன் தாளைப் பற்றியவர்
உலகின்பம் அடைய மாட்டார்.

கந்து என்றால் தறியாகும்
ஆனையைக் கட்டுதற்கு அது பேராகும்
கந்தன் என்றால் அது போன்றே
நம் கயிற்றை அவன் பிணைப்பான்.
கந்தனைக் கண்டு அவன் தாள்பற்றி
இன்பம் அடைந்திடும் வழியென்றோ?

"தந்தியின் கொம்பைப் புணர்வோனே"

திருமாலின் கண்ணின்றே அவதரித்த
அமுதவல்லியெனும் பெண்ணாளும் குழந்தைவடிவாகி
சூரனிடம் பயந்து ஒளிந்திருந்த
இந்திரன்பால் சென்றடைய விண்ணவர்கோனும்
ஐராவதமெனும் தன்யானையிடம் அதை அளிக்க
அன்புடன் துதிக்கையால் தூக்கிச் சென்று
கற்பகவனத்தினிலே ஆசையாய் வளர்த்திடவே
சூரனை வதைத்தபின்னர் இந்திரனும்
வீரனுக்கு பரிசாக கொடுத்திட்ட தெய்வமகள்
தெய்வயானையை மணம் செய்த முருகோனே!

"சங்கரன் பங்கில் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங்குன்றில் பெருமாளே."

உமையொருபாகம் அளித்து மகிழ்கின்ற
சிவசங்கரியின் அருங்குமரா!
செந்திலையும் கண்டியையும்
ஆள்கின்ற கதிர் வேலா,
திருப்பரங்குன்றத்தில் தெய்வயானையை
மணந்திட்ட பெரியோனே!
-------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்

சந்ததம் = தினந்தோறும்
பந்தம் = கட்டு, கட்டுப்பாடு
சஞ்சலம் = துன்பம்
துஞ்சி = அடைந்து
கந்து+அன் = கந்தன்
கந்து = யானையைக் கட்டும் தறி
தந்தி = தந்தம் உடையதால் யானை
கொம்பு = [இங்கு] பூங்கொம்பு போன்ற தெய்வயானை
சங்கரன் பங்கு = உமை, பார்வதி, சிவனிடம் ஒரு பாகம் பெற்றவள்
சிவை பலா = உமையின் மைந்தன்
------------------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !

Saturday, September 23, 2006

"அ.அ.திருப்புகழ்" -- 10 "கருவடைந்து" [4]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 10 -- "கருவடைந்து" [4]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதை சற்று விளக்கமாகச் சொல்ல விழைகிறேன்! [வழக்கத்தை விட!!].
நான்கு பதிவாக வரும்!!!
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் "குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ"

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி
னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த
அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்.....................[நான்காம் பகுதி]

"குழந்தை வடிவாகி கழுவி அங்கு எடுத்து,
சுரந்தமுலை அருந்துவிக்கக் கிடந்து,கதறி,
அங்கு கை கொட்டித் தவழ்ந்து, நடமாடி,
அரைவடங்கள் கட்டி, சதங்கை,இடுகுதம்பை, பொற்சுட்டி, தண்டைஅவையணிந்து,, முற்றிக் கிளர்ந்து "

குழந்தையென வந்துதித்த பின்னர்
அதனைக் கழுவிக் குளிப்பாட்டி,
தாயின் முலையினின்று சுரந்திட்ட
பாலருந்த பக்கவாட்டில் கிடந்து,

ஓர் கணம் கதறலும், உடனேயே
கைகொட்டிச் சிரித்தலும் மாறி மாறிச் செய்து
பின்னர் உடல் திருப்பி,மார்பினால் தவழ்ந்து,
இன்னும் உடலெழுப்பி நின்று நடை பழகி,

துணையென்று ஒலிகேட்கத் தாயவளும்

இதன் இடையில் அரைவடம், கால்களிலே சதங்கை
காதசையக் காதணிகள், கைவிரலில் மோதிரம்
இவையெல்லாம் அணிவித்து அழகு பார்த்து

பசியறிந்து, தன் ருசியறிந்து
உடல் வலு சேர்க்க பதம் அறிந்து
தாயவள் ஊட்டிய அன்புச் சோற்றினால்
உடல் நன்கு முற்றி வலுவடையும் அந்த,

"வயதேறி அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து"

பதினாறு வயதினிலே, தான் பிறந்த
பயனறியாது, காலத்தின் உயர்வறியாது,
உய்யக் கரை சேரும் வழி அறியாது
பருவக்கிளர்ச்சியால் மனம் சஞ்சலித்து

கண்ணில் படுகின்ற பெண்களின் கருத்தைக்
கவர எண்ணி அதுபற்றியே சிந்தித்து
அவருடன் இணக்கமாக வழியனைத்தும்
தேடுவதில் காலத்தைச் செலவிட்டு,

"பிணியுழன்று சுற்றித் திரிந்தது அமையும்"

பல்வேறு வகையாலும் பாவச் செயல்களைப் புரிந்து
அதனாலே பல்வேறு விதமாய நோய்நொடி அடைந்து
துன்புற்று, பாவ, புண்ணியங்களால் மீண்டும் மீண்டும்
இப்பூவுலகில் வந்து உழற்படா வண்ணம் அருளுகின்ற

"உன் க்ருபைச் சித்தம் என்று பெறுவேனோ ?"

நின்னுடைய கருணைத் திறனை
நான் பெறும் நாள்தான் எந்நாளோ?

[இத்துடன் இந்த சிறிய தொடர் நிறைவுற்றது!
இதில் சொன்ன பல நிகழ்வுகள் உங்களுக்கு ஒரு வாரத்திற்கு சிந்திக்க உதவும் என்னும் நம்பிக்கையுடன் தாற்காலிகமாக உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!
பின்னூட்டங்கள் இடவும்!
அவை படித்து பிரசுரிக்கப் படும்!
திரும்பி வந்ததும் விரிவாக பதிலிட முயலுவேன்!]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

"அ.அ.திருப்புகழ்" -- 10 "கருவடைந்து" [3]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"-- 10 -- "கருவடைந்து" [3]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதை சற்று விளக்கமாகச் சொல்ல விழைகிறேன்! [வழக்கத்தை விட!!].
நான்கு பதிவாக வரும்!!!
இது மூன்றாம் பகுதி! [முதல் இரு பகுதிகளும் படித்தாயிற்றா?!]
[பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

"கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த

முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து

பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி

னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த

அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து

உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்.....................[மூன்றாம் பகுதி]

"கருவடைந்து பத்துற்ற திங்கள்வயிறிருந்து முற்றி"

[இந்த ஐந்து சொற்களுக்கு ஒரு அழகிய விளக்கம் கண்டேன்!
எந்தவொரு விஞ்ஞான வசதிகளும் இல்லாத அக்காலத்தில், எவ்வளவு சரியாக இதைச் சொல்லியிருக்கிறார்கள் என எண்ணியதால், அதை இங்கு எடுத்துரைக்க விழைகிறேன்.]

தாம் செய்த நல்வினையும் தீவினையும்
அதன் பயனும் நுகர்ந்த பின்னர்,
கலப்பான வினைப்பயனை நுகர்தல் பொருட்டு
விண்ணினின்று மழை வழியே, இறைவனாணையால்

பூவுலகம் வருகின்ற உயிர்களனைத்தும்
காய், கனி, மலர், நீர், தானியம்
இவற்றினுள்ளே கலந்து நின்று,
அதையுண்ட ஆணிடம் கலந்த வண்ணம்,

அறுபது நாள் அவன் கருவில் இருந்தபின் விந்தாகி
பெண்ணுடனே சேருகின்ற காலத்தில்
கருமுட்டையுடன் கலக்கின்ற விந்தையினை
அருணையாரும் சுருங்கக்கூறி விளக்குகின்றார்

கருப்பம் உண்டாகும் நற்காலம்
ருதுவென்று பெயர் விளங்கும்
மாதவிடாய் ஆன நாள்முதல்
பன்னிரன்டு நாட்கள்வரை ருதுவாகும்

விலக்கு முதல் நான்கு நாட்கள்
சங்கமித்தல் ஆகாது
ஐந்து முதல் பதினைந்து வரை
ஒற்றைப்படை நாட்களிலே சங்கமித்தால்
பெண் மகவு பெற்றிடலாம்

இரட்டையான நாட்களிலோ, அதாவது,
ஆறு முதல் பதினாறு வரை நாட்களில்
சங்கமமோ ஆண் குழந்தை
பிறக்குமென்று சொல்லி வைத்தார்.

கருப்பையின் வாய் அங்கு
குவிந்து போவதனால்
அதன் பின்னர் கருத்தரிக்கும்
வாய்ப்பெதுவும் இருப்பதில்லை.

ருது கழிந்த நான்காம் நாளினிலும்
பகற்பொழுதிலும் சேர்ந்தங்கே
கருவொன்று வருமாயின் ஆயுள், அறிவு,
செல்வம் இவை குறைந்த மகவு தோன்றும்.

ஐந்தம் நாள் கருத்தரிக்கின்
பெண் மகவு தோன்றி வரும்
ஆறாம் நாள் கருத்தரிக்கின்
மத்திமமாய்ப் பிள்ளை வரும்

ஏழாம் நாள் பெரும்பாலும்
கருவொன்றும் வருவதில்லை
எட்டாம் நாளோ குணமிக்க
பெண்மகவு உருவாகும்

ஒன்பதம் நாள் கருவுறின்
நலம் சேர்க்கும் பெண் வந்திடும்
பத்தாம் நாளில் பார் புகழும்
உயர்ந்த ஆண்மகன் வருவான்

பதினோராம் நாள் கருத்தரித்தால்
தரம் குறைந்த தருமமற்ற
பெண் மகவு வந்து உதிக்கும்
பனிரண்டாம் நாளன்று உத்தமனும் வந்திடுவான்

பதிமூணாம் நாள் வரும் பெண்ணோ
பலரை விரும்பும் குணமுடையாள்
பதினாலாம் நாளன்று ஜனிப்பவனும்
உலகாளும் நன்றியுள்ள மகனாவான்

பதினைந்தாம் நாளுதிக்கும் பெண்ணவளோ
பார்புகழும் பேரரசன் பத்தினியாய்
பல்வகைப் பெருமயெலாம் பெற்றிட்டு
உத்தம புத்திரரும் பெறுவாள்

பதினாறாம் நாள் திருக்குமரன்
கல்வி கலைகளிலே தேர்ச்சி பெற்று
நல்லொழுக்கம் மிக்கோனாய்ப் பலராலும்
விரும்புகின்ற பாக்கியவானாய் ஆவானாம்.

முழுநிலவோ, கருநிலவோ,
அட்டமியோ, சஷ்டியோ, துவாதசியோ
இந்நாளில் அமையுமாயின்
அந்நாளில் சேர்க்கை தவிர்த்திடவும்.

கருவொன்று உதித்த பின்னர்
அது வளரும் நிலையினையை
முன்னோர்கள் சொன்ன
வாக்கைஇப்போது காண்போம்!

விந்தும் முட்டையும் சேர்ந்த கரு
இரண்டும் கலந்ததாலே திரவமாகி நிற்கும்
ஏழாம் நாளினில் அது ஒரு மலர் போல விரியும்
பதினந்தாம் நாளினில் அது சற்றே இறுகிவரும்

ஒரு மாதம் போனபின்னர் இன்னும் கடினமாகி
இரண்டாம் மாதத்தில் தலையொன்று முளைத்துவரும்
மூன்றாம் திங்களிலே கால்கள் தோன்றவரும்
நாலாம் திங்களிலே விரல், வயிறு, இடுப்பென

தனித்தனியே பிரிந்து உருத் தோன்றும்
ஐந்தாம் மாதத்தில் முதுகெலும்பு ஊன்றிவரும்
ஆறாம் திங்களிலே கண், மூக்கு, செவி உதிக்கும்
ஏழாம் மாதம் ஜீவன் வந்துதிக்கும் [Viable]

எட்டாம் மதத்தில் அங்கமெல்லாம் வளர்ச்ச்சி பெறும்
ஒன்பதாம் திங்களிலே முன் ஜென்ம நினைவு வரும்
மீண்டும் இந்த பிறப்பு இறப்பென்னும்
துன்பமதில் விதித்தாயே என்னிறைவா என வருந்தும்

தன் துன்பம் மிக நினைத்து தானங்கே வாடுகின்ற
ஒன்பதாம் மாதத்தில் இறைவனிடம் முறையிட்டிடினும்
யோனித்துவாரம் வழி வருகையில் ஏற்படும் துன்பத்தால்
அவை அழிந்து, முன் நினைவு மறந்து போகுமாம்.

பத்தாம் திங்களிலே, தனஞ்சயன் எனும்
வாயுவால் தள்ளப்பட்டுத், தலைகீழாய்
சிசுவங்கே வெளிவரும் நேரத்தில்,
மலையினின்றுஉருட்டப்படும் துன்பத்தை அனுபவிக்கும்.

[மீதி வரிகளுக்கு அடுத்த பதிவில் பொருள் விளக்கமளித்து முடித்து விடலாம்!]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Friday, September 22, 2006

"அ.அ.திருப்புகழ்" -- "கருவடைந்து" 10 [2]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் " -- 10 "கருவடைந்து" [2]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதன் விளக்கம் மிகவும் நீண்டதாக இருக்கும்.
நான்கு பதிவாக நான்கு நாட்களில் வரும்!!!
முதல் பகுதி படித்து இங்கு வந்தால் நலமாயிருக்கும்!
இது இரண்டாம் பாகம்.
[ஒவ்வொரு பதிவிலும் பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!
*************************************************************

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்

வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த

முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து

பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி

னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த

அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து

உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

.****************************************************************

.................பொருள்.....................[இரண்டாம் பகுதி]

"அயனையும் புடைத்துச் சினந்து"

வெள்ளிமலையாம் கயிலயங்கிரியில்
விளையாடல் முடித்த குமரன்
இலக்கத்தொன்பான் படை புடைசூழ
ஒளிபொங்க வீற்றிக்குங்காலை ஓர்-நாள்

ஆயிரமாயிரம் தேவர் கூட்டம்
அடிபணிந்து பின்னே வர
படைப்புக் கடவுளாம் பிரமனும்
சிவனை வணங்குதற் பொருட்டு வந்தனர்

யான் எனும் செருக்கின்றி வந்த அனைவரும்
சிவனை வணங்கியபின் சுற்றிவரும் வேளையில்
ஆங்கே வருள்பொழியும் குமரனை வணங்கிச் செல்ல
"இவன் இளைஞனன்றோ"வென செருக்குற்ற பிரமன் மட்டும்

இறுமாந்து தாண்டிச் செல்ல, குமரனும் அவரது
அறியாமைச் செருக்கடக்கி, சிவனும் முருகனும் ஒன்றெனும்
உண்மையினை, அவர்க்குப் புகட்டவெண்ணி, தருக்குடன் செல்லும்
பிரமனைத் தன்பக்கல் வரச் சொல்லவும்,


இன்னும் செருக்கடங்கா பிரமரும் அலட்சியமாய் வந்து
பாவனையாய் வணங்கி நிற்க, கந்தனும் "யாவன்" என வினவ
"படைத்தலினால் யான் பிரமன்" என அச்சங்கொண்ட பிரமரும்
பதிலிறுக்க, "அங்ஙனமாயின் வேதம்வருமோ?" எனக் கேட்க,

"வேதம் பிறந்தது நம்மிடத்தில், எமக்கு வரும்" எனப்
பணிவுடன் தெரிவிக்கலும், "நன்று! அப்படியாயின் முதல் வேதமாம்
இருக்கு வேதம் பகருக" எனப் பணிக்கலும்,"ஓம்" என பிரமன் தொடங்க
இளம் பூரணனாம் எம்பிரான் நகைத்து, திருக்கரமமைத்து,

"பிரமனே! நிற்றி; நிற்றி! முதலிற் கூறிய ஓம் எனும்
பிரணவத்தின் பொருள் கூறி மேலே தொடங்கலாம்"
என்னலும், பிரம்மதேவரும் திகைத்து, கண்கள் சுழன்று
தான் எனும் ஆணவம் அடங்கி, குமரனைப் பணிந்து,

"ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளுணரேன் யான்!" என வணங்க,
"இம்முதலெழுத்தின் பொருள் அறியா நீவிர் எங்ஙனம்
படைப்புதொழிலினைச் செவ்வனே செய்திடல்ஆகும்?" எனப்பகர்ந்து
நான்குதலைகளும் குலுங்குமாறு ஓங்கி குட்டினார்!

அகம் அழியவென அங்கத்தில் தன் திருவடியால்
ஓர் உதையும் கொடுத்தனர்! பிரமனும் மூர்ச்சையாகி
நிலத்தில் வீழ்ந்து பட கருணைக் கடவுளும் தம்
பரிவாரம் அழைத்து அவரைச் சிறையினிலும் இட்டனர்!"

"உலகமும் படைத்துப் பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே."

படைப்புக் கடவுள் இல்லாமையால்
உலகினில் சிருட்டித்தல் நின்றுவிட,
அதனையும் தானே செய்திடத் திருவுளம்
கொண்டு பரிவுடன் பரங்குன்றில் அமர்ந்து
"காத்தும் படைத்தும் கரந்தும்" செயல் புரிந்த
குமரன் எனும் பெயர் கொண்ட பெருமையுடையோனே!



[இதன் தொடர் நாளை வரும்!!]" [2]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!



Thursday, September 21, 2006

"அ.அ.திருப்புகழ்" -- "கருவடைந்து"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் " -- 10 "கருவடைந்து" [1]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.

இதன் விளக்கம் மிகவும் நீண்டதாக இருக்கும்.

நான்கு பதிவாக நான்கு நாட்களில் வரும்!!!

[ஒவ்வொரு பதிவிலும் பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]

அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி
னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த
அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்......................

[பின் - முன்!!]

"இரவி இந்திரன் வெற்றிக் குரங்கின்அரசர் என்றும்
ஒப்பற்ற உந்தி இறைவன் எண்கு இனக்கர்த்தன் என்றும்
நெடுநீலன் எரியது என்றும் ருத்ரர் சிறந்தஅனுமன் என்றும்
ஒப்பற்ற அண்டர் எவரும் இந்த வர்க்கத்தின் வந்து புனம் ஏவ"

இராவணாதி அசுரரின் கொடுமையால் வருந்தி
பிரமாதிதேவரும் அரவணைச் செல்வனாம்
அச்சுதன்பால் சென்று வணங்கிப் பணிந்து
ஆலிலைச்சயனா! அன்பர்கள் ஏறே!

இராவணாதி அசுரரின் துன்பமழித்து
எங்களைக் காத்தருள வேண்டுமென வேண்ட
அரங்கன்மாலும் அருள்கூர்ந்து அவர்பால் இரங்கி
நானுங்கள் துன்பம் தீர்ப்பேனென வரமளித்து

எவராலும் மரணம் நிகழலாகாதுவெனச் சொன்ன
இராவணன் அற்பமென நினைத்து மனிதரையும்
வானரத்தையும் கேட்க மறந்து போனான்
அதுவே நும்மைக் காக்கும் உபாயம் என்றறிவீர்!

நிருதரை நீறாக்குதற்கு சூரிய குலத்தில்
தயரதன் மகனாய் நாம் பிறப்போம்
எம் கையில் துலங்கிடும் சங்கும் திகிரியும்
யாம் படுத்துறங்கும் ஆதி சேஷனும்

எமக்கு இளையவராய்ப் பிறக்க அருள்கிறோம்
இவருடன் நால்வராய் யாம் பிறந்து
நும் துன்பம் நீக்கும் அருள் புரிந்தோம்
அஞ்சுதல் அகற்றி நும்பணி செய்திடுவீர்

எனவே மொழியவும், பிரமன் ஜாம்பவானையும்
இந்திரன் வாலியெனும் வலியதோர் வீரனையும்
பகலவன் அம்சமாய் சுக்ரீவனெனும் தம்பியையும்
அக்கினியும் தன் பங்கிற்கு அழகிய நீலனையும்

வாயுவும் சிவனைவேண்டி அவனது ஒரு துளியாம்
உருத்திரன் அம்சமும் கலந்து அனுமனையும்
இந்திரனின் தம்பி உபேந்திரன் அங்கதனாயும்
தேவசிற்பி விசுவகர்மா நளனெனும் வானரமாயும்

இவர்களால் உந்தப்பட்டு தேவரும் கந்தருவரும்
மலைபோலும் உடலுடனும், அளவிடா ஆற்றலோடும்
ஆயிரமாயிரம் வானரராய்ப் பிறந்து
மலைசூழும் கிஷ்கிந்தாவினில் அவதரிக்கவும்,

"அரிய தன் படைக்கர்த்தர் என்று
அசுரர்தம் கிளைக்கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே"

இவ்வண்ணம் அங்கிருந்த வானரக் கூட்டங்களை
தன்பணிக்கு உதவிடவே சேனையாக ஏற்று
இரவாணாதி அரக்கரை அழித்து வெற்றிகொண்ட
பாவம் நீக்கி, முக்தியைத் தந்தருளும்

இராமனாய் அவதரித்த இவ்வுலகைக் காப்போனும்
தான் அழித்த இராவணனுக்கு பத்துத் தலையே
ஆயின் என் மருகனோ, ஆயிரம் தலை கொண்ட சிங்கமுகனை அரைநொடியில் வேல்விடுத்து அழித்த தீரத்தினையும்

பாறைகளைப் புரட்டி, தான் கடலினை தாண்டிச் சென்றதுவும்
மருகனோ அக்கடலினையே வற்றச் செய்த மாண்பினையும்
தாம் அம்பெடுத்து அழித்த வீரர் கணக்கினையும்
தன் மருகன் வெறும் பார்வையிலும், சிரிப்பினாலும் மட்டுமே

எரித்தழித்த மேன்மையினை எண்ணி எண்ணி
என்றென்றும் அரிமுகுந்தன் அளப்பரிய
ஆனந்தம் அடைந்து தன் மருகனை
மெச்சுகின்ற பச்சைப் புயலின் மருகோனே!

[இன்னும் வரும்!]" [1]

Monday, September 11, 2006

அ.அ. திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய'

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய"


"ஆவி பிரியுங்கால் மயில் மீது வந்து எனையாள்!"

.............பாடல்.............

தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன -- தனதான

தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி

தொண்டுகிழவ னிவனாரென இருமல்
கிண்கிணெனமு னுரையே குழறவிழி
துஞ்சுகுருடு படவே செவிடுபடு -- செவியாகி

வந்தபிணியு மதிலே மிடையுமொரு
பண்டிதனுமெ யுறுவே தனையுமிள
மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்றிசருவ மலமே யொழுகவுயிர்
மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும்

எந்தைவருக ரகுநா யகவருக
மைந்தவருக மகனே யினிவருக
என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம

இங்குவருக அரசே வருகமுலை
யுண்கவருக மலர்சூ டிடவருக
என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன்

சிந்தைமகிழு மருகா குறவரிள
வஞ்சிமருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -- அதிதீரா

திங்களரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே.
00000000000000000000000000000000000000000000000000000000000
சைவம், வைணவம் இவற்றில் பேதம் ஒன்றுமில்லை எனப் பகரும் அற்புதக் கவிதை இது!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


...........பொருள்.................

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம் !]

"எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனது ஆருயிர் வருக
அபிராம இங்கு வருக அரசே வருக
முலைஉண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினோடு கோசலை புகல
வருமாயன்சிந்தை மகிழு மருகா"

பலவாறு தவம் செய்துவேண்டியதின் விளைவாய்
மன்னு புகழ் கோசலைதன்மணிவயிறு வாய்த்த
ரகுகுலம் தழைக்க வந்தஎந்தையே வருக!

'மைந்த வருக' வென அழைத்ததற்கோர்
காரணமும் இங்குண்டு!

தனக்குரிய வயது வந்தும்
தன் கையை நம்பாமல்
தந்தையின் வருவாய் அறியாமலும்,
அவர் அணைப்பில் இருக்கிறவன் 'பாலன்'.

வயதான தந்தையங்கு
வருவாயைக் கொன்டுவர,
தானதற்கு உதவிடாமல்
தான் தோன்றியாய் இருப்பவன் 'பிள்ளை'.

தந்தைக்கே ஞானம் உரைக்கும்
அறிவு பெற்றவன் 'குமாரன்'.

தந்தை தாயின் நலம் பேணி
அவர்க்குக் கருமம் செய்தங்கே
நற்கதிக்கு அனுப்புபவன் 'புத்திரன்'.

இருக்கும் காலத்தில்
பெற்றவர் நலம் பேணி
நற்செயல்கள் புரிபவன் 'புதல்வன்'.

தன் குடும்ப நலன் பேணி
தந்தையவன் கடனேற்று
ஆலமரம் போல் காப்பவ்னே 'மகன்'.

தன் குடும்பம், தன் தாய்
தந்தையர் குடும்பம்
குருவின் குடும்பம் மற்றும்தம்
நண்பரின் குடும்பம்
இவையனைத்தும்
தன் குடும்பம் போல்காப்பவனோ 'மைந்தன்'!

இராமனோ தன் குடும்பம் மட்டுமின்றி
குகன், சுக்ரீவன், விபீடணன்குடும்பமதையும்
காத்திடுவான் நாளை என அறிந்து
'மைந்த வருக' வென வழைத்து,
பின், தன் குடும்ப மானமும்
காப்பவனும் இவனெனத் தெளிந்து
'இனி மகனே வருக' வெனவும்
அழைத்திட்டாள் மாதரசி கோசலை!

எனது கண்ணின் மணியே வருவாய்!
என் ஆருயிர்க்கு நிகரானவனே வருவாய்!
அழகிற் சிறந்தவனே வருவாய்!
இம்மாநிலத்தின் அரசனே வருவாய்!

தான் அந்தக் குண நலன்கள்
தன்னங்கே கொண்டதனால்,
தாயின் முலைப்பாலைக் குடிக்கின்ற
அவனுக்கும் அந்நலங்கள் வரட்டுமென
'முலையுண்க வருக'
வெனவும் அழைக்கின்றாள்!

மணக்கும் இந்த நறுமலரைச்
சூடிடவே வருவாய்!

என அன்னையாம் கோசலையும்
மகிழ்ந்து கொண்டாடி
மனம் குளிர அழைக்கின்ற
மாயவனாம் இராமனெனும்
அவதாரமாய் வந்த அந்தநாராயணனும் ,

தானங்கு மாயத்தால் கோசலையின் அன்பிற்குக்
கட்டுண்டு கிடந்த நிலை போலே
இங்கிந்த சரவணனும் கார்த்திகைப்
பெண்டிர் அழைத்திடவே அறுமுலையுண்ணும்
காட்சியினைக் கண்டே மனம் மகிழும் படி
திருவிளையாடும் முருகா!

"குறவர் இளவஞ்சி மருவும் அழகா"

அழகன் இவனே எனத் தெளிந்து
உனை அணைக்க வருகின்ற
குறவள்ளியின் மணாளனே!

"அமரர் சிறை சிந்த,
அசுரர் கிளை வேரொடு மடிய அதிதீரா"

பல யுகமாய் சிறையில் உழன்று
நெடுந்துயர் அடைந்திட்ட
தேவரெனும் நற்குணங்கள்
அசதி, சோம்பல் எனும்
தாமச குணம் என்னும்
அசுரரால் வருந்தி நிற்க
அயர்வை அகற்றி, நல்லுணர்வை அளிக்க,
அசுரரை வாட்டி, தேவரை சிறை மீட்ட
பெருவீரம் படைத்த முருகா!

"திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர"

நீயே சரணமெனத் தனை
நாடி வந்த சந்திரனையும்,
உனைக் கொல்வேன் எனச் சபதம் செய்து
ஓடி வந்த பாம்பினையும்,
ஒரு சேர அன்பு கொண்டு அபயமளித்து,
பாய்ந்து வந்த கங்கையின்
சீற்றமடக்கிக் கருணையினால்,
தன் தலையில் இன்பமுடன்
சூடிக்கொண்ட சிவனாரின் திருக்குமரா!

"அலையே கரை பொருத செந்தில் நகரில்
இனிதே மருவி வளர் பெருமாளே"

பல்வகையாம் எண்ணமெனும்
பெருஅலைகள் ஓடிவந்து
தன்னடியில் கலந்தங்கே
தாம் அமைதி எய்துமாறு
செந்திலம்பதியினிலே
உறைகின்ற பெரிய கடவுளே!

"தொந்தி சரிய, மயிரே வெளிற,நிரை தந்தம் அசைய,
முதுகே வளைய,இதழ் தொங்க, ஒரு கை தடி மேல் வர
மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவன் ஆர் என"

என் வயது ஏறிடும் காலத்தே
வயிறங்கே பெருத்து முன்னே
தொந்தியெனச் சரியவும்,

கருநிறமாய் நான் காத்த
முடியங்கு வெளுத்துப் போய்
நரைமுடியாய் ஆகிடவும்,

உறுதியாய் நான் தேய்த்து
நிதம் வளர்த்த பற்களும்
அங்கங்கே அசைந்திடவும்,

வீரமாய் நிமிர்ந்தங்கு காட்டிய முதுகும்
பல்லக்கு போலின்று வளைந்திடவும்,

பவழம் போல் விரிந்திருந்த
உதடதுவும் தொங்கிடவும்,

இருகரம் வீசி நடந்த நான் இன்று
ஒருகரத்தில் தடி ஒன்றை ஊன்றி
நடக்கவே நேர்ந்திடவும்,

அதைக்கண்டு இளவயது
மங்கையரெலாம் 'யார் இந்தத்
தொண்டு கிழவன் இங்கே' என நகைத்திடவும்,

"இருமல் கிண்கிணென
முன் உரையே குழற
விழி துஞ்சு குருடு படவே
செவிடுபடு செவியாகி
வந்த பிணியும்
அதிலே மிடையும் ஒரு பண்டிதனும்
மெய் உறு வேதனையும்"

இருமல் எனும் கொடும்பாவி
'கிண் கிண்' எனஓசையுடன் வெளிக்கிளம்பி,

இதுகாறும் திருத்தமாய்ப்
பேசிய பேச்சுகளும் குழறிப்போய்,

ஒளியுடன் விளங்கிய கண்பார்வை
இன்று தூங்குதல் போலே மங்கிடவும்,

துல்லியமாய் இதுவரையில்
கேட்டுவந்த காதுகளும்இன்று
பஞ்சடைத்து செவிடாகவும்,

மிடுக்கென வாழ்ந்த தேகம் இன்று
நொடிக்கொரு நோயென ஆட்பட்டு,

அதனாலதை அகற்றவே ஒரு வைத்தியனும்
நிதம் எந்தன் வீடு தேடி வந்திடலும்,

நோயின் துயரால் என் மேனி வாடுதலும்,

"இள மைந்தர் உடைமை கடன் ஏதென,
முடுகு -- துயர்மேவி, மங்கை அழுது விழவே,
யமபடர்கள் நின்று சருவ,
மலமே யொழுக,உயிர் மங்குபொழுது,
கடிதே மயிலின் மிசை வரவேணும்."

என்னுயிர் போதல் நிச்சயமெனத் தெளிந்து,
தன் தந்தை இன்னுமென்ன கடன் விட்டுச் செல்கிறான் என
என் இளவயது மக்களும் கணக்கிட்டு நின்றிடவும்,

வாய் பேச வழியின்றி, இதனை நான் கேட்டே
மனது துயர் பெருகி மயங்கிடவும்,

என் மனையாள் ஓவெனக் கதறி
என்மீது விழுந்து அழுதிடவும்,

எமதூதர் வந்தங்கு என்னுயிர் பற்றிடவே
எதிர்பார்ப்பாய் வந்திடவும்,

என் மலம் அங்கு நீர் போல் ஒழுகிடவும்,
என் உயிர் சற்றே எனை விட்டுப் போகின்ற

நேரமதில் முருகா நீ
அழகான மயில் மீதேறி
எனை வந்து காத்திட வேண்டுகிறேன்!
0000000000000000000000000000000000000000000000000000000000000000

அருஞ்சொற்பொருள்:

தந்தம்= பல்
துஞ்சு= தூங்குதல்
மிடையும்= நெருங்கும்
முடுகு= இதனால் ஆகிய
கடிதே= விரைவாக
அபிராம= அழகிற் சிறந்தவன்

------------------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!


**************************************************************************

Wednesday, August 30, 2006

அ.அ. திருப்புகழ் -- 8 "வங்கம் பெறு கடலெங்கும்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 8 "வங்கம் பெறு கடலெங்கும்"
----------------------------------------------------------------

சென்ற பாடல் பார்த்து குமரன் கேட்டிருந்தார், 'நாயகன் - நாயகி பாவத்தை அருணையார் பாடிக் கேட்டதில்லை இதுவரையில்' என!

இதோ அதே கருத்தில் இன்னுமொரு எளிய பாடல்!

இதன் உள்ளின்று கவனித்தால், அருணையார் மற்றவர்களைப் போல, தன்னை நாயகி பாவத்தில் வைத்துப் பாடவில்லை என்பது புலனாகும்!

அவர்தான் அனுபூதி பெற்றவராயிற்றே!

அவர் நமக்காக, நம் மீது கருணை கொன்டு, நம் நலம் நாடி வேண்டுகிறார்!
என்னே அவர் கருணைத் திறம்!

நாடு பார்த்ததுண்டா?
இது போன்ற நல்லவரை!
------------------------------------------------------------

...........பாடல்............

[தந்தந் தன தந்தந் தனதன

தந்தந் தன தனதான]


வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை

வந்துந் தியதிரு மதனாலே

வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு மதனாலே

பங்கம் படுமென தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு கொடியான

பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை நினையாயோ

தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி லதனூடே

தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு மயிலாடப்

பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைக
ளென்றும் புகழ்பெற மலரீனும்

பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல பெருமாளே.
______________________________________________________________

.......பொருள் விளக்கம்.........

"தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள்

சென்று ஒன்றிய பொழில் அதனூடே

தெந்தெந் தெனதென என்று அண்டு உற அளி

நின்றும் திகழ்வொடு மயில் ஆட

பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள்

என்றும் புகழ்பெற மலர் ஈனும்

பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழுபுவி

என்றும் செயவல பெருமாளே."

நீண்டு வளர்ந்ததோர் சோலை !
அதன் நீடெங்கும் நிறைந்து நிற்கும்
தென்னை மரங்களும் வாழை மரங்களும்!
இருக்க இடமின்றி அடர்ந்திருக்கும் அச்சோலையுள்
தெந்தெந்தெனவென ரீங்காரம் செய்தவண்ணம்
அமர இடமின்றி போட்டிபோடும் வண்டினங்கள்
அடுத்தவரை விரட்ட எண்ணி அழகிசை பாடவும்,

அவ்விசை கேட்டு அதற்கேற்ப மயிலினங்கள்
தம்தோகை விரித்தங்கு அழகு நடம் ஆடிடவும்,

சோலை செழித்திடக் காரணமாய் பொங்கி நிறைந்து
வழிந்தோடுகின்ற நீர்ச்சுனைகள் முழுதினிலும்
குவளைமலர்க் கூட்டம் இவைகண்டு கண் மலரவும்,

இதுபோன்ற அழகுக் காட்சிகள் அத்தனையும்
நிறைந்திருக்கும் பெருமை பெற்ற தலமதுவாம்
திருத்தணிகை மலையதனின் மீதமர்ந்து
தன் செயல்கள் யாவையும் முடித்து விட்டு இனி
ஏழுலகும் படைத்தழித்துக் காக்கவென
வீற்றிருக்கும் பெருமை கொண்ட முருகோனே!

"வங்கம் பெறுகடல் எங்கும் பொருதிரை
வந்து உந்தி அதிரும் அதனாலே"

ஒரு சேர அலை அடித்தால் ஒலியங்கு இனித்திருக்கும் !
பல வேறு கப்பல்கள் தொடர்ந்தங்கு செல்வதனால்
அலைகளின் ஓட்டமங்கு மாறி மாறி வேறுபட்டு
கரையதினில் சேர்கையிலே தடதடவெனவே
அதிர்ந்தங்கு ஒலிப்பதனால் உளத்தினிலே எழுகின்ற
வேட்கையதின் தாக்கம் இவளை வருத்துவதாலும்,

"வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழல் உற
அஞ்சு அம்பு அதும் விடும் அதனாலே பங்கம் படும்"

தான் நினைக்கும் நேரம் பார்த்து
ஆசையென்னும் தீ மூட்டி,
அவர் மீது மலர்க்கணை தொடுத்து,
அடங்காத மனத்தினரையும்,
அம்பு விட்டு அவர் உள்ளம்
தளரச் செய்யும் மன்மதனால்
நாணம் என்னும் பண்பு மறந்து
காதல்வயத்தால் அவமானம்
அடைந்திங்கு வாடுகின்ற,

"எனது அங்கம் தனில் உதி
பண்பு ஒன்றிய ஒரு கொடியான
பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல்
பொன்றும் தனிமையை நினையாயோ"

என் உடலினில் இருந்து பிறந்தவள்;
நற்பண்புகள் பொருந்தியவள்;
கொடி போலும் மெல்லிய உடலை உடையவள்;
பஞ்சு போலும் மென்மையுடையவள்;
மயில் போலும் சாயல் ஒத்தவள்;
இன்று உம் மீது கொண்ட காதல் தீயை
உள்ளத்தில் பொருத்தி உழலுகின்றாள்!
அதனால் இறந்து படுகின்ற
நிலைமையில் இன்றவள் நிற்கின்றாள்!

பெண்ணென்றால் பேயும் இரங்கிடுமே!
முருகா! இவள் துயர் பார்த்து
நீவிர் திருவுளம் இரங்கிடக் கூடாதோ!
இவளது தனிமை கருதி இப்போதே
இனிமை செய்திடல் வேண்டும், பெருமானே!
_____________________________________________________________________________

அருஞ்சொற்பொருள்:

திரை
= அலை
அழல்= நெருப்பு
பங்கம்= அவமானம்
நெஞ்சொன்றிய அழல்= காமத்தீ
தெங்கம்= தென்னை
கதலி= வாழை
அண்டு உற = நெருக்கமாக நின்று
அளி= வண்டு
திகழ்வொடு= விளக்கமாக
-----------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !

___________________________________________________________________

Saturday, August 19, 2006

a.a.thiruppugazh -- 7 "allasaladai-ndha"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் [7] -- "அல்லசலடைந்த"

தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த தனதான

............பாடல்............

அல்லசல டைந்த வில்லடல/னங்கன்
அல்லிமல ரம்பு தனையேவ

அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமுது கிண்ட அணையூடே

சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று முனியாதே

துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு தரவேணும்

கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
கல்விகரை கண்ட புலவோனே

கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை யருள்வோனே

வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த மயில்வீரா

வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே.

********************************************************************


அகப்பொருள் துறையில் பாடப்பெற்ற அற்புதப் பாடல் இது.
நாயகனை விரும்பி, வேட்கை கொண்டு வாடி வருந்தும் தன் மகளைக் குறித்துத் தாய் இரங்கிப் பாடுகின்றாள் என்னும் வகையில் அமைந்துள்ளது.
துணையைப் பிரிந்தோ, அல்லது இணக்கமின்றியோ வருந்தும் ஒவ்வொருவரும் பாடி வேண்டக் கூடிய பாடல்.
இனி பொருளைப் பார்ப்போம்! பின் பாதி முதலில் கண்டு, முன் பாதி அடுத்து வரும்.

********************************************************************

"கல் அசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரைகண்ட புலவோனே"


அன்றொரு நாள் தேவரும், முனிவரும் கூடி
இன்றிங்கு வீற்றிருக்கும் புலவோரில்
முன்நின்று முதன்மை செய்யும்
நன்றான புலவர்க்கு விருதளித்து
சிறப்பொன்று செய்தல் வேண்டுமென
ஒன்றாக முடிவு செய்து,

நாமகளின் வடிவான ஔவைக்கே
பூமாலை சூட்டவெண்ணி
தாம்பூலம் பெற்று தயவு செய்கவென
வேண்டிக் கேட்டிடவே ஔவையும்,
"புலவரெனில் அது மற்றும்
தேவரையே குறித்தலாயின்
அவர்க்குத் தலைவனாம்
இந்திரனையே அது சாரும்
ஐந்திரமெனும் இலக்கண
நூலொன்று படைத்ததனால்"
எனப் புகல, அவ்வண்ணமே அவரும்
இந்திரனை நாடியே தாம்பூலம் நீட்ட,

இந்திரனும் நடு நடுங்கி
"ஒரு நூலைச் செய்ததினால்
நான் புலவன் ஆகமாட்டேன்!
பல நூலும் கற்றிட்ட
அகத்தியரையே இது சாரும்!
அவரிடமே தந்திடுக!" எனச் சொல்லி,

அகத்தியரிடம் நீட்டுங்கால்
அகத்தியரும் தான் நகைத்து,
"பலநூலைக் கற்றதினால்
நான் புலவன் ஆவேனோ?
எனக்கிதனைத் தந்தவளாம்
கலைவாணி அவர்க்கன்றோ
இவ்வருமை தரலாகும்!" என அனுப்ப,

வாணியோ தான் மறுத்து
"வேதத்தில் வல்லவராம்
என் கணவர்க்கே இது சேரும்" எனச் சொல்ல,
பிரமனோ மனம் கலங்கி,
"வாக்கிற்கும், அறிவிற்கும்
தலைவியாம் உமையவளே
இதைப் பெற்றிடும் தகைவுடையாள்!
அவரிடமே ஈந்திடுக! எனப் பணிக்க,

அவ்வாறே இவர்களும் உமையை நாடி வேண்ட,
வாகீச்வரியும் முறுவலித்து,
"நன்று, நன்று ! நான் இதற்கு
உரியவள் அன்று! என் குமரன்
ஞானஸ்கந்தன், ஞானபண்டிதன்
சிவகுருநாதன் குமரவேளே
இதற்குரியவன்!" என அருள,

"மூவர் முதல்வா! முத்தமிழ் வேளே!
வித்வத் தாம்பூலம் ஏற்றருள்க!" எனப் பணிய,
"நல்லது! அவ்வண்ணமே ஆகுக!" என
கந்தவேளும் தாம்பூலம் ஏற்றருளினார்!

இவ்வண்ணம் மலைமங்கை வரையில் போய்
அவ்வம்மையே "புலவன் என் குமரனே!"
எனச் சொன்னதனாலே 'புலவன்'
எனும் பெருமை படைத்த முருகோனே!

"கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று
கல்லல் அற ஒன்றை அருள்வோனே"


'நமசிவாய'வெனும் ஐந்தெழுத்தைக்
குறித்தாற்போல் ஐந்துஇதழ் கொண்டு
அதன் நடுவே வளைந்திருக்கும்
தோகையும் 'ஓம்'என்னும் பிரணவத்தைக்
காட்டுதல் போல் வடிவமைந்த

கொன்றையெனும் மலர் சூடி
அடியவர்க்கு அனைத்தையும் வழங்குதலால்
வள்ளலெனும் பெயர் கொண்ட
சிவன் பணிந்து கேட்டிடவே
அன்றவர்க்கு பிரணவத்தின் பொருள் சொல்லி
அவர் ஐயம் தீர்த்திட்ட அருள் மழையே!

"வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச
வல்லமை தெரிந்த மயில்வீரா"


பலம்கொண்ட அசுரர்படை அஞ்சி ஓட
நலமான விண்ணவரும் பிழைக்கும் வண்ணம்
திறம் காட்டிச் சமர் புரிந்த
மயில் மீதமர்ந்த பெருவீரனே!

"வள்ளி படர்கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே"


வள்ளிக்கொடி படர்கின்ற
வள்ளிமலை அடைந்து
வள்ளியெனும் குறமகளை
அள்ளி மணம் செய்த பெருமாளே!

"அல் அசல் அடைந்த வில் அடல் அனங்கன்
அல்லிமலர் அம்பு தனையேவ"


காரிருள் படரும் நள்ளிரவு வேளையினில்
வேறிடத்தினின்று வந்து வில்லேந்தி
அன்றங்கு சிவனால் உடல் எரிந்து போனதினால்
'அனங்கன்' எனும் பேர் படைத்த மன்மதனும்
தாமரை மலர்க்கணையைச் செலுத்தவும்,

"பிள்ளைமதி தென்றல் அள்ளி எரி சிந்த"

பிறை நிலவும், வீசு தென்றலும்
தன்நிலை மறந்து இயல்புக்கு மாறாய்
கொதிக்கின்ற நெருப்பினையே
அள்ளி வீசித் துயர் செய்யவும்,

"ஐயம் உது கிண்ட அணையூடே"

என் தலைவன் வருவானோ, வந்தருள் புரிவானோ
என்னுமொரு ஐயத்தை தன் மனதில் கொண்டு
மலர்ப்படுக்கையும் நொந்து போக

"சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று
தொல்லை வினை என்று முனியாதே"


தோழியர் சொல்லுகின்ற சொற்களால் மனம் வருந்தி
தாமரை மலர் வாழும் இலக்குமி போலும் இம்மங்கை
தனியே படுத்து தான் நோக உளம் வாடி
'யான் செய்த தீவினையால் இவ்வண்ணம் வாடுகிறேன்'
என வருந்தி, வெறுத்து, நொந்து போகா வண்ணம்,

"துய்யவரி வண்டு செய்ய மது உண்டு
துள்ளிய கடம்பு தரவேணும்"


சுத்தமான வரிகளைக் கொண்ட வண்டினங்கள்
உத்தமமான சிவந்த தேனை உன்டு
மதிமயங்கித் துள்ளிக் குதித்திடும்
கடம்ப மலர்களால் ஆன மாலையினை நீயிங்கு
நங்கையவள் துயர் தீரும் வண்ணம்
தந்தருளிக் காக்க வேணும்!
*****************************************************************************

அருஞ்சொற்பொருள்:

அல்
= இரவு
அசல் = அயல்= வேறிடம்
அனங்கன் = உடல் எரிந்து போனதால், உடல் இல்லாதவன் = மன்மதன், காமன்
எரி = தணல், நெருப்பு
உது கிண்ட = கலக்கம் வந்து வாட்ட
அரவிந்தவல்லி = தாமரை மலர் மேல் வாசம் செய்யும் இலக்குமி, அலர் மேல் வல்லி
முனியாதே = வெறுக்காமல்
துய்ய வரி வண்டு = தூய்மையான வரிகளைக் கோண்ட வண்டுகள்
கல் அசல மங்கை = மலை மேல் வாழும் மலைமகள்
வள்ளல் = அனைத்தையும் குறைவறத் தரும் சிவபெருமான்
கல்லல் அற = குழப்பம் நீங்குமாறு
ஒன்றை = முழு முதற் பொருளான ஓம் எனும் பிரணவம்
சுரர் = விண்ணவர்
விஞ்ச = பிழைக்குமாறு
******************************************************************

முருகன் அருள் முன்னிற்கும் !
வேலும் மயிலும் துணை !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !
**********************************************************************