Thursday, February 10, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 3 [முதல் பகுதி]

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 3 [முதல் பகுதி]

[இந்தப் பாடலுக்கான மன்னாரின் விளக்கம் இரண்டு பகுதிகளாக அடுத்தடுத்து வரும்! அருள்கூர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கவும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!]

உல்லா சநிரா குலயோ கவிதச்
சல்லா பவிநோ தனுநீ யலையோ
எல்லா மறவென் னையிழந் தநலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.

உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனு[ம்] நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.

மேலும் கேட்கும் ஆவலில் மூன்றாம் பாடலைப் படித்தேன்.
மன்னாரின் முகத்தில் ஒரு புதிய உற்சாகம் தெரிந்தது!
கண்களை மூடிக்கொண்டு பாடலை இரண்டு, மூன்று தரம் படிக்கச் சொல்லிக் கேட்டான்!
ஏதோ தியானத்தில் ஆழ்ந்தவன் போல் அவன் முகம் இருந்தது.
முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது!
'என்னோடு வா! இந்தச் சந்தடி இனிமே நமக்கு வேண்டாம்! நாயர்! நீயும் சீக்கிரமாக் கெளம்பி ஐயரு வூட்டாண்ட வா!' எனச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கலானான்! நானும் நாயரும் கூடவே நடந்தோம்.

'ஹோட்டல் சங்கீதா' தாண்டி தெற்கு வீதியில் திரும்பியதும், என் தோளில் கை போட்டுக்கொண்டு மயிலை மன்னார் பேசலானான்!

'இந்தப் பாட்டு ரொம்பவே ஒசத்தியானுது! சொல்றவங்க சொன்னா அப்பிடியே சொல்லிக்கினே போலாம்! அவ்ளோ மேட்டர் க்கீது இதுக்குள்ள!
இந்தப் பாட்டை புரிஞ்சுக்கறதுக்கு, எப்பிடிப் படிக்கணும்னு சொல்றேன் கேட்டுக்கோ! மிச்சத்த அப்பாலிக்கா ஐயரு வூட்ல வந்து சொல்றேன்!

கடசி வரிலேர்ந்து அப்பிடியே படிப்படியா மேல போயிப் பார்க்கணும் இத்த!
சுரபூபதியே! முருகா! நலம் சொல்லாய்!
இன்னா நலம்?
என்னை இள[ழ]ந்த நலம்!
என்னை இள[ழ]க்கணும்னா இன்னாத்தயெல்லாம் தொலைக்கணும்?
இது அதுன்னு எதுவுமே இல்லாம, எல்லாம் அற என்னை இள[ழ]ந்த நலம்!
இப்ப மொத ரெண்டுவரியையிம் சேர்த்துப் படிக்கணும்!
உல்லாசலேர்ந்து ஆரம்பிச்சு, நீயலையோ வரைக்கும்!

எங்கே நான் சொன்னமாரி சொல்லிக் காட்டு, பார்க்கலாம்' என்றான்

வரிகளைப் பார்த்துக்கொண்டே நானும் சொன்னேன்.

சுரபூபதியே! முருகா! எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்!
உல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ!

'சரிதான்!' என்பதுபோல நாயர் தலையாட்டினான்! சந்தோஷமாகச் சிரித்தான் மன்னார்.
பேசிக்கொண்டே சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையை அடைந்தோம். ஆளரவம் கேட்டு அவரும் வந்து மௌனமாக உட்கார்ந்தார்!
மன்னார் தொடங்கினான்!

'சுர பூபதி'ன்னு சொல்றாரு!
சுரர்னா ஆரு? நீதான் கொஞ்சம் திருப்புகள்[ழ்]லாம் படிச்சிருக்கியே! அதுல நெறைய வரும் இந்த வார்த்தை! 'சுரர்'னா தேவருங்க! 'பதி'ன்னா ராசா! 'பூ'ன்னா பூமி! ஒலகம்! 'பூபதி'ன்னா ஒலகத்துக்கே ராசா! எந்த ஒலகத்துக்கு? தேவருங்களோட ஒலகத்துக்கே ராசாவேன்றாரு!

இப்ப ஒனக்கு ஒரு டவுட்டு வரும்!
தேவருங்களுக்கெல்லாம் இந்திரந்தானே ராசா! இவுரு எப்பிடி ராசாவாக முடியும்னு!
சூரங்கிட்டேர்ந்து அல்லாரையும் வெளில கொணாந்து, இந்திரனுக்கு மறுபடியும் பட்டம் கட்ட வராரு நம்ம முருகன்!
அப்ப, அவன், 'எனக்கு இதெல்லாம் வோணாம் முருகா! நீயே ராசாவா இரு!'ன்னு சொல்லி, பொண்ணையும் கட்டிக் குடுத்திட்டு ஒக்கார வைச்சுடறான்!
அப்பாலிகா, இவுரு 'நம்ம வேலை நெறைய க்கீது! நம்மளோட அடியாருங்கல்லாம் காத்துக்கினு க்கீறாங்க! அதுனால, இங்க நமக்குத் தோதுப்படாது! நீயே ராசாவா இருப்பா!'ன்னு இந்திரன் கையுல சொல்லிட்டு கெளம்பிடறாரு!
அதான் இவுரு சுர பூபதி!

இப்ப ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க!
ஒரு மந்திரி இருக்காரு.
அவரு முன்னால அல்லாரும் சலாம் போட்டுக்கினு நிக்கறாங்க.
இப்ப முதல்மந்திரி அங்க வராரு.
அப்போ இன்னா ஆவும்?
இந்த மந்திரியே எளு[ழு]ந்திரிச்சு அவரு முன்னாடி கைகட்டிக்கினு, வாய் பொத்திக்கினு, பயபக்தியா நிப்பாரு!
முதல் மந்திரியும் அமத்தலா இந்தாளோட சேர்ல போயி குந்திக்குவாரு!
அதும்மாரித்தான் இதுவும்!
இவுரு எப்ப தேவலோகத்துக்கு வந்தாலும் தேவேந்திரன் எளுந்து தன்னோட நாக்காலியக் குடுத்திருவான்!
அதுனால... இவுரு சுரபூபதி!

ஆச்சா! இப்ப 'முருகா'ன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும்! 'அள[ழ]கு'ன்னு சொல்லலாம்! 'சின்ன வயசு'ன்னு சொல்லலாம்! எப்பிடிச் சொன்னாலும் முன்னே வந்து நிப்பான் முருகன்!

இதுக்கு முந்தின வார்த்தையப் பாரு!
'சொல்லாய்'னு வருது!
ரொம்பவும் இஸ்டமானவங்களத்தான் இப்பிடிக் கூப்புடுவோம்!
அதுலியும் முக்கியமா சின்னக் கொளந்தையா இருந்தா, 'சொல்லும்மா, எங்கண்ணுல்ல, சொல்லுவியாம்'னு இன்னான்னாமோ சொல்லிக் கொஞ்சுவோம்!
அதான் இந்தச் "சொல்லாய்"!

இன்னா சொல்லச் சொல்றாரு அருணகிரியாரு?

எல்லாமற என்னை இள[ழ]ந்த நலத்தை எனக்கு சொல்லித்தாப்பான்னு கொஞ்சிக் கொஞ்சிக் கேக்கறாரு!
இவுரே ஒரு கிளி! அதான் இதுவும் கொஞ்சுது!

'எல்லாம்'னா இன்னா?
சைவசித்தாந்தத்துல இந்த பஞ்ச பூதத்தப் பத்தியும், அதுனால வர்ற மத்த சமாச்சாரமும் அன்னிக்கு சொன்னேன்ல,
அந்த இருவதும் [ஐம்பூதங்கள்[5] ஐம்புலன்கள்[5],ஞானேந்திரியங்கள்[5], கன்மேந்திரியங்கள்[5]] வெளியே தெரியுது! மனம், புத்தி, சித்தம், அகங்காரம்னு உள்ளார க்கீற நாலும் சேர்ந்ததுதான் இந்த 'எல்லாம்'!

இதெல்லாம் அத்துப் போச்சுன்னாலும்,' நானு'ன்ற ஆணவமலம் மட்டும் வுடாம தொத்திக்கினே இருக்கும்! அத்தயும் தொலைச்சுட்டு, ஒரு தனி நெலைல இருக்கற அந்த சொகமான அனுபவத்த நீ எனக்கு சொல்லுன்னு கொஞ்சறாரு!

அந்த நெலையுல இன்னா ஆவும்னா, கண்ணு எத்தயோ பார்க்கும்! ஆனா பார்த்ததே தெரியாது! காது கேக்கும்! ஆனா கேக்குதுன்னு தெரியாது! புத்தி இருக்குன்னு புரியும்! ஆனா, அதுவா ஒண்ணுத்தியும் முடிவு பண்ணாது! இப்பிடி சொல்லிக்கினே போலாம்! அதும்மாரி ஒரு ஆளரவமே இல்லாத நெலையாம் அது! அதைச் சொல்லித் தாப்பான்னு முருகங்கிட்ட கொஞ்சிக் கேக்கறாரு!' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

****************
[தொடரும்]

Monday, February 7, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 2

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 2

'ம்ம். புள்ளையாரைக் கும்புட்டுக்கிட்டாச்சு! மேல அடுத்த பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

"நூல்"

1.
ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
சாடுந் தனியானைசகோ தரனே.

[ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே.]

இந்தப் பாட்டுங்கல்லாம் ஒரு அநுபூதி அனுபவத்தைச் சொல்ற பாட்டுங்கன்னு மட்டும் எப்பவுமே மனசுல வைச்சுக்கோ! ஒரு சில விசயம் கொஞ்சம் முந்திப் பிந்தி வரலாம்; இல்லேன்னா, ஒரு சிலது அப்பிடியே 'கடகட'ன்னு வரிசையாக் கொட்டலாம்! அதுனால, நான் சில சமயம் ஒரே ஒரு பாட்டுல ஒரு வரிக்கு மட்டுமே ஒளறிக்கினு இருப்பேன்! சில சமயத்துல, ஒரு அஞ்சாறு பாட்டுக்கு
ஒண்ணா வெளக்கம் சொல்லுவேன்! சரியா! நீ கண்டுக்காம கேட்டுக்கினே இரு!' என ஒரு பெரிய பீடிகையைப் போட்டுவிட்டு, மன்னார் தொடர்ந்தான்!

மொதப் பாட்டுல 'காப்பா' கணபதியப் பாடினாரு! ஆனாக்காண்டியும், இன்னும் அவரோட தாக்கம் தீரலை! நூலோட மொதப் பாட்டுலியும் அவரைக் கொணாந்து வைக்கறாரு! அப்பிடியே தான் சொல்லப்போற சமாச்சாரம் இன்னான்னும் இதுல ஒரு கோடி காட்டுறாரு!

ஒரு மூணு விசயத்த மொத வரியுல சொல்றாரு!

ஆடும் பரி, வேல், அணி சேவல்னு!

ஆடிக்கினே போற ஒரு பரி.... அதான், குதிரை, வேலு, அளகான ஒரு சேவலு!
முருகனைப் பத்தி நெனைச்சதுமே ஒன்னோட மனச்சுல வர்றதுதான் இந்த மூணுமே!

அதெப்பிடி குதிரை நெனைப்பில வரும்ன்றியா?
குதிரைன்னா இன்னா?
சவாரி பண்ற ஒரு வாகனம்!
ஆடு, மாடு, கோளின்னு எத்த நெனைச்சாலும் அதுங்கள வைச்சு ஒண்ணுத்துக்கும் மேலியும் ஒவ்வொரு நெனைப்பு வரும்!
ஆனாக்க, குதிரைன்னா, ஒடனே ஒண்ணே ஒண்ணுதான் ஞாபகத்துக்கு வரும்.
அதான்.... ஏறி சவாரி பண்ற ஒரு வாகனம்!

ஆனா, முருகனுக்கு எது வாகனம்?.... மயிலு!
சும்மா தத்தித் தத்திப் போவும் இந்த மயிலு!
மெய்யாலுமே மத்த பறவைங்க மாரி, பறக்கக்கூட முடியாது!
ஆனாலும், இத்த ஆரு வாகனமா வைச்சிருக்காரு? .... முருகன்!
அவரோட வாகனம் குதிரை மாரி பறக்குமாம்!

அது மட்டுமில்ல!
'இங்கே போயி அவனை அடிக்கணுமா? அங்க போயி அவனுக்கு ஆறுதல் சொல்லணுமா? அல்லாத்துக்குமே ரெடி'ன்றமாரி எப்பவுமே ஆடிக்கினே இருக்குமாம்! அதான் 'ஆடும் பரி'ன்னு சொல்லிப் பாடறாரு! அது இன்னா தெரியுமா?

ஒரு மயிலை நல்லா தோகை விரிச்சு ஆடறப்ப பாரு! அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி இருக்கும்! அப்பனுக்கே வெளக்கம் சொன்ன அந்த ஓமு "இப்ப எப்ப சாமியை ஏத்திக்கினு போவணும்"னு காலடியுல காத்துக்கினு க்கீது!
அது ஒரு பக்கத்துல!

அப்பாலிக்கா, இன்னோரு பக்கத்துல 'அணி சேவல்'னு வைக்கறாரு!
அளகான சேவலாம்!
ஆரு அது?
ஆணவம் புடிச்சு அலைஞ்ச சூரன்!
இப்ப இன்னா பண்றான்?
அடங்கி ஒடுங்கி சேவகம் பண்றான்!

இன்னாதான் ஆணவம் புடிச்சு அலைஞ்சாலும், இவன் எதுத்தாப்புல வண்ட்டா, அடங்கி ஒடுங்கி 'அம்பேல்'னு நிக்க வேண்டியதுதான்ற மாரி அந்தச் சேவலு நிக்குது! அதுவும் இன்னா சொல்லிக்கினு?
'வாங்கப்பா! வாங்க! அல்லாரும் வாங்க! வந்து இவரோட காலுல வுளுந்து சரணாகதி பண்ணுங்க' ன்னு சொல்றமாரி அந்தக் கொக்கரக்கோ சேவலு கூவிக்கினே க்கீது!
அது இந்தாப் பக்கமா!

நடுவுல 'வேலு'!
அதுக்கு ஆடும் பரின்னு சொன்னாரு! இதுக்கு அணிசேவல்னு சொன்னாரு!
ஆனாக்காண்டிக்கு, வேலுக்கு மட்டும் ஒண்ணுமே சொல்லலை!
ஏன்னு கொஞ்சம் நெனைச்சுப் பாரு!

வேல்னா இன்னா?
ஞானம்!
ஆரு குடுக்கறது அத்த?
அவந்தான் !... அந்த கந்தந்தான்!

உண்மைக்கு எப்பிடி பட்டம் குடுக்கறது?
உண்மை உணமைதான்!... மெய்யி மெய்யிதான்! ... ஞானம் ஞானந்தான்!
அந்த ஞானத்துக்கு, இது, அதுன்னு சொல்லி பெருமைப் படுத்தவே முடியாது!
அதான் ஒண்ணுமே சொல்லாம சும்மா 'வேலு'ன்னு மட்டும் சொல்லிடறாரு!
ஆகக்கூடி, மயிலு, , சேவலு, ...நடுவுல வேலு!

இந்த மூணைப் பத்தி மட்டுமே நான் எப்பவுமே பாடிக்கினு இருக்கணும்னு .... அதுவே என்னோட தொளிலா இருக்கணும்னு முருகன்கிட்ட வேண்டுறாரு அருணகிரிநாதரு!

அப்பிடி வேண்டறப்ப, கொஞ்சம் புள்ளையாரையும் கூடவே சேர்த்துக்கறாரு!
இன்னான்னு சொல்லி?

நீ முந்தி புள்ளையார் கதைன்னு ஒண்ணு எளுதினியே... அதுல ஒரு கதை வருமே...
அதாம்ப்பா.. தங்கிட்டியே வரம் வாங்கிக்கினு, தேவருமாருங்கள அல்லாம் எங்க எங்கன்னு தேடிப்போயி, தொல்லை பண்ணிக்கினே இருந்தானே, கஜமுகன்னு ஒரு ராட்சசன்....
அவனைத் தீர்த்துக் கட்றதுக்குன்னு புள்ளையாரை அனுப்பி வைச்சாரே நம்ம கபாலி!...
கெருவம் ஜாஸ்தியாப் போயி, எதுத்தாப்புல வர்றது ஒரு ஆனைதானேன்னு நெனைச்சு சண்டை போட்டானே கஜமுகாசுரன்! அந்தக் கதைதான்!

ஆனா, இவுரு இன்னா சாதாரண ஆனையா? தனி ஆனை! அதாவுது ஸ்பெசல் ஆனை!
இவுரப் போல ஒரு ஆனைய ஆருமே பாத்திருக்க முடியாது.... பார்த்ததும் கெடையாது!
தனின்னா இன்னா?

இவுருக்கு சோடி கெடையாது! அதும்னால தனி!
இவுரு ரொம்பவே விசேசமானவரு! அதுனாலியும் இவுரு தனி!
அல்லாரும் ஒருமாரி நெனைச்சா, இவுரு மட்டும் தனியா நெனைப்பாரு....
அப்பா அம்மாவச் சுத்திவந்து மாம்பளம் வாங்கின கதை மாரி... அதுனாலியும் தனி!
அதான், தனி ஆனைன்னு சொல்றாரு அருணையாரு... புள்ளையாரை!

அவரோட தம்பிதான் நம்ம கந்தன்!
இவுருகிட்ட ஒரு பக்கம் மயிலு!.... தேடி வந்து ஒதவுறதுக்காவ!
மறுபக்கம் சேவலு!..... ஆணவமே சேவகம் பண்ணும்ன்றதக் காட்றமாரி!
நடுவுல ஞானம்!......
இவுங்க ரெண்fடு பேரையும் கும்ப்ட்டுகிட்டா.... ஏன் அவருக்கு அனுபூதி கெடைக்காது?!
அதான் இந்த மொதப் பாட்டு!

ரொம்ப இளுத்துட்டேன்ல!?
மொதப் பாட்டுன்றதால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டேன்! இனிமே அடக்கி வாசிக்கறேன்,... இன்னா?' என கபடமின்றிச் சிரித்தான் மயிலை மன்னார்!
'நீ சொல்லு மன்னார்!' என உற்சாகப் படுத்தினேன் நான்!
****************
[தொடரும்]

Sunday, January 16, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்! -1

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

எனது கேள்விகளுக்கெல்லாம் விடையாக வந்து உதவும் எனது "நண்பன்"
மயிலை மன்னார், நாயர், சாம்பு சாஸ்திரிகள் பங்குபெறும் குறிப்புகளை இந்த
இழையில் அளிக்க நினைக்கிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!

[மயிலை மன்னார் பற்றிய ஒரு சிறு குறிப்பு! என்னுடைய பால்ய சிநேகிதன். தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் நல்ல நட்பு மலர்ந்து, அது இன்றும் தொடர்கிறது! மயிலாப்பூர் பகுதியில் ஒரு பேட்டை ரவுடியாக இவன் காலம் திசை மாறிப் போனாலும், எங்களது நட்பு இன்னமும் அப்படியேதான்
இருக்கிறது! பார்ப்பதற்கு முரடன் போல இருந்தாலும், மிகப் பெரிய விஷயங்களையும் அநாயசமாகச் சொல்லிவிடுவான்! நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடம் [எப்போவாவதுதான்!] மயிலை வடக்கு மாட வீதியில் இருக்கும் நாயர் டீக்கடை! நாயரின் மசால் வடையும் டீயும்
உலகிலேயே சிறந்த இரண்டு என நான் அடித்துக் கூறுவேன்! சாம்பு சாஸ்திரிகள் என்னும் மிகப் பெரிய வேத பண்டிதர் ஒருவர் இந்த மன்னாரின் பேச்சுக்கு அடிமை! இவனுக்கும் அவர் மீது நல்ல மதிப்பு உண்டு. இந்தச் சிறு குறிப்புடன் மேலே பயணிப்போம்! வணக்கம்.]

"கந்தர் அநுபூதி" -- 1

வழக்கம் போலவே கலகலப்புக்குக் குறைவில்லாது மயிலாப்பூர் மாடவீதி நிறைந்திருந்தது!

'மன்னாரைப் பார்த்தியா?' எனக் கேட்டபடியே நாயர் கடைக்குள் நுழைந்தேன்.

'ஞான் கண்டிட்டில்லா. எந்து சமாச்சாரம்?' என அக்கறையுடன் கேட்டான் நாயர்.

'ரெண்டு மசால்வடை, ஒரு டீ கொண்டா. சொல்றேன்' எனச் சொல்லிலிவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன்.

சற்று நேரத்தில் சூடான மசால்வடை, டீ சகிதமாய் என் முன் வந்து, டேபிளில் வைத்துவிட்டு, 'இப்ப பறையு!' என்றான்.

'ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான்' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு ஆட்டோவில் வந்து அலட்சியமாக இறங்கி உள்ளே வந்தான் மயிலை மன்னார்! என்னைப் பார்த்ததும் நேராக வந்தவன் என் முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.

'ம்ம்... இன்னா சமாச்சாரம்? சொல்லு!' என அமர்த்தலாகக் கேட்டான்.

ஒண்ணுமில்லை. பொங்கலும் அதுவுமா நல்ல நாளில் உன்னிடம் ஏதாவது கேட்கலாமே என வந்தேன். அதுக்காக நீதான் புதுசா ஒண்ணு சொல்லணும்' என்றேன்.

'இவ்ளோதானே! அல்லாம் நல்லபடியா நடக்கும்! கவலிய வுடு! எத்தத் தொடங்கினாலும் புள்ளையாரை வைச்சுத்தான் தொடங்கணும். அதுக்காப்பால, ஒனக்கு ரொம்பவும் இஸ்டமான முருகனைச் சொல்லணும்.

அதுனால, கந்தரனுபூதி பத்தி சொல்றேன் கேட்டுக்கோ. அருணகிரிநாதரு முருகனைக் கும்பிட்டு ஆருக்கும் கெடைக்காத ஒரு அற்புதமான உணர்வை அடைஞ்சாராம். அதுக்கு அனுபூதின்னு பேரு.

'அனு'ன்னா ஒரு விசயத்த உணர்றபோது உள்ளுக்குள்ள வர்ற ஒரு ஆனந்தம்.
'பூதி'ன்னா இந்தப் பஞ்சபூதத்த இன்னான்னு அறிஞ்சுகினு கெடைக்கற ஞானம்!
ஆகக்கூடி, 'அனுபூதி'ன்னா ஞானத்த உணர்றதுனால கெடைக்கற ஆனந்தம்னு சொல்லலாம்.

இதெல்லாம் தெரியலைன்னாலும் கூடப் பரவாயில்ல. இத்தப் படிச்சாலே, ஒனக்குள்ள ஒரு ஆனந்தம் பொறக்கும்! அதுக்காவ மட்டுமே இத்தப் படிச்சாலே ஒனக்கும் ஒரு தெளிவு கெடைக்கும். அதுனாலத்தான், இத்தச் சொல்லலாம்னு நெனைக்கறேன்! சரி, ஒங்கிட்ட அந்தக் குட்டிப் பொஸ்தவம்
இருக்குமே! அதுலேர்ந்து அந்த மொதப் பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

படித்தேன்!

திருச்செந்திலாதிபன் துணை
கந்தரநுபூதி - 1

'காப்பு'

நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்.

[ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.]

"எப்ப ஒனக்கு ஒரு கஸ்டம் வந்தாலும் நீ இன்னா பண்றே? ஒடனே 'முருகா ஒன்னிய வுட்டா கெதியில்ல எனக்கு! நீதான் காப்பாத்தணும்'ன்னு ஒரு சவுண்டு வுடறே! அவனும் இன்னா பண்றான்?
'நான் இருக்கக்கொள்ள ஒனக்கு எதுக்குரா பயம்?'னு அந்த ஆறுமுகசாமி ஆறுதலா வந்து ஒனக்கு ஒரு தெளிவைக் குடுக்கறாரு!

அந்த முருகன் மேல நம்ம அருணகிரிநாதரு பாட்டாலியே ஒரு மாலை கட்டறாரு. தானா அப்பிடியே வந்து வுளுந்த வார்த்தையால கட்டின மாலை! இந்த மாலையப் படிச்சா இன்னா ஆவும்னும் சொல்றாரு.

பலான பலான விசயத்தையெல்லாம் பார்த்துப் பார்த்துக் கல்லாயிப் போயிட்ட ஒன்னோட மனசு, அப்பிடியே ஒரு பாகு மாரி கொளைஞ்சு போறமாரி ஆயிருமாம்...இத்தப் படிச்சாலே..... அந்தமாரி ஒரு மாலை!

அப்பிடி எளுதின இந்தப் பாட்டுல்லாம் எப்ப ஒசந்ததா ஆயிப்போவும் தெரியுமா?
நாலு கையோட கூட, அஞ்சாவது கையா ஒரு தும்பிக்கையும் வைச்சுக்கினு ஆத்தங்கரையிலியும், அரசமரத்தடியிலியுமா குந்திக்கினு க்கீறாரே, அந்தப் புள்ளையாரோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினு தொடங்கற எந்தக் காரியமும் கெலிச்சிரும்! அதுனால, அவரோட காலடியுல போயி
இத்தை வைச்சு,'நீதான் இத்த நல்லபடியா ஆக்கித் தரணும்'னு தொடங்கறாரு. அதான், இதுக்கு 'காப்புச் செய்யுள்'னு பேரு.

இப்பவும் அப்பிடித்தானே இன்னைக்குன்னு பாத்து, சினிமா, பீச்சுன்னு அலையாம எங்கையுல வந்திருக்கே? ஒரு கொறைவும் வராது" என ஆதரவாய் என்னைத் தட்டிக் கொடுத்தான் மயிலை மன்னார்.

'கணபதி எல்லாம் தருவான்!' என்னும் புத்துணர்வோடு மேலும் கேட்கத் தயாரானேன் நான்!
************
[தொடரும்]
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
****************

Tuesday, July 13, 2010

அ. அ. திருப்புகழ். -- 39 -- 'துப்பாரப்பா'

அருணையார் அருளிய திருப்புகழ். -- 39

சந்தத்தின் சிறப்பே திருப்புகழின் சிறப்பு! சந்தத்திற்குள்ளும் ஒரு பொருளை
வைத்துப் பாடுவதே திருப்புகழின் பெருஞ்சிறப்பு! அதனை விளக்கும் ஒரு புகழே இந்தத் திருப்புகழ்!
ஐம்புலன்களை அடக்கி, உடலை ஒடுக்கி, அறிவுக்கும் எட்டாத அவனை அடைவது எப்படி என
இந்தத் திருப்புகழ் மெய்யுற விளக்குகிறது! வாருங்கள்! பகிர்வோம்!

முருகனருள் முன்னிற்கும்!

********** பாடல் ************

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான


துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
*********************

************ பொருள் ************

[வழக்கம்போல் முன் பார்த்துப் பின் பார்க்கலாம்!]


தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தப்பாமல் பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக் களைவோனே

நாளென்செயும் வினைதான் என்செயும்
எனச் சொல்வார் நாமாரும் குமரனைப் பாடினால்

நாடோறும் தவறாமல் நல்லோனைப் பாடிவந்தால்
தீராத வினையெல்லாம் தீர்த்துவைக்கும் முருகோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

தற்கு ஆழிச் சூர் செற்றாய்
மெய்ப் போதத்தாய் தணிகைத் தனிவேலா

எனை மிஞ்சி எவருமிலை எனும்
அகந்தையினைத் தான் கொண்டு

ஆயிரத்தெட்டு அண்டங்களையும்
ஆளுகின்ற ஆக்ஞா சக்கரத்தால்

அனைத்துலகும் ஆண்டுவந்த சூரபதுமனை
தனிவேல்விடுத்து வெற்றிகொண்டவனே

சிவஞான வடிவேயான மெய்ப்பொருளோனே
தணிகைமலை வீற்றருளும் தண்டபாணித் தெய்வமே!

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அப்பாகைப் பாலைப்போல் சொல்
காவல் பாவை தனத்து அணைவோனே

பரண்மீது நின்று பறவைகளை விரட்டுதற்காய்
'சோ...சோ...'வெனத் தீங்குரல் எழுப்புகையிலும்

'ஆரடா நீ'யென்று வேடனாய் வந்தவனை
விரட்டுமொழி பேசுகையிலும்

'தேனுண்டு தினையுண்டு தின்றுபசி தீர்ந்திடவே
வா'வென்று வந்தவொரு கிழவனையே உபசரிக்கையிலும்

'ஆனைமுகா சரண'மென அண்ணனையே அழைத்தங்கு
காமுற்ற கிழவனையே வெருட்டிநின்ற போதினிலுமே

தீம்பாகாய்க் குரலெழுப்பி சிந்தைமனம் கவர்ந்தவளாம்
நம்பியவன் திருமகளாம் வனக்குறத்தி வள்ளியவள்

தினைப்புனத்தைக் காவல்செய்த தீதில்லா தெய்வமகள்
த்னமணைத்து தினம் மகிழும் தனிப்பெருந் தெய்வமே!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

து பார் அப்பு ஆடல் தீ மொய்க் கால்
சொல் பா வெளி முக்குண மோகம்
துற்றாய பீறல் தோல் இட்டே
சுற்றா மதனப் பிணிதோயும்

பயிர் விளைந்து உணவுநல்கும் நிலமும்
உயிர் நிறைக்க உவந்தளிக்கும் நீரும்

கீழிருந்து மேலெழும்பி அசைகின்ற தீயும்
மெய்தழுவி நமையணைத்து வீசுகின்ற காற்றும்

சொல்லுக்கும் அடங்காது பரந்திருக்கும் வான்வெளியும்
சத்துவம் ராஜஸம் தாமசம் என்கின்ற முக்குணமும்

மண் பெண் பொன் என்னும் மூவகையாம் ஆசைகளும்
நெருக்கமாய் உள்ளுள்ளே ஒடுக்கமாய் வைத்திருந்து

ஒன்பது ஓட்டைகள் அடங்கிய தோலால்
நன்றாகச் சுற்றி மூடிய இவ்வுடம்பில்

கூடவே பிணைத்திருக்கும் காமமெனும் நோயும்
தோய்ந்திருக்கும் எப்போதும் எமையே வாட்டிநிற்கும்


இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

இப் பாவக் காயத்து ஆசைப்பாடு
ஏற்றே உலகில் பிறவாதே

நிலம்புகுந்து பயிரழிக்கும் திருட்டு மாட்டுக்குக்
கட்டையொன்றைக் கட்டியங்கே அனுப்புதல்போல்

வினைநிறைந்த காரணத்தால் விளைகின்ற இவ்வுடம்பும்
ஆசைகளைக் கூட்டிவந்து அல்லலுற வந்ததிங்கே

பாவம்நிறைப் பொய்யுடம்பைப் பெற்றிங்கே வாழாமல்
மீண்டுமொரு பிறப்பிங்கே இனிமேலும் நிகழாமல்


எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

ஏத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

நின்புகழை நாடோறும் நித்தமிங்கே பாடாதார்
ஆரவாரக் கல்விஞானம் பெற்றதனால் கிட்டாத

அன்பிலார்க்கு என்றுமிங்கே எட்டாது நின்றிருக்கும்
அன்புருவாய் நிறைந்திருக்கும் நின்னருளைத் தரவேண்டும்!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!
**********************

********* அருஞ்சொற்பொருள் **********

து = உணவுப் பொருள்,
பார் = அதை நல்கும் பூமி
அப்பு = நீர்
ஆடல் தீ = அசைகின்ற நெருப்பு
சொல் பா வெளி = சொற்களால் புகழப்படுகின்ற ஆகாய வெளி
துற்றாய = நெருக்கமாய் வைக்கப்பட்டுள்ள
பீறல் = கிழியல்
பாவக் காயம் = பாவ மூட்டையான உடம்பு
எத்தார் = ஏத்தார் = போற்றிப் பாடாதார்
வித்தாரத்தே = ஆரவாரமான கல்வி ஞானம்; அகம்பாவக் கல்வி ஞானம்
தற்கு = தருக்கு; செருக்கு; ஆணவம்
ஆழி = ஆக்ஞா சக்கரம்
செற்றாய் = அழித்தவரே
பாகைப் பால் = பாகு + பால்; இனிமை
அத்தா = குரு; மூத்தோன்
நித்தா = என்றும் நிலைத்திருப்பவன்
முத்தா = ஆசா பாசங்களில் இருந்து நீங்கியவன்
சித்தா = சித்துக்களை உடையவன்
*************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

"அ. அ. திருப்புகழ்" - 'வாசித்துக்....' -- 38

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 'வாசித்துக்....' -- 38

எல்லாம் வல்ல வயலூர்க் குமரனை, அருகிலிருக்கும் திருசிராப்பள்ளியில் உறை தாயுமான சுவாமிக்கும் தலைப் பொருளாக வைத்து இந்த அழகிய திருப்புகழ் பின்னப்பட்டிருக்கிறது. பல உயர்ந்த விஷயங்கள் இந்தப் புகழிலே தெரிவிக்கிறார் அருணையார்! பலமுறை படித்துணர்ந்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய திருப்புகழ் இது! தேடித் தேடொணாப் பெரும்பொருள் எவருக்காகத் தானே இறங்கி வந்து ஆட்கொள்வான் என்பது இதனுள் இருக்கும் மறைபொருள்! ஓதுதற்கும் இனிமையான சந்த அமைப்பில் நம் மனம் கவரும் வகையில் இதனைப் படைத்திருக்கிறார் அருணகிரிநாதப் பெருமான்!

முருகனருள் முன்னிற்கும்!

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன ...... தந்ததான

......... பாடல் .........

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது

வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது

மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது

லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி

யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய

லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட

ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்

நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை

நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன ...... தந்ததான

......... பொருள் .........

[வழக்கம்போலவே, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]

"ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே"

[ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல்
ஆகிப் பொற்பாதமே பணி ...... கந்தவேளே ]


உளமார மனமாரத் தனைநினைந்து நெக்குருகி
உடல்வாட உளம்வாட மலைக்காட்டுத் தினைப்புனத்தில்

கவணாடக் கல்லெறிந்து புள்ளினங்கள் பறந்தோடக்
வண்டாடும் முகம்வாட வெய்யிலிலே தினம் வாடும்

வனநாட்டு வேட்டுவச்சி மலைக்குறத்தி வள்ளிக்கென
உடனாடும் துணைவிட்டுத் தனியாகக் கால்நடையாய்க்

கானகத்தே காதலியைத் தேடிவந்து அருள்செய்து
தனைநாடிக் கால்நொந்த தமிழ்மகளின் பொற்பாதம்

தனைக்காணப் பலவேடம் புனைந்திருந்து தொழுதாடி
வேடனாக வந்திருந்து வேங்கைமரம் தானாகி

விருத்தனாகிப் பசிதீரத் தினைமாவும் தேனுமுண்டு
நாவறண்டு மயிலாடும் கானகத்தே புனலாடத்

துணைநாடித் தமையனையும் கரியாக வரவேண்டி
வளையாடும் கைகளுக்கு வளையடுக்கும் செட்டியாகி

வஞ்சியவள் கைப்பிடித்து தம்வேடம் தனைக்காட்டிப்
கொஞ்சுமுகக் குறவள்ளியைக் கவர்ந்தங்கு செல்கையிலே

போரிட்டப் பெற்றவனைப் பொருதிநின்று முடிசாய்த்து
மீண்டுமவர் உயிர்ப்பிக்கக் குறவள்ளிக் கருள்செய்து

பொன்மயிலாள் பொற்பாதம் மையலுடன் தான்பணிந்து
தனைவேண்டிய அடியவளை ஆட்கொண்டக் கந்தவேளே!


"ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா"

[ஆலித்துச் சேல்கள் பாய் வயலூரத்தில் காளம் ஓடு அடர்
ஆரத்தைப் பூண் மயூர துரங்க வீரா]

மேடுயர்ந்த வயலினிலே மிகவாக வளங்கொழிக்க
ஓடுகின்ற நீரினிலே ஆரவாரம் மிகவெழுப்பி

ஆடுகின்ற மீன்கள்நிறை வயல்சூழும் வயலூரில்
சீறுகின்ற கொடுவிடத்தைக் கொண்டிருக்கும் நச்சரவம்

மாலையாகத் தானணியும் மயில்மீது தீரமுடன்
பரிதிமீது அமர்ந்திருக்கும் வீரனெனக் காட்சிதரும்

பெருமையுள்ள வயலூர்க் குமர வேளே!


"நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா"

[நாசிக்குள் ப்ராணவாயுவை ரேசித்து எட்டாத யோகிகள்
நாடிற்றுக் காண ஒணாது என நின்ற நாதா]


வலக்கால் பெருவிரலில் மூண்டெழும் இடைக்கலை

இடக்கால் பெருவிரலிம் தானெழும்பும் பிங்கலையும்

மேனோக்கிப் புறப்பட்டுக் கொப்பூழில் தாம் பிணைந்து

இடப்பக்கம் இடைகலையும் வலப்பக்கம் பிங்கலையுமாய்

முதுகு,பிடர்,தலைவழியே மூக்கினிலே முடிந்திருக்கும்


வலநாசித் துவாரத்தால் பிங்கலையும் வெளியேறும்

இடநாசித் துவாரத்தால் இடைகலையும் தான்செல்லும்

உள்ளிழுக்கும் சுவாசமோ பூரகம் எனப்படுமே

வெளியேறும் சுவாசமும் ரேசகம் எனப்படுமே

உள்நிறுத்தும் காற்றினையே கும்பகம் எனச்சொல்வர்


உட்கொள்ளும் சுவாசத்தை உச்சிக்குக் கொண்டுசென்று

ஸகஸ்ராரம் சேர்கையிலே அமுதமது உருவாகும்

இதுபுரியும் ஊட்டத்தால் உள்ளுணர்வு உனில்பிறக்கும்

ஆறுவகை ஆதாரமும் ஒருவருக்கு வசப்படுமே


முறையான குருமூலம் சரியாகக் கற்றவரே

இதன்சூக்குமம் அறிந்திடுவார் முறையான பலன்பெறுவார்!

ஆதார வாயுவினை இவ்வண்ணம் பயிலாத

யோகியரும் ஞானியரும் எத்துணைதான் விரும்பினாலும்

காணுதற்கு அரிதாகி அப்பாலுக் கப்பாலாகிக்

காணவொட்டாப் பரம்பொருளே! தனிப்பெரும் தலைவனே!


"நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே."

[நாகத்துச் சாகை போய் உயர் மேகத்தைச் சேர் சிராமலை
நாதர்க்குச் சாமியே சுரர் தம்பிரானே.]


ஓங்கி உயர்ந்திருக்கும் பெருமலையின் கிளைச்சிகரம்
நீண்டிருந்து மேலெழும்பி வானிருக்கும் மேகத்தைச்

சேர்ந்தடையும் வண்ணம்போல் சிறந்திருக்கும் சிராப்பள்ளி
மலையினிலே குடியிருந்து அடியவர்க்கு அருளிடவே

பெருவெள்ளம் தாண்டிவந்து தான்பெற்ற மகள்துடிக்கும்
நிலையினையே காணவொண்ணாத் தாயவளின் துயர்கேட்டுத்

தானேதாயாக அக்கரைசென்று மகப்பேறுத் தாதியாகச்
சென்றருளிய தாயுமான சுவாமிக்கு உயரியபொருளே!


"வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது"

[வாசித்துக் காண ஒணாதது பூசித்துக் கூட ஒணாதது
வாய்விட்டுப் பேச ஒணாதது]

எத்தனைநூல் கற்றாலென்ன எவையெவையோ படித்துமென்ன
அத்தனையும் பயன்தாரா அனுபவமே கைகொடுக்கும்

எத்தனைமலர் கொண்டிங்கே நானுன்னை அர்ச்சித்தும்
அத்தனையும் உன்தாளிணை சேர்ந்திடுமோ அறியேனே

எத்தனையோ பெருமைகளைச் சொல்லியுனைப் பாடினாலும்
அத்தனையும் நின்பெருமை சொல்லுதலும் கூடிடுமோ

"நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது"

[நெஞ்சினாலே மாசர்க்குத் தோண ஒணாதது நேசர்க்குப் பேர ஒணாதது
மாயைக்குச் சூழ ஒணாதது]


வெளிப்பார்வை வேடமிட்டு மனத்தினிலே மாசுவைத்து
ஒளித்திங்கு வாழ்வோர்க்கு பாலுள்ளேநெய்போல மறைந்திருக்கும்

தனைநினைந்து தினமுருகித் தணியாதக் காதலுடன்
மனமிருந்து நீங்காது என்றென்றும் வீற்றிருக்கும்

ஓயாது நிதமுழற்றி ஓராயிரம் உருக்காட்டும்
மாயையினால் வளைத்திடவே எந்நாளும் முடியாதது


"விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது"

[விந்துநாத ஓசைக்குத் தூரமானது மாகத்துக்கு ஈறு தான் அது
லோகத்துக்கு ஆதி ஆனது]

தத்துவங்கள் முப்பத்தாறில் முடிவான விந்துநாதம்
அத்தனையும் கடந்தங்கே தொலைவினிலே பொலிந்திருக்கும்

பூதவெளி கடந்திருக்கும் முடிவினிலே ஒளிர்ந்திருக்கும்
விண்வெளிக்கும் அப்பாலாய்த் தானிருந்து திகழ்ந்திருக்கும்

அண்டத்தில் நிலவுகின்ற எண்ணிறைந்த உலகங்கள்
அத்தனைக்கும் முதலாக விளங்குகின்ற மெய்ப்பொருளை


"கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ"

[கண்டு நாயேன் யோகத்தைச் சேருமாறு மெய்ஞ்ஞானத்தைப் போதி யாய்
இனி ஊனத்தைப் போடு இடாது மயங்கலாமோ]

நாயினேன் யானும் உள்ளுக்குள் கண்டுணர்ந்து
சிவயோகம் என்கின்ற பேருணர்வை அடையுமாறு

மெய்ஞ்ஞானப் பொருளதுவை உபதேசம் அருளிடுவீர்
பொய்யான மேனியிதை வெறுக்காமல் மயங்குவதோ?
[வாணாளை வீணாகக் கழிப்பதுவும் தகைமையோ?
மெய்யான தெய்வமே! இதுவுமுனக்கு முறைமையோ?]
***************

........ அருஞ்சொற்பொருள்..........

மாகம் = விண் முடிவு
ஊனம் = பொய்யான உடம்பு
போடு = வெறுத்து ஒதுக்குதல்
ஏனல் = தினைப்புனம்
மயல் = மையல் என்பதன் திரிபு
ஆலித்து = ஆரவாரம் செய்து
சேல் = மீன்
காளம் = விடம்
அடர் = நிறைந்த
ஆரம் = மாலை
ரேசித்து = வெளிவிடுத்து மீண்டும் பூரகம் செய்து சஹஸ்ராரப் பெருவெளியை எட்டுதல்
நாகம் = ஆகாயம்
சாகை = சிகரம், கிளை
சுரர் = தேவர்
*****************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***************

"அ.அ.திருப்புகழ்" 37 -- "கள்ளக் குவாற் பை"

"அ.அ.திருப்புகழ்" 37 -- "கள்ளக் குவாற் பை"

திருப்புகழின் ஞான விளக்கங்களையெல்லாம் படிக்கிறபோது, மேலெழுந்தவாரியாக நான் எழுதிப் போகும் விளக்கம் எனக்குள் ஒரு அச்சத்தை தோற்றுவிக்கிறது! ஒவ்வொரு புகழுக்குள்ளும் ஓராயிரம் மறை பொருள் ஒளிந்திருக்கையில், நுனிப்புல் மேய்வது சரியோ என! 'உனக்குத் தெரிஞ்சதைத்தானே நீ செய்ய முடியும்!' என உள்ளேயிருந்து ஒரு குரல் வர, ராமர் பாலத்து அணில் போல என் பணியைத் தொடர்கிறேன். முருகனருள் முன்னிற்கும்!

அடுத்து என்ன எழுதலாம் எனப் புரட்டியபோது, முதலில் கணணில் பட்டது இந்த வள்ளிமலைத் திருப்புகழ்! சந்தம் இதுபோல எவரால் எழுத முடியும் என்பதுபோல அமைந்திருக்கிறது! பொருளோ அதற்கும் மேலே ஒரு படி போய், இவ்வுடம்பின் அநித்தியத்தைப் புட்டு வைக்கிறது. இதற்கு இடையில் ஒரு அருமையான உபதேசமும் இதில் ஒளிந்திருக்கிறது! எப்படி பக்தி செய்தால் முருக தரிசனம் கிட்டும் என அருணையார் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார்! முதலில், பாடலைப் பார்ப்போம்!

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த

தய்யத்த தாத்த ...... தனதான

......... பாடல் .........

கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச


அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே


வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

************************

-------- பொருள் --------
[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்திமாற்கும்
வெள் உ[ந்]த்திமாற்கும் மருகோனே

"தெள் அத்தி சேர்ப்ப"

செயலாக்கம் செய்வதற்கோர்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
கிரியா சக்தியின் வடிவமான
தெளிந்த நல்லறிவு மிக்க
தெய்வயானையின் தலைவரே!

"வெள் அத்திமாற்கும் மருகோனே"

வெள்ளையானையெனும் ஐராவதத்தைப்
பட்டத்துயானையாய்க் கொண்டிருக்கும்
தேவலோக அரசனான தேவேந்திரனின்
மகளை மணந்ததனால் மருமகனாகியும்,

"வெள் உ[ந்]த்திமாற்கும் மருகோனே"

வெண்ணிறம் பொங்கிப் பெருகும்
பாற்கடலிற் பள்ளிகொண்டதிருமாலின்
தங்கை மகனாய்ப் பிறந்ததனால்
அவருக்கு மருகனுமான முருகனே!


சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே

சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள்
அத்த மார்க்கம் வருவோனே

மனவிருப்பு மிகக்கொண்டு
தினைகாத்த குறமகளை
வண்டினங்கள் சூழ்ந்திருக்கும்
வனத்தினிலே நிறைந்திருக்கும்
புள்ளினத்தைக் கொல்கின்ற
வேடுவர்கள் வாழ்ந்திருக்கும்
நெடுங்காட்டில் நடந்துசென்று
தேடியலைந்து திரிந்திட்ட பெருமானே!

வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க
வல்லைக்குள் ஏற்றும் இளையோனே

"வள்ளிச் சன்மார்க்கம்"

மனங்கவர்ந்த மன்னவனை
வனவேடன் வடிவினனை
கிழவேடம் தாங்கிவந்து
தினையள்ளித் தின்றவனைத்
தீரா விக்கலினால் தொண்டைதிணறச்
சுனையள்ளிக் குடித்தவனை
ஆனையண்ணன் உதவிகேட்டு
அரவணைத்துக் கொண்டவனை
வானோர்க்கும் வல்லபிரானை
மனதினிலே எண்ணியெண்ணித்
தன்னை மறந்துத் தலைவன் தாளே
தலைப்பட்டு நின்றிருந்தக் குறமகளைத்
தானே தேடிவந்து ஆட்கொண்ட அருளாளன்
தன்னை இழந்து "அவனை" நினைந்தவரை
முன்னின்று ஆட்கொள்ளும் மார்க்கமே
வள்ளிச் சன்மார்க்கமெனும் மறைநெறியாம்!

"விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே"

குறவள்ளி கடைபிடித்த
சன்மார்க்க நெறிதன்னைச்
சிவனாரும் வேண்டிடவேத்
தந்தைக்கும் அந்நெறியைக்
கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
அவர் செவிக்குள் உபதேசம்
செய்திட்ட இளையவனே!

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

வள்ளிக் குழாத்து வள்ளி கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!

வள்ளிக்கொடி படர்ந்திருந்து
பக்கமெலாம் நிறைந்திருக்கும்
வள்ளிமலையெனும் மலைக்காட்டில்
தினைப்புனத்தைக் காக்கவந்து
தின்னவரும் புள்ளினத்தைக்
கவண்கல்லை வீசியெறிந்து
'சோசோ'வென ஆலோலம் பாடிய
வள்ளிக்குறத்திக்குக் கணவனாய்
வாய்த்திட்ட பெருமையுடையோனே!


கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

"கள்ளக் குவால் பை"

பொய்,சூது, வஞ்சனையெனும்
கள்ளத்தனங்களால் நிறைந்த பை

"தொள்ளைப் புலால் பை"

ஒன்பது ஓட்டைகளை வைத்த
மாமிசத்தால் ஆன பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை

"துள் இக்கனார் கயவு கோபம் கள் வைத்த தோல் பை"

இங்குமங்கும் அலைந்து திரிந்து
துள்ளுகின்ற கரும்புவில்லைக் கொண்ட
மன்மதனால் உண்டாகும் அயர்வு,
கோபமெனும் தீய கள்ளைத் தன்னுள்ளே
வைத்திருக்கும் தோலாலான பை

பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ......

"பொள் உற்ற கால் பை"

இங்குமங்குமாய் வெகுவேகமாய்
உள்ளுக்குள் அலைகின்ற
பத்து விதக் காற்றடைத்த பை

"கொள்ளை துரால் பை"

வீசுகின்ற காற்றினிலே
செத்தையென அலைகின்ற
சருகான இலைபோலக்
கூற்றுவன் கயிறுவீசிக்
கொள்ளை கொண்டுபோம் பை

பசுபாச

அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சா

"பசு பாச அள்ளல் பை"

பசுவென்னும் ஆன்மாவும்
பாசமென்னும் ஆணவமும்
சேர்ந்தடைத்த சேற்றுப் பை

"மால் பை"

ஆசை, காமமென்னும்
மயக்கங்கள் நிறைந்த பை

"ஞெள்ளல் பை"

பாவங்களும் குற்றங்களும்
நிறைந்திருக்கும் பை

"சீ பை"

சீழ் நிறைந்த பை

"வெள் இட்ட அசா"

தளர்ச்சி மிகுந்த பை

பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ

"பிசிதம் ஈரல் அள்ள சுவாக்கள் சள் இட்டு இழா
பல் கொள்ளப்படு ஆக்கை தவிர்வேனோ"

உயிரிழந்து போனபின்னே
சடலத்தில் மிகுந்திருக்கும்
இறைச்சி, ஈரல் எனும் உறுப்புகளை
அள்ளியுண்ணவரும் நாய்கள்
'சள்'ளென்று குலைத்தும், இழுத்தும்
பற்களால் கடித்துக் குதறும்
இவ்வுடம்பை ஒழிக்கமாட்டேனோ?
********************

அருஞ்சொற்பொருள்

குவால்= கூட்டம்
தொள்ளை= ஓட்டை
புலால்= மாமிசம்
இக்கன் = கரும்பு வில்லை உடைய மன்மதன்
கள்= மயக்கம் தரும் பானம்; கோபமும் மயக்கத்தைத் தரும்
பொள்= வேகத்தைக் குறிக்கும் சொல்
கால்= காற்று
துரால்= செத்தை, சருகு
மால்= மயக்கம்
ஞெள்ளல்= குற்றம்; சோர்வு; பள்ளம்
அசா= தளர்ச்சி
பிசிதம்= இறைச்சி
சுவா= நாய்
ஆக்கை= உடம்பு
தெள்= தெளிந்த அறிவு
அத்தி= யானை; தெய்வானை
உத்தி= உந்தி= கடல்
சிள்= சிள் வண்டு
கிரார்= கிராதகர்; வேடர்
புள்= பறவை
அத்தம்= காடு
மார்க்கம்= வழி
விள்= விளக்கிச் சொல்
ஐ= தந்தை
வல்லை= விரைவு, வேகம்
நோக்கம்= கண்ணிமைக்கும் நேரம்
************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 36 "ஏது புத்தி ஐயா எனக்கு?"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 36 "ஏது புத்தி ஐயா எனக்கு?"


திருத்தணி வாழ் முருகப் பெருமானைப் புகழ்ந்து அமைந்திருக்கும் இந்தப் பாடலைப் படித்தவுடன் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் இதுதான்!
அருணகிரிநாதர் மகா குறும்புக்காரர்!

மிக மிக எளிய, படித்தாலே எவராலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பாடலை இயற்றிவிட்டு, சந்தத்தில் அதனைப் போடும் போது, இங்குமங்குமாய்ப் பல இடங்களில் கூட்டிச் சுருக்கி, ஏதோ ஒரு கடினமான பாடல் போலத் தோன்றுமாறு இதனை அருளியிருக்கிறார்!
பொருள் விளக்கம் என ஒன்றுகூட இப்பாடலுக்கு அநேகமாகத் தேவையிருக்காது! பதம் பிரித்தபின், வெகு எளிதாகப் புரியும் பாடல் இது!
முதலில் பாடலையும், பின்னர், அதனைப் பதம் பிரித்தும் பார்க்கலாம்!



தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

ஏது புத்திஐ யாஎ னக்கினி

யாரை நத்திடு வேன வத்தினி

லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்


றேயி ருக்கவு நானு மிப்படி

யேத வித்திட வோச கத்தவ

ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்


பாதம் வைத்திடை யாதே ரித்தெனை

தாளில் வைக்கநி யேம றுத்திடில்

பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்


பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்

யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ

பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ


ஓத முற்றெழு பால்கொ தித்தது

போல எட்டிகை நீசமுட்டரை

யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே


ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்

மான்ம ழுக்கர மாட பொற்கழ

லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே


மாதி னைப்புன மீதி ருக்குமை

வாள்வி ழிக்குற மாதி னைத்திரு

மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே


மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ

லார்வி யப்புற நீடு மெய்த்தவர்

வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன ...... தந்ததான

****************

......... பொருள் .........

[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்! ]

ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே


ஓதம் உற்று எழு பால் கொதித்தது போல
எண் திகை நீச முட்டரை ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள்கோவே

நீர்கலந்தபாலை நெருப்பின்மீதுவைக்க
அது சூடாகிக் கொதித்து வரும்வேளை
நீர்வற்றிப் பாலெழுந்து பொங்குதல்போல்,
எட்டுத்திசையிருந்தும் ஈசல்போல் அழிந்துபடப்
போர்செய்யவந்த இழிந்த மூடரான அசுரரை
வெட்டிக் கொன்றிட்ட சூரியவொளிபோலப்
பிரகாசிக்கும் சக்திவேலைக் கையேந்திய
எங்கள் தலைவனே!

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே


ஓத மொய்ச்சடை ஆட உற்றுஅமர் மான் மழுக்கரம் ஆட
பொன்கழல் ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே

நீர்பெருகும் கங்கைநதி பொருந்திவரும் சடைமுடியாட
எழிலாகப் பொலிந்திருக்கும் மான் ஒருகரத்திலும்
மழுவென்னும் ஆயுதம் தாங்கிய மறுகரமும் அசைந்தாட
தாளகதி தவறாத நாட்டியத்தால் அசைந்தாடும்
பொன்னாலாகிய வீரக்கழல் இசைந்து ஒலிக்கவும்
ஆனந்த நடனமாடும் சிவனார் தந்த எங்கள்பெருவாழ்வே!

மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே


மா தினைப்புனம் மீது இருக்கும் மை வாள் விழிக் குறமாதினைத்
திரு மார்பு அணைத்த மயூர அற்புத கந்தவேளே

நம்பிராஜன் தினைப்புனத்தில் கவண்கல் வீசியள்ளும்
மைதீட்டிய வாள்போலும் விழிபடைத்த குறவள்ளியை
அன்புறத் தழுவி மாரணைத்துக் கொள்ளும் மயில்வாகனனே
அளப்பரிய ஆற்றலுடைக் கந்தனெனும் அரசனே!
அனைவராலும் விரும்பப்படுகின்றவரே!

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழலார் வியப்புற
நீடு மெய்த் தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே.

அழகுக் கடவுளையே வெல்லும் படியான அழகுள்ள மாதர்கள்
மலரிட்டு முடிந்திருக்கும் நீண்ட கூந்தலைக் காட்டியும் கலங்காத
மெய்யான தவம் செய்யும் முனிவர்கள் நிறைந்துவாழும்
திருத்தலமாம் திருத்தணிகை மலைமீது வதியும் தலைவரே!

ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்கு


ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன்
அவத்தினிலே இறத்தல் கொலோ எனக்கு

இனி எனக்கு என்ன புத்தி சொல்லப் போகிறீர்?
எவரை அண்டி இனி நான் பிழைத்திடுவேன்?
கதியேதுமின்றி வீணே இறந்துபடலே எனக்கு விதித்ததோ?

னி ...... தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோ


நீ.. தந்தை தாயென்றே இருக்கவும் நானும் இப்படியே தவித்திடவோ
சகத்தவர் ஏசலில் படவோ

யாருமெனக்கு இல்லையெனில் இதனைப் பொறுக்கலாம்
ஆனால் தந்தையும் தாயுமாய் நீ எனக்கு இருக்கையிலே
இவ்வண்ணம் நான் தவித்தழிதல் தகுமோ?
உலகத்தவர் பழிச்சொல்லுக்கு ஆளாதலும் முறையோ?

ந கைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடை யா


நகைத்தவர் கண்கள் காணப் பாதம் வைத்திடு ஐயா

எனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பவரெல்லாம் காணுமாறு
நின் திருமலர்ப் பாதங்களை என் தலைமீது வைப்பாய் ஐயா!

தே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யா


தெரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா


அப்படி நீ எனை நின் தாளிணையில் சேர்க்காவிடிலோ
இந்த உலகமே எனைப்பார்த்து எள்ளி நகையாடும் ஐயா!

த கப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோ


தகப்பன் முன் மைந்தன் ஓடிப் பால்மொழிக்குரல் ஓலம் இட்டிடில்
யார் எடுப்பது என வெறுத்து அழ பார் விடுப்பர்களோ

பால்மணம் மாறாப் பச்சிளங்குழந்தை தன்
தந்தை முன்னே சென்று நின்றுகொண்டுத்
தன் மழலைக் குரலெழுப்பி ஓலமிட்டு அழுகையிலே
யார் பெற்ற பிள்ளையோ இது என எவரேனும்
வெறுத்தொதுக்கி விட்டு விடுவரோ?

எ னக்கிது ...... சிந்தியாதோ


எனக்கு இது சிந்தியாதோ ?

[இதுவரை இப்படிப் புலம்பிய அருணையாருக்கு இப்போது சட்டென ஒரு எண்ணம் வருகிறது!
இந்த அடி வரை, திருமுருகனைக் கடிந்து எழுதிய பாடல் போலத் தோன்றிய இது,
இப்போது அருணையாருக்கே ஏற்பட்ட ஞானோதயமாக மாறுகிறது!]


இந்தச் சிந்தனை என் சிந்தையில்
எப்படித் தோன்றாமல் போயிற்று!
வருவான்! முருகன் அருள்வான்!
முருகனருள் முன்னிற்கும்!

[எனக் கூத்தாடுகிறார்! நாமும்தான்!]


அனைவரும் இப்பாடலை தினமும் ஓதி முருகப் பெருமானின் அருளைப் பெறுவோம்!
****************


**** அருஞ்சொற் பொருள் ****

நத்துதல் = பற்றுக்கோடாய் அணுகுதல்
ஓதம் = நீர், தண்ணீர்
நீச = இழிந்த
முட்டர் = மூடர்கள்
பானு = சூரியன்
மொய் = பொருந்தியிருக்கும்
மாரன் = மன்மதன்
நீடு = நீண்ட, அதிகமான
தம்பிரான் = தலைவர்
*******************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
******************************