Tuesday, September 1, 2009

"அ.அ.திருப்புகழ்" - "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]-1

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]-1
[முதல் பகுதி]
நண்பர் ரவி கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருவெழு கூற்றிருக்கை வகையில் அமைந்துள்ள இந்தத் திருப்புகழை எனக்குத் தெரிந்த அளவில் விளக்க முயன்றிருக்கிறேன்.

1 முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல், பின்பு மேலிருந்து கீழ் என
அடுக்கடுக்காக ஒரு தேர்த்தட்டு போல மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த இந்தப் பாடல் சுவாமிமலை குருநாதனைப் போற்றிப் பாடும் அற்புதப் பாடல்.
ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் கீழிறங்கி, மேலேவந்து
அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும்.

1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321

என 7 வரை சென்றதும் இது ஒரு தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.

அதன்பின், இறைவனை அமரச் செய்ய ஒரு இடைத் தட்டு, பீடம்!

பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ்
அடுக்காக அமைத்து, இறுதியில் தொடங்கிய அதே 1 என்னும் எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திரு எழு கூற்று இருக்கை எனப் பெயர்.

சம்பந்தரும் இன்ன பிறரும் இவ்வகையைத் தொட்டிருக்கிறார்கள்.

இப்போது பாடலைப் பார்ப்போம்!



*********** பாடல் ***********
ஓருரு வாகிய தாரகப் பிரமத்

தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி

ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை


இருபிறப் பாளரி னொருவ னாயினை

ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்


நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை


நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய

மும்மதன் தனக்கு மூத்தோ னாகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக் கிளையோ னாயினை


ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்

கொருகுரு வாயினை


ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென

எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை


அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை


காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற

ஏரகத் திறைவ னென இருந்தனையே.

**************


*********** பொருள் ***********

இப்பாடலில் எண்களை வைத்து விளையாட அருணையார் முடிவெடுத்திருக்கிறார்.
அதற்காக அப்படியே விட்டு விடுவாரா?!!
சொற்களில் எண்களை வைத்தவர், கருத்தினில் கந்த புராணத்தையே
சொல்லியிருக்கிறார்.
இறையருள் கைவந்த ஒருவரால் மட்டுமே இது இயலும் என்பதற்கு
இப்பாடல் ஒரு உதாரணம்.
பாடலின் பொருள் புரியவரும்போது, நமக்கும் இது புரியும்!

முதலில் இதைப் பதம் பிரித்துப் பார்ப்போம்!


ஓர் உருவாகிய தாரகப் பிரமத்து
ஒருவகைத் தோற்றத்து இரு மரபு எய்தி

ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை


இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை

ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்

நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்

முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீவலம் செய்தனை


நால்வகை மருப்பின் மும்மதத்து இருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினில் இருவகைத்து ஆகிய

மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை


ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்தும்

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு

ஒரு குரு ஆயினை


ஒருநாள் உமையிரு முலைப்பால் அருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவன் என

எழில்தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை


அறுமீன் பயந்தனை ஐம்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்டு

அன்றில் அம் கிரி இருபிளவாக ஒருவேல் விடுத்தனை


காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற

ஏரகத்து இறைவன் என இருந்தனையே.

--------------------------------


இப்பவே கொஞ்சம் புரிஞ்சிருக்குமே!
இருந்தாலும், அவர் சொன்ன கந்தபுராணக் கதையை நான் சொல்வதற்காக,
இதன் பொருளைப் பார்ப்போம்.
எண்களை வைத்து இப்பாடல் அமைந்திருப்பதனால், வழக்கம்போல் பின் பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பொருள் காணலாம்.
அருஞ்சொற்பொருளையும் ஒவ்வொரு பத்திக்கும் அடியில் இட்டிருக்கிறேன்,
பாடல் விளங்குவதற்காக!
சற்று விரிவாகவும், ஒரு மாறுபட்ட வடிவமைப்பிலும் இப்பாடலின் பொருளை
விளக்க எண்ணியிருப்பதால், இது ஒரு சில பதிவுகளாகத் தினமும் வரும். பாடலின் பொருள், கந்தபுராணம் சொல்லும் கதை, மற்றும் திருவெழு கூற்றிருக்கையை எனது பாணியிலும் சொல்லியிருப்பதால் இந்த முறை! பொறுத்தருள்க! [அடுத்த பதிவு நாளை வரும்!]
**********************************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

--------------------------------

Wednesday, July 22, 2009

"அ. அ. திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"

"அ. அ. திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"


இந்தத் திருப்புகழ் பலரும் அறிந்த ஒரு புகழ்!
இசைநிகழ்ச்சிகளில் அடிக்கடி பாடப்படும் பாடல்.
மதுரை சோமு மிக அருமையாகப் பாடுவார் இதை!
இன்றையப் பதிவில் இந்த எளிய, பொருள் நிறைந்த பாடலின் புகழ் பார்க்கலாம்! முருகனருள் முன்னிற்கும்!


****** பாடல் ******

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்


இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்


மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே


செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.


****** பொருள் ******
[பின்பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பார்க்கலாம்!!]

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி

[அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி]

'அகரமும் ஆகி'

எழுத்துகளின் தொடக்கம் அகரம்
உயிர்களின் தொடக்கம் இறைவன்


பிறவெழுத்துகளின் இயக்கமும் இதனால்

உயிரும் உலகும் இறையின்றி இயங்கா


அனைத்தெழுத்திலும் உன்னி நின்றிடும் அகரம்

அனைத்துயிரிலும் மறைந்திருப்பவன் இறைவன்


அகரம் சொல்லிட அதிகச் சிரமமில்லை

இறைவன் இயக்கமும் தானாய் நிகழும்

அ,உ,ம, எனும் மூவெழுத்து இதனுள்

முத்தொழிலும் இறைவன் கையில்


அருளெழுத்தாம் 'வ'கரமும் அகரத்துள்

அருளைத் தருபவன் எம்முடை இறைவன்


தொலைவையும் சுட்டும் 'அ'வெனும் எழுத்து

எட்டிநிற்பினும் அருள்வான் இறைவன்

இத்துணை பெருமை கூடிய அகரமும் ஆகி,


'அதிபனும் ஆகி'

'எந்தக் கடவுளும் என் தோள் போழ்
கந்தக் கடவுளை மிஞ்சாதே'எனும்

பாம்பன் சுவாமியின் வாக்கிற்கொப்ப

தனிபெருந் தலைவனாய்த் திகழ்பவனாகி,


'அதிகமும் ஆகி'

தெய்வங்கள் பலவுண்டு இத்திருநாட்டினிலே
அனைத்துக்கும் அதிகமாய் நிற்பவன் முருகன்

'சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை
சுப்ரமண்யர்க்கு மிஞ்சிய தெய்வமுமில்லை' எனும்

பழமொழிக்கேற்ப அதிகமானவானுமாகி,


'அகம் ஆகி'

முத்தி பெறும் அனைவருமே அகத்துள் செல்வர்
அகத்தில் உறைபவன் அழகிய முருகன்

வீடு பேற்றினை நல்கிடும் நல்லருட் தெய்வமுமாகி
,

'அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்'

படைப்பினைச் செய்திடும் பிரமனுமாகி
காத்தலை நிகழ்த்திடும் மாலுமாகி
அழித்திடச் செய்யும் உருத்திரனுமாகி
அவர்க்கும் மேலாய் அற்புதம் காட்டும்
அழகிய முருகனுமாகி,

'இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே'
[இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே]

தொலைபொருள் காட்டும் அகரமும் ஆனவன்
அருகினில் இருக்கும் இகரமும் ஆகி
அண்டிடும் அடியர்க்கு நல்லருள் புரிவான்

காற்றாகிக் கொடியாகி கானகமுமாகி
ஊற்றாகி உயிராகி உள்ளவை யாவுமாய் ஆகி
தோற்றுவிக்கும் அத்தனையும் தானேயாகி
ஆற்றல்நிறைப் பரம்பொருளாய் யாவுமாகினான்

கனியிலும் இனியன் கரும்பினும் இனியன்
பனிமலர்குழல் பாவையரினும் இனியன்
தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன்
உயிரினும் இனியன் உணர்வினும் இனியன்
இனிக்கும் இனிமையாய் வருபவன் முருகன்


'இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்'
[இருநிலம் மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்]

பூவுலகில் வாழ்கின்ற அனைத்துயிரும் நலம்வாழ
எனதுமுன்னே நீ விரைந்தோடி வரவேணும்


'மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே'
[மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே]

அசுவமேத யாகம்பல செய்ததனால்
யாகத்தின் அதிபதியெனப் பெயர் பெற்று
வலன் எனும் அரக்கனை அழித்தமையால்
வலாரியெனப் புகழ்பெற்ற இந்திரனும்
தம்மகளாம் தெய்வநாயகி மணாளனின்
பேரழகைக் கண்டு மனதிலங்கு வியந்து
மகிழ்வுடனே போற்றும் வடிவழகு பொருந்தியவனே

'வனமுறை வேடனருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே'

வனத்தில் வாழ்ந்தான் வேடனொருவன்
தனக்குள் ஆசையை அவனும் வளர்த்தான்
மனமயில் முருகனின் பூஜனை செய்திடும்
நினைவினில் அவனும் கோயிலை அடைந்தான்

கையினில் கனிகளும் கொம்புத்தேனும்
கொய்திட்ட புதுமலர்க் கொத்தும் கொண்டு
பையவே நடந்தான் கதிர்காமக் குமரனின்
மெய்வழிச் சாலையின் கோவிலை நோக்கி

செய்திட்ட பூஜையில் முருகன் மகிழ்ந்தான்
வந்திட்ட வேடனின் பூஜனை ஏற்றான்
மந்திரமில்லப் பூஜையிலும் மகிழ்வான்
மனமதிலொன்றி மகிழ்வுடன் செய்தால்

'செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே'

பொருந்திடும் போரில் வருந்திடும் உயிர்கள்
எழுந்திடும் விழுந்திடும் அவுணரின் உடல்கள்
வேலனின் மயிலின் போரதில் மாயும்
செககணசேகு தகுதிமிதோமி எனவெழும்
மயிலின் மீதினில் அமர்ந்து அடிடும் முருகோனே


'திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே'

செல்வம் மலிந்து கிடக்கும்
பழமுதிர்ச்சோலை மலையின்மீது
பெருமையுடன் அமர்ந்திருக்கும்
மனமயில் முருகோனே!
***********

****** அருஞ்சொற்பொருள் ******

அகரம் = 'அ' எனும் முதல் எழுத்து
அதிபன் = பெருந்தலைவன்
அயன் = பிரமன்
அரி = திருமால்
அரன் = சிவன்
இகரம் = சமீபத்தில் இருப்பவர்
இருநிலம் = பெரிய நிலம்
மகபதி = ஆயிரம் யாகம் செய்தவன்
வலாரி = வலன் எனு அசுரனைக் கொன்ற இந்திரன்
திரு = செல்வம்
***********

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
*********************************

Tuesday, July 21, 2009

அருணையார் அருளிய திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"

அருணையார் அருளிய திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"


மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், இன்று ஒரு திருப்புகழ்!
மாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
முருகன் அருள் செய்ய வேண்டும்.

இன்றைய திருப்புகழ் கொல்லிமலை முருகனைப் போற்றிப் பாடியருளியது. பரமானந்தக் கடலில் நானும் மூழ்க அருளிச் செய்யப்பா என வேண்டுகிறார் அருணையார்!
இப்போது இந்த அழகிய பாடலைப் பார்ப்போம்!
முருகனருள் முன்னிற்கும்!!
********************************

***********பாடல்***********

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த மெனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகி
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த
பௌவமுற வேநின்ற தருள்வாயே

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று குழலூதுங்
கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற பெருமாளே.

இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பாடல்! பொருளறியும் போது புரியும்! வழக்கம் போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

********** பொருள் *********

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று குழலூதுங் கையன்

கல் உருகவே இன்கண் அல்லல்படு கோ அம்
புகல் வருகவே நின்று குழல் ஊதும் கையன்

குழலூதி நின்றால் கல்லும் உருகிவிடும்
புகலிடம் ஏதென்று அல்லல் படுகின்ற
ஆவினங்களுக்குச் சொந்தயிடம் இதுவென்று
புரிந்திடும் வண்ணம் புல்லாங்குழல் எடுத்து
இனியகானம் இசைக்கின்ற கண்ணனெனும்

மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா

மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை
கைதொழ மெய்ஞ்ஞானம் சொல் கதிர்வேலா

திரிபுரம் எரிக்கப் புறப்பட்ட வேளையில்
விநாயகனை வணங்காமல் தேவர்கள் தொடங்க
தேரின் அச்சு முறிந்து வீழ்கையில்
இடபமாக வந்து நின்று திருமால்அருள
அதன்மீது ஏறியருளிய பெருமானாம்
மெலிந்த சடைகளை உடைய எந்தைபிரான்
சிவனாரும் கைதொழுது நின்று
ஓமெனும் பிரணவத்தின் பொருளை அறியவேண்டி
பணிந்து நின்று கேளெனச் சொல்லி
பிரணவப் பொருளினை அருளிச் செய்த
ஆதவன்போல ஒளிபொருந்திய
வேலினைத் தாங்கும் முருகோனே!

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற பெருமாளே

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமே சென்று
கொள்ளைகொளும் மாரன்கை அலராலே
கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா! கந்த!
கொல்லிமலை மேல் நின்ற பெருமாளே!

தினைப் புனத்தைக் காவல் செய்யவேண்டி
கையில் கவண்கல் எடுத்து வந்து
ஆலோலம் பாடிநின்ற வள்ளிநாயகியாரின்
புனத்தை நாடிச்சென்று காதலுணர்வைக்
கூட்டித்தரும் மன்மதன் எறிகின்ற மலர்க்கணை
விளைவித்த காதல் பெருக்கினால் ஆட்பட்டு
கையில் கிடைத்த தழைகளையெல்லாம் பறித்துக்கொண்டு
சென்ற கட்டழகு உடையவனே! கந்தக் கடவுளே !
கொல்லிமலைமீது வீற்றிருக்கும்
பெருமை மிகுந்த சிறந்தவனே!

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த மெனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்

தொல்லைமுதல் தான் ஒன்று மெல்லி இரு பேதங்கள்
சொல்லு[ம்]குணம் மூ[ன்று] அந்தம் எனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து
தொய்யு பொருள் ஆறு அங்கம் என மேவும்

[இந்த வரிகள் ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகிய கவித் திறத்தைக் காட்டுகின்றது.]

பழைமை எனவரும் இறைவனே முதல்வன்

சக்தியும் சிவனுமாய் இருவராகி அருள் புரிவான்

சத்துவம், இராஜஸம், தாமஸம் என்னும்
முக்குணங்களின் சொரூபமாய் விளங்கும்
அயன்,அரி,அரன் என்பவரின் மூலமாய் விளங்குவான்

ருக்,யஜுர்,சாம, அதர்வணம் என்னும்
நான்கு வேதங்களின் ஆதியாய்த் திகழ்வான்

சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்னும்
ஐந்து புலன்களையும் வென்றவனும் இவனே

நாசி வழியே உருவாகும் எழுத்துகளின் ஒலியானவன்
வாய் வழியே எழுந்த ஒலியின் விளைவாய் மகேச்வர சூத்திரம் என்னும் இலக்கணம் பிறப்பித்தவன்
கவிதைகளின் பாதம் போலும் சந்தஸ்
இதனுதவி இல்லாமல் எழுதும்கவி நிலைக்காது
இத்தனை இத்தனை எழுத்து, மாத்திரை என வரையறுக்கும்
கால் போலும் சந்தஸை உருவாக்கியவன்
எதனால் இப்பதம் இங்கு வந்ததென உணர்விக்கும்
நிகண்டு எனப்படு நிருக்தம் காதுவழியே தந்தவன்
காணும் பொருளைக் காட்டுவிக்கும் கண்போல
விளைவதைக் காட்டும் ஜோதிடம்எனும் கண்ணானவன்
இன்னின்ன செயல் செயும் கைகள்போலானவன்

என எம்மை சோர்வடையச் செய்யும்
ஆறு அங்கங்களை உடையவனாகி

[இவற்றை எல்லாம் விட்டால்தான் அவன் தெரிவான்! அறிவழிந்தாலே அவன் அகப்படுவான்!]

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகி
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த
பௌவமுற வேநின்ற தருள்வாயே .

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள்
பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி
பல்லுயிருமாய் அந்தம் இல்ல[லா] சொரு[ரூ]ப ஆனந்த
பௌவம் உறவே நின்றது அருள்வாயே

ஒலிக்கின்ற ஓசையெலாம் நீயே ஆனாய்
வாழுமுலகில் கட்டிவைக்கும் பசு பாசங்களானாய்
வெள்ளமெனப் பெருகிவரும் தீந்தமிழில் பொருந்தி நின்றாய்
மனதை மயக்கும் இசையாகவும் ஆனாய்
அத்தனை உயிர்களிலும் வாழும் ஒரே உயிருமானாய்
இதன் காரணமாகவே முடிவே இல்லாதவனும் ஆனாய்
இத்தனையும் நிறைந்த ஆனந்த உருவக் கடலும் ஆன

இவைஅத்தனையும் கூட்டிவந்து நிலையாய் அளிக்கவல்ல
அந்தப் பொருளை எனக்குக் காட்டி அருள்வாயே!
*****************

******அருஞ்சொற்பொருள்*******

வெய்ய = கொடிய
தொய்யு பொருள் = சோர்வடையச் செய்யும் பொருள்
அல்க = தங்க
பௌவம் = கடல்
புகல் = அடைக்கலம்
மிசை = மீது
நொய்ய = மெலிதான, நுண்மையான
எந்தை = எம் தந்தை
மாரன் = மன்மதன்
மழவன் = கட்டான உடலை உடைய இளைஞன்
********************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
******************************

Monday, May 4, 2009

அ. அ. திருப்புகழ். 30 "குமர குருபர முருக சரவண"

அ. அ. திருப்புகழ். 30 "குமர குருபர முருக சரவண"

இன்றைய திருப்புகழ் சுவாமிமலை நாதனைக் குறித்துப் பாடப் பெற்றது.
'அடியவர் அழுகுரல் கேட்டு அடுத்துவந்து காத்தருள் முருகா!' என அருணையார் நமக்காக வேண்டுகிறார்.
ஈழத்தில் இப்போது இதே குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அங்கு வாழும் தமிழரின் அபயக்குரல் அழகன் முருகனின் காதுகளைச் சென்றடைந்து, விரைவில் ஒரு நல்ல முடிவுடன் அமைதி திரும்ப அவனருள் வேண்டி இதனை இடுகின்றேன்.
முருகனருள் முன்னிற்கும்!


------- பாடல் --------

குமர குருபர முருக சரவண
குகசண் முக கரி - பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள் குரு - மணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின - முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர - லறியாயோ

திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட - வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு - மயில்வீரா

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் - குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் - பெருமாளே.



------ பொருள் -------

[பின்பார்த்து, முன் பார்க்கலாம்!]


திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட


திமிர எழுகடல் உலகம் முறிபட
திசைகள் பொடிபட


உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல்,
மதுக் கடல், நெய்க்கடல், தயிற்க் கடல்,
பாற் கடல், சுத்த நீர்க் கடல் எனப்
புராணம் சொல்லும் ஏழு கடல்களும் வற்றிடுமாறும்
எஞ்சியிருக்கும் நிலம் சூழ்ந்த பூமி அழியுமாறும்
எட்டுத் திசைகளும் பொடிபட்டழியவும்

வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு - மயில்வீரா


வருசூரர் சிகர முடி உடல் புவியில் விழ உயிர்
திறைகொடு அமர்பொரும் மயில்வீரா


பாலனெனவெண்ணிப் போர்செய்யத் துணிந்துவந்த
சூரபதுமன் உடன்சேர்ந்த இராக்கதர்கள்
மணிமுடிகளும், தலைகளும் அறுந்துபட்டு
உடல்கள் தனியாக வெவ்வேறாய் நிலத்தில் வீழவும்
அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு
கடும்போர் செய்த வேலினைக் கையினில் தாங்கிய
வெற்றிவீரனான முருகனே!

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் – குருநாதா


நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல்

கணக்கிட்ட காலத்தில் காலன்வந்து கயிறுவீச

காத்திடுவாய் எனக்கட்டிய பாலகனின் இடர்தீர

காளைமீது ஏறிவந்து நெருப்பனைய இடக்காலால்

காலனை எட்டியுதைத்து காத்திட்ட பெருமான்


நதிகொள் சடையினர்

வானுலகில் தவழ்ந்திருந்த சீரான நதியொன்றை

மூதாதையர் கடந்தீர பூவுலகில் கொண்டுவர

பகீரதன் செய்தவத்தால் மனமின்றிக் கிளம்பித்

தாங்கொணாக் கோபம்கொண்டு கரைபுரண்டு ஓடிவந்த

கங்கையாளின் சீற்றம்கண்டு மூவுலகும் அஞ்சிநிற்க

மாறாத புன்னகையுடன் தன்கைகளில் அவளையெடுத்துத்

தன் தலையில் ஒளித்துவைத்து சடைவழியே ஒருநதியாய்ப்

பூலோகம் வரச்செய்த நதிகொள் சடையினர் சிவபெருமான்


குருநாதா


பிரணவத்தின் பொருள் கேட்கத் தனயன்முன் சீடனைப்போல்

தாள்பணிந்து வாய்பொத்தி தயவுடன் கேட்டிருக்க

ஓமெனும் மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்துத்

தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதராகிய சுவாமிநாதனே!


நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் - பெருமாளே.

நளின குருமலை மருவி அமர்தரு

நீர்நிலைகளினால் எழிலாக விளங்கிநிற்கும்

சுவாமிமலை என்கின்ற திருத்தலத்தில்

பொருந்தி அமர்ந்திருக்கும்



நவிலும் மறைபுகழ் பெருமாளே.

நன்னெறிகளைச் சொல்லிநிற்கும்

நான்மறைகளும் போற்றிப்புகழ்கின்ற

பெருமையில் மிக்கவரே!


குமர குருபர முருக சரவண
குகசண் முக கரி - பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள் குரு - மணியே


குமர குருபர முருக சரவண
குக சண்முக கரி பிறகான குழக
சிவசுத சிவயநம என குரவன் அருள்
குருமணியே


குமரக் கடவுளே!

குருவாக நின்றருளும் பெரிய பொருளே!

இளையவனே! அழகனே! முருகனே!

சரவணப் பொய்கையில் தோன்றியவனே!

குறிஞ்சி நிலக் கடவுளாதலின், குகையில் வீற்றிருப்போனே! அன்பர்களின் இதயக் குகையில் வீற்றிருப்போனே!!

முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி], என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன் வயத்தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி], முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே!

ஆனைமுகனுக்குத் தம்பியாக வந்த அழகனே!

சங்கரன் குமாரனே!

சிவகதி அளிக்கும் சூக்கும பஞ்சாக்கரமான 'சிவய நம' எனும் மந்திரத்தைச் செபிப்பவர்க்கு வந்தருள் புரிபவனே!

குருவுக்கும் குருவான மணி போன்றவனே!

யென்றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென


என்று அமுத இமையவர் திமிர்தம் இடு கடல்
அது என


இவ்வாறாக,
பாற்கடலில் இமையவர்கள் அமுதம்

கடந்த வேளையில் எழுப்பிய

திமிர்தம் என்கிற பேரொலிபோல


அநுதின - முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர - லறியாயோ


அநுதினம் உனை ஓதும்
அமலை அடியவர் கொடிய வினை கொடும்
அபயம் இடு குரல் அறியாயோ


பாற்கடலில் இமையவர்கள் அமுதம்

கடந்த வேளையில் எழுப்பிய

'திமிர்தம்' என்கிற பேரொலிபோல

முன்செய்த வினையாலே உடல்நொந்து மனம் நொந்து

தினந்தோறும் உனையெண்ணி அபயம் எமைக் காத்தருள்வாய் எனப்

பலலட்சம் அடியார்கள் பலவாறும் கதறுகின்ற

அவலக்குரல் இன்னாரது என இன்னமும் நீ அறியவில்லையோ?

[உடன் வந்து துன்பம் தீர்த்தருள்வாய் முருகா!]

************************


***** அருஞ்சொற்பொருள்******

குழக= குழகன்=அழகன்
சுத=சுதன்= மகன்
குரவன்= குருபரன்
இமையவர்= கண்களை இமைக்காத தேவர்கள்
அமலை= மிகுந்த
திமிர= இருள் நிறைந்த
நமன்= எமன்
அழல்= நெருப்பு
***************

அருணகிரிநாதர் தாள் வாழ்க!
வேலும் மயிலும் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!

**********************************

Sunday, March 22, 2009

"அ. அ. திருப்புகழ் - 29” -- ’கொலைமத கரியன’

"அ. அ. திருப்புகழ் - 29” -- ’கொலைமத கரியன’


” திருமுருகன் நெறிவழியில் நிலையாகச் சென்று, இவ்வுலக இன்பங்களில் மனம் நாட்டம் கொள்ளாது இருக்க அருள் செய்யப்பா! திருச்செந்தூர் வேலா!”

----- பாடல் -----

தனதன தனதன தனதன தனதன
தன்னத் தனதான

கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத் தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற் றிடுநாயேன்

நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற் றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற் றடைவேனோ

சிலையென வடமலை யுடையவ ரருளிய
செஞ்சொற் சிறுபாலா
திரைகட லிடைவரு மசுரனை வதைசெய்த
செந்திற் பதிவேலா

விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப் புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப் பெருமாளே.


----- பொருள் -----

[வழக்கம் போல, பின் பார்த்து முன் பார்க்கலாம்.]


”சிலையென வடமலை உடையவர்”

முப்புரம் எரித்த நிகழ்வினைச் சொல்லும்
இவ்வரி சொல்லும் கதையினைக் காண்போம்!

முப்பெரும் அசுரர் பிரமனைக் குறித்து
வலியதோர் தவம் பல்லாண்டு செய்தார்

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி
எனுமிவர் தவத்தில் பிரமனும் மகிழ்ந்தார்

வரமொன்று அருளிட அவரும் கேட்டிட
அழியாவரமே வேண்டியிவர் நின்றார்

’சிவனார் தவிர அழியாதவரிங்கு
எவரும் இல்லை ! மற்றது கேள்! ’

எனவே பிரமனும் அசுரர்க்குச் சொல்ல
சற்றே யோசித்த அசுரரும் சொன்னார்:

‘வானுலகம் பூமி, கீழுலகம் மூன்றும்
ஒன்றாய்ச் சேர்ந்த ஓருலகம் வேண்டும்!

பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த
மதில்கள் அதற்குக் காவலாய் வேண்டும்!

எண்ணிய பொழுதினில் எங்கும் சென்றிடும்
வல்லமை அதற்குத் தந்திட வேண்டும்!

சிவனார் கணையன்றி வேறெதுவாலும்
அழித்திட முடியா வரமிங்கு வேண்டும்!’

வரமிதைக் கேட்ட நான்முகன் சிரித்து
அவ்வண்ணம் அருளித் தன்னிடம் சேர்ந்தார்

முப்புரம் அமைந்த செருக்கினால் அசுரரும்
தாங்கிடவொண்ணா கொடுமைகள் செய்தார்

தேவரும் மனிதரும் மனமிக வருந்த
திருமால் எதிர்த்துப் போரிட்டுத் தோற்றார்

சிவனை நினைந்திவர் தவங்கள் புரிய
தேவரை நோக்கி சிவனார் சொன்னார்

‘எம்மின் அடியார் அவரென அறிக
அவரை அழித்தலும் எவராலும் ஆகாது’

இதனையறிந்த திருமால் ஆங்கே
புத்தராய்த் தோன்றி ஆங்கிருந்தோரைப்

பௌத்தராய் மாற்றிட மூவர் மட்டும்
மாயையுள் சிக்கா ஓர்நிலை அறிந்து

மீண்டும் தேவர்கள் சிவனைப் பணிய
முப்புரர் அழித்திடத் தேரொன்று செய்க

என்னும் சிவனின் சொல்லினில் மகிழ்ந்து
தேரொன்று அமைக்க தேவரும் முனைந்தார்.

மந்திரம் கேசரி என்னும் மலைகள் அச்சாக
சூரிய சந்திரர் சக்கரங்களாக
ருதுக்கள் அனைவரும் சந்திகளாக
ஈரேழு லோகங்கள் நிலைகளாக
உதயாஸ்தகிரிகள் கொடிஞ்சியாக
நதிகள் எல்லாம் பறக்கும் கொடிகளாக
மோட்சலோகம் மேல்விரிவாகவும்
நாட்களும் திதிகளும் இடுக்கு மரமாகவும்
எட்டுமலைகளும் தூண்களாகவும்
திசையினைக் காக்கும் எட்டு யானைகள் இடைநிலை தாங்க
ஏழு கடல்களும் திரைச்சீலையாகவும்
ஞான,கன்மேந்திரியங்கள் கலனாகவும்
கலைகளெல்லாம் முனைகளாகவும்
புராண சாத்திரங்கள் மணிகளாகவும்
மருத்துகள் அனைத்தும் படிகளாகவும்

அமைந்ததோர் ரதத்தினைச் சமைத்து
வேதங்கள் நான்கினை குதிரையாய்ப் பூட்டி
நான்முகனாரைச் சாரதியாக்கி
ஓமெனும் பிரணவம் சாட்டையாய்ச் சொடுக்க
தேவநங்கையர் சாமரமிடவும்
தும்புரு நாரதர் இன்னிசை ஒலிக்க
அரம்பையர் எல்லாம் நடனமாடவும்

அழகிய தேரினைச் சிவனார் முன்னே
கொண்டுநிறுத்தி இன்னமும் செய்தார்

மேருமலையினை வில்லாய்க் கொண்டு
நாகராஜனை நாணியாய் வைத்து
பச்சைவண்ணனைப் பாணமாய்ச் செய்து
வாணியை வில்லின் மணியாய்க் கட்டி
தீயின் தேவனை அம்பின் முனையாய்
காற்றின் அரசனை அம்பின் இறகாய்
இத்தனை வண்ணம் செய்தவர் வந்தார்

சிவனார் மகிழ்ந்து தேரினில் ஏற
அச்சு முறிந்து ரதமும் சிதைந்தது!

நாரணர் இடபமாய் முன்னே வரவும்
அதனில் ஏறி சிவனும் சென்று
மேருவில்லினை வளைத்து நாணேற்ற
ஆயுதமின்றி அழித்திடும் வல்லமை
அனைவரும் அறிந்திடத் திருவுளம் கொண்டு
உமையினைப் பார்த்து புன்னகை செய்தார்
முப்புரம் எரிந்து சாம்பலானது

அடியவர் மூவரும் என்றே பரிந்து
அசுரர்க்கு அருளிக் காவலர் ஆக்கினார்!
அனைவரும் மகிழ்ந்து சிவனைப் பணிந்தனர்!
இதுவே ‘சிலையென வடமலை உடையவர்’ திருக்கதை!


”அருளிய செஞ்சொல் சிறுபாலா”

சிவனாரின் கண்ணினின்று பொறியாக வெளிவந்து
அறுமுகனாய் உருவெடுத்த சங்கரன்குமரா!
அழகிய தமிழெனும் மொழியிதன் அரசனாய்
அருளிடச் சிவனார் அருள்செய்த சிறு பாலகனே!


”திரைகடலிடை வரும் அசுரனை வதைசெய்த
செந்தில்தி வேலா”


அழகன் முருகனின் வேலுக்குப் பயந்து
ஆழ்கடல் அடியினில் [மா]மரமாய் ஒளிந்த
சூரபதுமனை வேலால் பிளந்து
சேவலும் மயிலுமாய் அருள் செய்த
செந்தூர் என்னும் திருச்சீரலைவாய்
தலத்தினில் அருளும் வேலாயுதனே!


”வி[ல்]லைநிகர் நுதல் இபமயில்,குறமகளும்
விரும்பிப் புணர்வோனே”

வில்லினைப் போலும் புருவங்கள் உடைய
மயிலென விளங்கு தேவயானியும்
தினைப்புனம் காத்து முருகனை நினைந்து
மனவேடன் தன்னின் மனதைக் கவர்ந்த
வேடர் குலத்துக் குறமகள் வள்ளியும்
விருப்புடன் வந்து நின்னைச் சேர்ந்திட
செயலும்,விருப்பும் கைவரப் பெற்றோனே!
[தெய்வயானை கிரியா சக்தி, வள்ளி இச்சா சக்தி]


”விருது அணி மரகத மயில் வரு[ம்] குமர
விடங்கப் பெருமாளே”


பச்சைவண்ண மரகத மயில்
விருதுகள் பல பெற்றது!
அமரர் தலைவன் முருகனின் வாகனம்!
அதனில் அமர்ந்து அருள்மழை பொழியும்
அழகிய முருகப் பெருமானே!


விடங்கர் என்றால் இன்னுமோர் பொருளுண்டு!
செந்தூர் முதல்வன் திருக்கோலம்
கையிலோர் மலருடன் நின்றிடும் கோலம்!
சூரனை அழித்து, போரினை முடித்து
செந்தூர் திரும்பி சிவனை வணங்கிடக்
கையில் மலருடன் நின்றிட்ட நேரம்
தேவர்கள் வந்து நன்றிகள் சொல்லிட
அவரைப் பார்க்க மலருடன் திரும்ப
அத்திருக்கோலம் தாங்கிய மூர்த்தியாய்
சிலையா நின்றார் என்றொரு வரலாறு!
‘உளிபடாச் சிலையாய்’ நின்றிடும் உருவுக்கு
‘விடங்கன்’ என்றொரு பொருளும் உண்டு!
செந்தூர் முதல்வன் விடங்கப் பெருமான்!
அவரைப் பணிவோம்! அருளைப் பெறுவோம்!


"கொலை மதகரியன ம்ருகமத தன கிரி
கும்பத்தனம் ஆனார்"


குத்தவரும் யானைக்குக் கொம்புகளாயிரு தந்தம்
அதுபோலப் பெண்டிருக்கு விளங்குமிரு முலைகள்!

குத்திவிடும் இருதந்தம் கொலையும் செய்துவிடும்
குத்துமுலை இவையிரண்டும் காமக்கொலை செய்துவிடும்!

மணம்பெறு கஸ்தூரி தன்கொம்பில் தான்கொண்டு
மயக்கிவிடும் மான்கூட்டம் எவரையுமே இங்கு!

மணம்கமழும் கொங்கைகளும் மயக்கிவிடும் எவரையுமே
அதில் விழுந்து முனைவோரை நாளுமே இங்கு!

பொன்மலையாய்த் தோற்றமுறும் பருமுலைகள் கண்டு
கண்பதித்துக் கை கவர்ந்துக் காமுறுவர் இங்கு!

கவிழ்த்துவைத்த கும்பம்போல் விளங்குமிரு முலைகளுமே
அவிழ்த்துவிடும் ஆசைகளை அதை அணைக்கத் துடிப்பவர்க்கே!

இப்படிப்பட்ட அழகிய தனங்களை உடையவராகிய
அழகிய பெண்களின்,


”குமுத அமுத இதழ் பருகி உருகி [மை]மயல்
கொண்டு உற்றிடும் நாயேன்”


அழகிய ஆம்பல் மலரை ஒத்த செவ்விதழ்களிலிருந்து
பெருகிவரும் நீரை அமுதம் எனப் புகழ்ந்து போற்றி

அதனைப்பருகிட ஆவல்கொண்டு காமமயக்கம் தலைக்கேற
மேலும் மேலும் அதனை நாடியேதிரியும் நாய்போன்ற எனது


”நிலையழி கவலைகள் கெட உனது அருள்விழி
நின்று உற்றிடவேதான்”


நிலையான தன்மையே கெடும்படியான
மனக்கவலைகள் வந்தென்னை வாட்டும்போது
அவையெல்லாம் அழியும்படியாக நினது
அருள்விழிப் பார்வையிலேயே நிலைக்கும்படியாகச்செய்து
அதுகாட்டும் வழியினிலே நிலைத்துச் செல்லும்படியான
உறுதியை எனக்கு அளிக்க அருள்புரியவும்


”நினது திருவடி மலர் இணை மனதினில் உற
நின் பற்று அடைவேனோ?”


உன்னுடைய அழகிய திருவடி மலர்கள்
இணையாக நின்று என் மனத்தாமரையில்
பொருந்தி நிற்கின்ற நின் அருளைப் பற்றிப் பெறுவேனோ?
[பெறுமாறு அருள் செய்வாய்! முருகா!]
******************

********* அருஞ்சொற்பொருள் *********

கரி = யானை
ம்ருகமத = கஸ்தூரி வாசனை
தனம் = முலை
கிரி = மலை
குமுதம் = செவ்வல்லி
சிலை = வில், உருவம்
நுதல் = நெற்றி, புருவம்
விடங்கர் = உளி படாத மூர்த்தி
கொடிஞ்சி = தேரின் கூம்பான மேல்பகுதி
*********************

அருணகிரிநாதர் தாள் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!

******************