Monday, December 3, 2007

"அ.அ. திருப்புகழ்" - 23 "விறல்மாறன் ஐந்து'

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 23 "விறல்மாறன் ஐந்து"

திருப்புகழ் விளக்கப் பதிவு இட்டு வெகு நாட்களாச்சு, எஸ்.கே! சீக்கிரமா ஒண்ணு போடுங்க என ஒரு அன்புக்கட்டளை இட்டு கூடவே இந்தப் பாடல் தலைப்பையும் கொடுத்த "கேயாரெஸ்ஸுக்கு" எனது மனமார்ந்த நன்றி!

இப்போது பாடலைப் பார்ப்போம்!
******************************************


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே!
**************************************************************

இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு!


************************************************************



பொருள்:
[வழக்கம் போல் பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி!]

"மறிமானுகந்த இறையோன்"

தவங்கள் செய்து வலிமையடைந்து
பணிவினை மறந்து தருக்குடன் அலைந்த
தாருகவனத்தின் முனிவர்கூட்டச்
செருக்கினை அடக்க சிவபெருமானும்
அழகியவுருவில் அவர்முன் நடக்க

மையலில் மயங்கி முனிவர் பெண்டிர்
அழகிய தமிழ்மகன் பின்னே நடக்க
ஆத்திரமுற்ற முனிவர் கூட்டம்
அழகனை அழிக்க யாகங்கள் செய்ய
அதனில் கிளம்பிய சிறுமான் வடிவை

அம்பல வாணன் மீதே ஏவ
அன்புடன் சிரித்து அப்புள்ளிமானை
தன்னிரு விரலால் தயவுடன் எடுத்து
கரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்

"மகிழ்ந்து வழிபாடு தந்த"

செருக்கினால் குமரனைப் பணியாதொழித்த
பிரமனை அழைத்து மூலப்பொருளாம்
பிரணவத்தொலியின் பொருள்தனைக் கேட்டு
அதனை அறியா திகைத்த நான்முகன்
தலையினில் குட்டி சிறையினில் தள்ளி

சிருட்டித்தொழிலைத் தானே செய்து
கந்தவெற்பினில் கம்பீரமாக
கந்தக்கடவுளும் அமர்ந்திட்ட வேளையில்,
கண்நுதற்கடவுள் குமரனை அழைத்து
பிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,
ஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று

பிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி
தந்தையுடனே தனித்திரும் காலை,
பிரணவப்பொருளைத் தனக்கும் சொல்ல
அப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்
இடம்,பொருள், ஏவல் அறிந்து

கேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்
எனவே உரைக்க, அதனின் தத்துவம்,
சீடன் பணிவின் திறனை இந்த
உலகுக்குணர்த்த, அருட்பெரும்ஜோதி
தணிகை சென்று கண்களை மூடி

ஒரு கணப்பொழுது தவமுமியற்ற
[தணிகை மலைக்கு இதனால் "கணிக வெற்பு" என்னும் பெயரும் இதனால் வந்தது!]
சுப்பிரமணியன் அவர்முன் தோன்ற
ஆலவாய் அண்ணல் வடதிசை நின்று
குருவின் முன்னே பணிவுடன் வணங்கி

மூலப்பொருளின் பொருளுரை கேட்டார்
ஐம்முகக்கடவுள் அறுமுகக்கடவுளின்
சீடனாய் இருந்து குருவிடம் கேட்டல்
எப்படி என்பதைப் பாருக்குணர்த்திய,

"மதிபாளா"

ஞான வடிவினரே!

"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த"

கெடுமனங்கொண்ட கொடுங்கோலரக்கன்
சூரன் என்பான் சிவனை வணங்கிப்
பலவரம் பெற்று தம்பியர் துணையுடன்
தேவர் மானிடர் முனிவரை வருத்தி
ஆட்சி செய்யும் வேளைதன்னில்,

முனிவரும் தேவரும் இறைவனை துதிக்க
ஐயனும் அவர்மேல் கருணை கொண்டு
நெற்றிக்கண்ணில் தீப்பொறி கிளப்பி
ஆறுமுகனாம் ஓருரு உதித்தனன்!

சக்திவேற் படையைத் தாயவள் அளிக்க
அதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து
தம்பியரைப் போர்க்களத்தில் வென்று
சூரனைப் போரில் பொருதிய வேளை
அண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில்
மாமரமாகி சூரன் நின்றனன்

மாமர அசைவினில் அண்டம் நடுங்க
அதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க
அதனைக் கண்ட செந்தில்வேலோன்
வேற்படைவிடுத்து 'உடலைப் பிளந்து
வருகுதி!' என்று ஆணை பிறப்ப,

சங்கார வேலும் காற்றினைக் கிழித்து,
ஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து
தீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த
மராமரம் தன்னை கூறாய்ப் பிளக்க

"அதிதீரா"

வீரச்செயல் புரிந்திட்ட மாவீரனே!

"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"

பாசம் என்னும் ஒருபேய் வாட்டும்
பசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும்
இவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து
மெய்யறிவாலே இறையை உணர்ந்து

நீயே சரணம் எனும் நினைவாலே
கந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து
வேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்
இடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா!

"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!"

அழகே உருவாய் செம்பொன் நிறமாய்
திகழும் மயிலின் மேலே அமர்ந்து
செந்தூர் என்னும் சீரலைவாயில்
மகிழ்வுடன் அருளும் பெருமைக்குரியோனே!

"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த"

இவனது கணையால் மயங்குவர் கோடி
எவரையும் வீழ்த்திடும் காமக்கணையோன்
முனிவருமிவனது கணை பிழையாரே
தேவரும் கெட்டே மதியழிந்தொழிந்தார்
பிரமனும் மாலுமே தப்பியதில்லை
எனவே இவனே விறல்மாரனாவான்!
அவனே அழகிய மன்மதன் என்பான்!

அவனது கையில் வில்லொன்றுண்டு
அவன் தொடு கணையோ ஓரைந்தாகும்!

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!

சொல்லும் நினைவும் ஒன்றெனவாகி
ஒருவருக்கொருவர் உயிர்பால் இரங்கி
நினைந்து ஆங்கே சோகம் தழுவி
அவரை நினைந்து பலவாறு பிதற்றி
நினைவொழிந்தங்கே மயக்கம் விளைந்து
ஐவகைக் காதல் நோய்களும் நிகழும்

இவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி
மாறன் கணைகள் என்னை வருத்த,

"மிகவானில் இந்து வெயில் காய"
[இதனை "வானில் இந்து வெயில் மிக காய" எனப் படிக்கவும்]

சந்திரன் கணைகள் காதலைக் கூட்டும்
வானில் வீசும் சந்திரக் கணைகள்
பகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட
மிகவே துன்பம் காதலில் வருத்த,

"மித வாடை வந்து தழல் போல ஒன்ற"

குளிரும் கிரணம் சுடுவது என்றால்
வீசும் தென்றலும் வெந்திடுமன்றோ!
மெல்லிய தென்றல் வீசுதல் கூட
நெருப்பினைப் போலே சுடுவது போல,

"விலைமாதர் தந்தம் வசை கூற"

வினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர்
மனம்போன வண்ணம் சுடுமொழி கூறி
வதை செய்திடவும்,

"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர"

சீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின்
ஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே
உனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ!
பரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா
வெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா!
ஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய
மலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல
ஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,

"குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ"

குளிர் பரவும் மாலைநேர வேலையதில்
நின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து
என் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து
எனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே!!!

******************************************************


அருஞ்சொற்பொருள்:

விறல்மாரன்= மன்மதன்
வாளி= அம்பு, கணை
இந்து= நிலவு
தந்தம்= பற்கள் [ இங்கு பற்களில் இருந்து பிறக்கும் சொல எனப் பொருள் வரும்]
மறிமான்= சிறிய மான்
மதிபாளா= ஞானம் மிகுந்தவர்
வேலை= கடல்
அலைவாய்= திருச்செந்தூர்
***********************************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***********************************************

Wednesday, July 18, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"--22 "வங்கார மார்பிலணி"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"--22 "வங்கார மார்பிலணி"

"பச்சைப்புயல் மெச்சத்தகுபொருள்" திருமாலின் ஒரு பெயர் கொண்ட அன்பர், முருகனடியார் திரு ஜி.ராகவன் கேட்ட இப்பாடல் சந்தம் மிகுந்தது.

சொல்லினிமை, பொருளினிமை கொண்டது.

பாடுதற்கு இனியது.

முருகனை, கந்தக்கடம்பனை 'நமோநம' எனத் துதித்து அருச்சிப்பது.

திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகனைப் போற்றும் இப்பாடலை இங்கு இடுவதில் மகிழ்கிறேன்.

பாடல் பெரிது!

பொருளும்
சற்று விரிவாகத்தான் இட்டிருக்கிறேன்.


அனைவரும் பொறுத்தருள்க!

ஜி.ரா.வுக்கு என் நன்றி!!

முருகனருள் எல்லார்க்கும்
முன்னிற்கட்டும்!

**********************************************************

ராகம் -- ஸிந்துபைரவி
தாளம் -- சதுஸ்ரத்ருவம்.. கண்டநடை

"தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன .... தனதான

............பாடல்................

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல

மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய .........விடுமாதர்

சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ....... னுழலாமற்

சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசிவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ........ புரிவாயே

சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ......... விருதோதை

சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே

இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ....... மணிமார்பா

எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்கோடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் .....பெருமாளே.


...........பொருள்.............

[பின் பார்த்து முன் பார்க்கலாம்.]

இப்பாடலின் சிறப்பு கந்தனைத் தோத்தரிப்பதில் இருந்து துவங்குகிறது.

சிங்கார ரூபமயில் வாகன நமோ நம என

அழகென்னும் பெயருக்கு அரும்பொருளே
நீதான் என அகில உலகமும் போற்றிடவே
அழகின் அழகாய் உருவெடுத்து,

அகிலமெலாம் காப்பதற்கு
அழகிய மயிலின் மீதேறி வந்து
நிற்கும் அழகே போற்றி, போற்றி! எனவும்

கந்தா குமார சிவதேசிக நமோ நம என

எதிர்த்துவரும் பகையாற்றலை
வற்றச் செய்பவன் கந்தன்
ஆறுதிருமேனியும் ஒன்றாய்ப்
பொருந்தி நிற்பவன் கந்தன்
சுழன்றலையும் ஆன்மாவிற்குப்
பற்றுகோடாய் இருப்பவன் கந்தன்

அம்மைக்கும் குமரனிவன்
அப்பனுக்கும் குமரனிவன்
அம்மையப்பருக்கும் குமரனிவன்
இம்மைக்கும் மறுமைக்கும் குமரனிவன்

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
அவ்வைக்கும் அருளுரைத்த பாலன்
அருணைக்கும் பம்பனுக்கும் ஆசான்
அவனே நமக்கெல்லாம் குருநாதன்

கந்தனாய்,குமரனாய்,சிவகுரு
தேசிகனாய் எமக்கெல்லாம்
அருள்பவனே போற்றி, போற்றி!எனவும்


சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என

குங்குமம் போலும் சிவந்த மேனியள்
குங்குமம் நிறை நெற்றியை உடையவள்
சிந்தூரத்தின் சொந்தக்காரன்
திருமாலின் அன்புத்தங்கை
பார்வதியெனும் பெயர் கொண்டவள்
பாரினை ஆளும் பரம்பொருள் சக்தி
பாரின் துயர் துடைக்க
சூரன் உடல் கிழிக்க
பார்புகழும் மகவெடுத்து
மாரினில் வைத்துக் கொஞ்சிய
பார்வதியாள் புத்திரனே
போற்றீ, போற்றி! எனவும்,



விருது ஓதை சிந்தான சோதி கதிர்வேலவ நமோ நம என

கொன்றவர் ஆயிரமாயிரம் - ஒளிந்து
நின்றவர் ஆயிரமாயிரம் - அவர் பின்னே
சென்றது கந்தனின் கதிர்வேல் - அசுரர்களைக்
கொன்றது கடம்பனின் வீரவேல் -பகைமுடித்து
வென்றவர் ஆயிரமாயிரம் - அவரெல்லாம்
வெற்றிவேல்! வீரவேல் என - செய்திட்ட
சங்கெடுத்து ஆர்ப்பரித்த வீரமுழக்கம் - கடலோசை
தோற்றிடச் செய்திட அவ்வேளை - அவர்நடுவே
சுட்டெரிக்கும் சோதிவடிவாய் - வேலெடுத்து
நின்றிட்ட வேலவனே போற்றி, போற்றி - எனவும்



கங்காள வேணி குருவானவ நமோ நம என

நடுநிசியில் சுடலைதனில்
நெடுமுடியும், எலும்புமாலைகளும்
கிடுகிடென்ன அசைந்துவர
நடனமிடும் சிவனாரின்
குருநாதன் ஆனவனே
பிரணவப் பொருளோனே
போற்றி, போற்றி எனவும்


பலவாறு உனைத் துதித்து முழங்கிடவும்,

திண்சூரர் ஆழிமலை தூள்பட வை வேலை விடு முருகோனே

கொடுமைபல செய்திட்ட சூரனையும்
அடி முதல் நுனிவரை அவன்தம் அசுரரையும்
மற்றுமாங்கு நெடுங்கடலையும்,
கிரவுஞ்ச மலைதனையும்
பொடிப்பொடியாய்ச் செய்திடவே
கூரிய வேல் செலுத்தி, தேவர்
குலம் காத்த முருகப் பெருமானே!


இங்கீத வேதபிரமாவை விழ மோதி

ஓதுதற்கும், பாடுதற்கும்,
படிப்பதற்கும் இனிமையான
வேதங்களைப் பயின்ற
பிரமனுக்கு அறிவுறுத்த
பிரணவப்பொருள் கேட்டு
அதுவறியா நான்முகனின்
தலையினில்குட்டி, எட்டியுதைத்து
மோதிக் கீழே விழுமாறுசெய்தும்,



ஒரு பெண் காதலோடு வனம் ஏவி வளி நாயகியை
இன்பான தேனிரச மார்முலை விடாத கர மணிமார்பா


இச்சாசக்தியாம் வள்ளியின் மேலே
தாளாத மையல் கொண்டு
காதலாகிக் காடு புகுந்து
அவரை ஆட்கொண்டு தேன்போலும்
இன்பம்நிறை முலைகளைப்பற்றி
அதனை விட்டகலா கரமும்
அணைக்கத்தக்க அழகிய
மார்பினையும் கொண்டவனே!


எண் தோளர் காதல்கொடு காதல்கறியே பருகு

சிறுத்தொண்டரெனும் சிவபக்தர்
என்றும் மாறா அவர் அன்பினைச்
உலகுக்குக் காட்டச் சோதிக்க வேண்டி,
எட்டுத்தோள் உடைய சிவனாரும்
சிவனடியார் வேடம் பூண்டு அவர்தம்
வீடடைந்து, அமுது கேட்க,
சிறுத்தொண்டரும் அகமகிழ்ந்து
அடியார் வேண்டுவதெதுவென வினவ
"பிள்ளைக்கறி பருக உத்தேசம்" என
அடியரும் பகர, "அப்படியே ஆகுக" என
தொண்டரும் தன் மகனாம் சீராளனை
அழைத்து,'புண்ணியம் பெற்றோம் நாமெல்லாம்!
என் தலைமகனே! அடியார்க்கு உன்னை
அமுது படைக்கப் போகிறேன்' எனச் சொல்ல,
மகிழ்வுடன் மகனும் இசைய,
அவ்வண்ணமே மகனை வெட்டிக் கறி சமைத்து
அடியார்க்கு அமுதுபடைக்க, அடியாரும்
தன் வேடம் களைந்து தரிசனம் அளித்து
சிறுத்தொண்டரின் சீரான பக்தியை
உலகுக்குக் காட்டி, அனைவரையும் வாழ்த்திய


செங்கோடு மேவி பிரகாசமயில் மேல் அழகொடு

பெருமை பெற்ற திருத்தலமாம்
திருச்செங்காட்டுக்குடி அடைந்து
ஒளிவீசும் அழகிய மயில் மீதமர்ந்து


என் காதல் மாலை முடி ஆறுமுக வா அமரர் பெருமாளே.

நின்மீது யான் கொண்ட அன்பினால்
ஆசையுடன் புனைந்திட்டத் தமிழ் மாலையினை
கருணைமிகக்கொண்டு சூடிடும்
ஆறுமுகக் கடவுளே! தேவர் தலைவனே!


வங்கார மார்பில் அணி தாரொடு உயர் கோடு அசைய

அழகிய மார்பினில் அணிந்திருக்கும்
பொன்மாலையுடன் பாரத்துடன்
உயர்ந்து நிற்கும் மார்பகங்களும்
சேர்ந்து அழகுடன் அசைந்திட


கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள்புரள

இத்தனையும் போதாதென வளமாக
நீண்டு வளர்ந்த கூந்தலும், அதில் சூடிய
மலர்க்கொத்துகள் நிறைந்த மாலையும்
மணிமாலையும் தோள்களில் புரள


வண்காதில் ஓலை கதிர் போல ஒளி வீச

வளைந்த அழகுடன் விளங்கும்
காதுகளில் பூட்டியிருக்கும்
காதணிகள் கதிரவன் போல் ஒளிவீச



இதழ் மலர் போல

அன்பு ததும்பிடும் மலர் உதடுகள்
மொட்டவிழ்ந்த மலர் போல் விரிய


மஞ்சு ஆடு சாபநுதல்

மேகக்கூட்டத்தின் நடுவில் வளைவாகத்
தோன்றிநிற்கும் வானவில் போல
அழகிய புருவங்களுக்கும் கூந்தலுக்கும்
இடையினில் வளைவாகத் தோன்றிடும்
சீரான அழகிய நெற்றியும்


வாள் அனைய வேல்விழிகள்

கூரான வாளையும் வேலையும்
பழித்திடும் வேல் விழிகளும்


கொஞ்சார மோககிளியாக நகை பேசி

கொஞ்சிடும் கிளி போலும்
ஆசைமொழிகள் பல பேசி


உற வந்தாரை வாரும் இரு[ம்]நீர் உறவென

அருகினில் வருவோர் அனைவரையும்
வருகவென வரவேற்று இருக்க வைத்து
'நீர் எமக்கு உறவினர் அல்லவோ' என்றெல்லாம்


ஆசைமயல் இடு மாதர்

பசப்பு வார்த்தைகள் பலவும் பேசி
நெஞ்சில் மயக்கம் உண்டுபண்ணும்
பொல்லாத விலைமாதர்கள்


சங்காளர் சூது கொலைகாரர் குடிகேடர்

காரியம் ஆகவேண்டிக் கூட இருந்து
களித்து நிற்கும் பொய்யர்கள்
சூதாடலே தொழிலாய்க் கொண்டவர்
கொலைபாதகம் செய்யும் கொடியவர்
அடுத்துக் கெடுக்கும் குடிகேடர்கள்



சுழல் சிங்காரதோளர் பணஆசையுளர் சாதியிலர் சண்டாளர்

வேலையின்றி வீணே சுற்றித் திரிபவர்கள்
சிங்காரமாய் தோளில் துண்டணிந்து
ஆடம்பரமாய்த் திரிபவர்கள்
பணத்தாசை கொண்டு பாவம் செய்பவர்
அது ஒன்றுமட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு
எல்ல சாதியினருடனும் கூடுபவர்
இவைஅத்தனையும் செய்யும் இழிந்த குலத்தவர்



சீசியவர் மாயவலையோடு அடியென் உழலாமல்

இவர்கள் அனைவரையும் சிறுமையென ஒதுக்கி
சீ, சீ, என விலக்கி அவர் வலையில் சிக்காமல்
என் வாழ்வு இவர்களால் குலையாவண்ணம்

சங்கோதை நாதமொடு கூடி

மோகத்தில் மூழ்காமல்
யோகத்தில் எனை ஆழ்த்தி
அவ்வழியில் யோகியர் உணர்ந்திடும்
கிண்கிணி, சிலம்பு, மணி,
சங்கம், யாழ், தாளம்,
வேய்ங்குழல்,பேரி,மத்தளம்,
முகில்
என்னும் பத்துவகை
ஓசைகளும் நான் கேட்டு
அனுபவித்து, அதில் கலந்து,


வெகு மாயை இருள் வெந்து ஓட

மாயையென்னும் கொடிய இருள்
எனைத் தீண்டாமல் வெந்து
அழிந்து வெருண்டோட


மூலஅழல் வீசி உபதேசமது தண்காதில் ஓதி

நாத ஒலியால் நிறைந்து நின்று
மாயையெல்லாம் கழிந்த எனக்கு
யோகத்தால் மூலாதாரத்தினின்று
ஒரு பிழம்பு எழுந்து என்னுள் ஏற
அவ்வேளை, என் காது குளிரும்படி,
உன்னருள் உபதேச மந்திரத்தை
உணரும்படி சொல்லி


இரு பாதமலர் சேர அருள் புரிவாயே

அது கேட்டு, விம்மி விதிர்த்து
உள்ளமெல்லாம் உருகி
உன்னிரு தாளில் யான் சேரும்
உன் திருவருளைத் தரவேண்டும்
அருளைத் தந்தருள்க!
********************************************


அருஞ்சொற்பொருள் [இதுவும் நிறையவே!!]

வங்காரம் = பொன்மாலை [பங்காரம் என்பதறிக!]
தார் = மாலை
கோடு = மார்பகம்
கொந்தாரம் = கொத்து மலர்களாலான மாலை
ஆரம் = மாலை
ஓலை = காதணி
மஞ்சு = மேகம்
சாபம் = [வான]வில்
நுதல் = நெற்றி
கொஞ்சார = கொஞ்சுதல் மிக்க
சங்காளர் = கூடிக் களிப்பவர்கள்
சங்கோதை = யோகவழியில் உணரும் ஒலிகள்
நாதம் = பத்து [வித ஒலிகள்][பொருள் விளக்கத்தில் காண்க!]
அழல் = நெருப்பு
தண் = குளிர்ந்த
சிந்தூரம் = குங்குமம், சிவந்த
சுதாகர = பிள்ளை
விருது ஓதை = வெற்றிச் சின்னங்களின் ஓசை
ஓதை = ஒலி, ஓசை
சிந்து = கடல்
கங்காளன் = எலும்பு மாலை அணிந்தவன், சிவன்
வேணி = ஜடாமுடி அணிந்தவர், சிவன்
திண் = வலிமை
ஆழி = கடல்
இங்கீத = இனிமையான இசை
வளி = வள்ளி [சந்தத்திற்காக வளி என ஆனது!]
எண்தோளர் = எட்டுத்தோள்களை உடைய சிவன்
*********************************************


வேலும் மயிலும் துணை !

முருகனருள் முன்னிற்கும் !!

அருணகிரிநாதர் தாள் வாழ்க !!!
*************************************************


Friday, June 29, 2007

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 21 "பாதி மதி நதி"

'ஆன்மீக ஊற்று", "அனைவரின் செல்லப்பிள்ளை" "அரங்கனின் புகழ்பாடும் அரும்பெரும் தொண்டர்" "என்னரும் நண்பர் " திரு.ரவி கண்ணபிரான்" என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கேட்ட பாடலை இங்கு இடுவதில் பெருமகிழ்சி அடைகிறேன்.
***************************************************************************************

------------- பாடல் ------------------

பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே

சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.

*************************************************

................பொருள்...................

[பின் பார்த்து முன்]

"ஆதி அயன் ஒடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகையுறு சிறைமீளா"



கொடுஞ்சூரன் கெடுமதியால்

மதிகெட்டு மனமயங்கி

அடுசெயலால் ஆதியாம்

பிரமன்முதல் அமரர்யாவரையும்

கொடுஞ்சிறை அடைத்து

சுடுமொழி பேசி இழித்து

கடுஞ்சொற்களால் பலவாறிகழ்ந்து

மிகவும் வாட்டி உடல் வருத்தி

நடுங்கச் செய்து அவர் பணி மாற்றி

வருந்திடும் துயர் மாற்ற

திருவுளம் கொண்டு வேற்படையேந்தி

தேவர்தம் சிறை மீட்க


"ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே"

பொன்மலையாம் மேருவிற்கு

நிகரான ஆடுகின்ற

பொன்மயிலின் மீதமர்ந்து

சூரனுடன் போர் புரிந்து

விண்ணவரைச் சிறைமீட்டு

அமரர் புடை சூழ

மண்ணதிர விண்ணதிர

என்னவரும் மனமகிழ

தும்பிக்கையான் தம்பியும்

மயில்மீதில் அமர்ந்துவர



"சூத மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனில் உறைவோனே"


மாமரங்கள் அடர்ந்திருக்கும்

சோலைவனம் சூழ்ந்திருக்கும்

சுவாமிமலை தனில் வாழும்

என் குருநாதனே!


"சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வல பெருமாளே."

மாயப்போர் புரிந்து

நீலக்கடலுள் ஒளிந்துகொண்ட

சூரனை வெளிக்கொணர

வேலெடுத்து வீசிக்காட்டி

கடல் வற்றச் செய்து

சூரன் உடல் இருகூறுபட

அசுரனைப் பிளந்து

அருளுடன் ஆட்கொண்ட

பெருமைமிகு வேலவனே!



"பாதி மதிநதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா"


தான் பெற்ற மகளிரை

மணம் கொண்ட சந்திரன்

ரோஹிணியை மட்டும்

தன்னோடு சேர்த்து

மற்றவரைத் தள்ளியதால்

மனம் கொதித்த தந்தையாம்

தக்கன் அளித்த சாபத்தால்

ஒளிகுன்றி, மதி குன்றி

நிலவனும் தான் தேய

வேறெங்கும் அலைந்தும்

வழிகாணா மனத்தினனாய்

கருணைக்கடலாம் சிவனைநாட

குற்றம் தள்ளி குணம் நாடும்

காருண்ய மூர்த்தியும்

குறைமதியைப் பிறைநுதலாய்

தன்தலையில் சூடிக் காத்த,

தேவலோகம் விட்டுச்செல்லும்

தாபத்தால் கோபம்கொண்டு

உலகினை அழிக்க உக்கிரமாய்ச்

சீறிப் புறப்பட்ட கங்கையவள்

செருக்கடக்க, உலகுய்ய

கருணைத்திருவுளம் கொண்டு

தன்சடையில் தான் தாங்கி

தணிவோடு தண்ணீர்தந்த,


அன்புருவாம் சிவனாரின்

திருநுதற்கண்ணினின்று

உலகோரின் துயர்துடைக்க

தேவர்களைக் காத்திடவே

ஈசனே தன்னைத் தானளித்த

சங்கரன்குமாரனே! குமரேசனே!



"பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா"

குறமகள் வள்ளியைக்

கடிமணம் புரியத்


திருவுளம் கொண்டு


அவருடன் விளையாட,


வேங்கை மரமாய்

வேடனாய், விருத்தனாய்

வம்புகள் பலசெய்து

வள்ளியின் கோபம் தூண்டி

அவர்தம் கனிமொழிகேட்க

கைகால்களைப் பிடித்து

கெஞ்சிக் கொஞ்சிய

அழகிய மணவாளனே!



"காதும் ஒருவிழி காகம் உற அருள்
மாயன் அரிதிரு மருகோனே"

கானகம் சென்றிட்ட இராமன்

ஓர்நாள் கண்ணசந்து மைதிலியின்

மடிமீது தலைவைத்து துயிலுகையில்

சீதையைக் கண்டு மோகித்து

இந்திரன் மகனாம் சயந்தனென்பான்

காகம் வடிவெடுத்து காரிகையின்

தனங்களைக் குத்த, ரத்தம் தெறிக்க

இராமனின் முகத்தில் அது பட்டு,

கண்விழித்த அண்ணலும் காரணம் கேட்க

காகத்தைக் காட்டி காரிகையும் சொல்லிவிட

கோபம்கொண்டு ஒரு புல்லெடுத்து

"காதும்" கொல்லுக இதனையென

காகுத்தன் ஏவிவிட, பயங்கொண்ட

காகமதும் கடிவேகம் கொண்டு

மூவுலகும் சுற்றிவர, எவரும் உதவாமல்

சிவனைத் தஞ்சமடையச், சிவனாரும்,

'குற்றம் செய்தவிடம் தேடி கும்பிட்டுக் கேள்!

குணமுடையோன் குறைகளைவான்' எனவுரைக்க

சீதாபதியின் தாள்பணிந்து காகம் வேண்ட,

'தஞ்சமென வந்தவரை தட்டுவது பண்பல்ல

பிறன்மனை நோக்கிய குற்றத்தால்

ஒரு கண்ணை பாணம் துளைக்கும்

உயிர் குடிக்காமல் உனைப் பிழைக்கும்'

எனவருளிய மாயனின் மருகோனே!


"காலன் எனை அணுகாமல் உனது
இருகாலில் வழிபட அருள்வாயே"

தக்கன் சாபம் துரத்திய

சந்திரனைப் போலவும்


பிரம்மாஸ்திரம் துரத்திய

காகம் போலவும்

காலன் எனைத் துரத்தும்

கோலம் கண்டிங்கு

கருணை என்மீது கொண்டு

கங்கையைத் தலைமேல்

கொண்டது போலவே

பிறைதனை நுதல்மேல்

அணிந்தது போலவே

காகத்துக்கும் கருணை

காட்டியது போலவே

என்னையும் உன்னிருகாலில்

சேர்த்திங்கு அருள்வாயே!
************************************************


....அருஞ்சொற்பொருள்.......

காதும் -- கொல்லும்
சூதம் -- மாமரம்
வாரி -- கடல்
சுவறிட -- வற்றிட
வல -- வலிமையுடைய

***********************************************

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!


Wednesday, May 23, 2007

அ.அ.திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப்படிந்து மடியாதே


ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்திலந்த மருள்வாயே


தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா


ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.

*************************************************************

இன்று சுவாமிமலை முருகனைப் போற்றி ஒரு எளிய, சிறிய பாடல்.

இதையும், வழக்கம் போல், பின் பார்த்து முன் பார்க்கலாம்.

"தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா"

மண்ணுலகில் உயிர்கள் இன்பமுற
மணம் கமழும் புகை சூழ்ந்த
விண்ணுலகினின்று இறங்குவது
விண்ணவரின் நல்லியல்பு

என்றோ எப்போதோ எவருக்கோ வந்திடாமல்
மன்றாடி அழைத்திடும் அடியார்க்கிரங்கி
மயிலேறி பறந்து நாடோறும் வருகுதலால்
நறுமணப்புகைமணம் எப்போதும் கமகமக்கும்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்
குழந்தையின் வடிவிலே குறைதீர்ப்பான்
நண்பனாய் வந்தே நல்லுறவு காட்டுவான்
சுகமான லீலைசெய்து சுகம் சேர்ப்பான்


"சூரனைக் கடிந்த கதிர்வேலா"

நல்லறம் மறந்து அல்லறம் புரிந்து
பொல்லாதன பலவால் பிறர் வாட
வல்லசுரர் துணைகொண்டு தீது செய்த
பொல்லாச் சூரனை இரு கூறாக
வேலாயுதத்தால் பிளந்திட்ட வேலவனே!


"ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா"

பொன்னிறமானது மேருமலை
பொன்னிறமானது மாமயிலும்

மலைகளில் உயர்ந்தது மேருமலை
முருகனின் மயிலும் அதனை ஒக்கும்.

தங்கமாமலைமயில் மீதமர்ந்து
பொங்கிவரும் அழகோடு
வீரம் நிறைந்து நிற்கும்
மயில் வாகனனே!

"ஏரகத்து அமர்ந்த பெருமாளே"

அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாக வீடு கொண்டு
சுவாமிமலையில் வீற்றிருக்கும்
பெருமையின் மிக்கவரே!

"காமியத்து அழுந்தி இளையாதே"

அன்பின் வழியவன் இறைவன்
அனைத்தும் தருபவன் அவனே

கேட்டதைக் கொடுப்பவன் அவன்
கேட்கும் வகையினை யாரறிவார்?

பொன் வேண்டும் பொருள் வேண்டும்
மண் வேண்டும் மனை வேண்டுமென

நிலையில்லா பலவும் கேட்டு
நிலையான அவனருள் மறக்கின்றோம்

மாமரத்து விதையிடுதல்
மாம்பழம் வேண்டியன்றோ?

மாவிலைக்கும் மரக்குச்சிக்கும்
மரம் வளர்த்தல் முறையாமோ?

பழம் வேண்டிப் பயிரிட்டால்
பிறயாவும் தானே வருமன்றோ?

இறையருள்நாடி அவன் புகழ்பாடு
பிறநலன் யாவும் பொருந்திவரும்.

பயன்வேண்டிச் செய்திடும்
கிரியைகளில் என் மனம்

ஆழ்ந்திங்கு இளைக்காமல்,

"காலர் கைப்படிந்து மடியாதே"

தன்னலமில்லா தொண்டு செய்யின்
தென்னவனும் தொடமாட்டான்
எமதூதர் தொல்லையில்லை

என்கின்ற உண்மைதனை உணராமல்
என் நலன் மட்டுமே நாடி நின்று
வீணே யான் இறக்காமல்,

"ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே"

ஆறெழுத்தும் அடங்கி நிற்கும்
ஓமென்னும் ஓரெழுத்தில்


"ஓரெழுத்தில் ஆறெழுத்தை
ஓதுவித்த" பெருமான்

உறைந்திருக்கும் படைவீடு
ஏரகத்தில் எம்பெருமான்

ஓரெழுத்தின் பொருளுரைக்க
விடையேறு நம்பெருமான்

பணிந்து நின்று கேட்டனன்
அன்பு கொண்டு தியானித்து

மனம் முழுதும் அதில் திளைத்து
ஓவியம்போல் அசைவற்று

முடிவென்னும் அந்தத்தில்
மோனத்தில் நான் மூழ்க

மனமிரங்கி அருளவேண்டும்.
*******************************************

அருஞ்சொற்பொருள்:

காமியம் = பயன் கருதிச் செய்யும் பூஜை, யாகம் பக்தி முதலியன.
காலர் = எமதூதர்
அந்தம் = முடிவு, இறுதி நிலை
தூமம் = நறும்புகை
கடிந்த = தண்டித்த
ஏமம் = பொன், ஹேமம்
வெற்பு = மலை
ஏரகம் = சுவாமிமலையின் மற்றொரு பெயர்

*******************************************************

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும் !!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!


Thursday, May 3, 2007

ஜி.ரா. கேட்ட "அ.அ. திருப்புகழ்" -- 19 "பரவு நெடுங்கதிர்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 19 "பரவு நெடுங்கதிர்"
[ஜி.ரா. கேட்டது!]

தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ..... தனந்தான

......பாடல்.......

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ..... யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது .... நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ..... மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ..... மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட .... மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ..... மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ..... மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ... பெருமாளே.

.....பொருள்......

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம்.]


"அரஹர சுந்தர அறுமுக என்று உனி
அடியர் பணிந்திட மகிழ்வோனே"

அரனின் மகனே! அழகனே! ஆறுமுகப் பெருமானே
என்றுன்னை அனுதினமும் மனத்தில் கொண்டு
அயராமல் தியானிக்கும் அடியவர் திறம் கண்டு
அகமெலாம் குளிர மகிழ்ச்சி கொள்வோனே!


"அசல நெடுங்கொடி அமையும் உமைதன் சுத
குறமகள் இங்கித மணவாளா"

மலையரசன் மகளாகப் பிறந்திவ்வுலகினில்
அரனையே மணவாளனாக மனம் நிறைத்து
அவனையே நினைத்து தவம் செய்து
தன்னுடல் இளைத்துக் கொடிபோலாகி
அண்டவரும் விண்டவரும் 'இளைத்ததால்
இவள் பெருமை மிகு கொடியே' எனும்
அபர்ணாவெனும் பெயர் பெற்ற உமையவளின்
கருணையினால் வந்துதித்த பேராளனே
தினைப்புனமாம் தோட்டத்தில் கவண் வீசிக்
கல்லெறிந்து கவனமாய்க் காத்திட்ட
வள்ளியின் மனமறிந்து அவளை ஆட்கொள்ள
பலவேடம் தாங்கிப் பதமாக வந்தங்கு
அவள்மனம் கவர்ந்திட்ட மணவாளனே!

"கருதரு திண்புய சரவண"

எண்ணுதற்கும் அரிதான
திரண்ட புயங்களைக் கொண்ட
சரவணன் எனும் பெயர் பெற்ற
அறுமுகக்கடவுளே!

"குங்கும களபம் அணிந்திடும் மணிமார்பா"

அணிமணி குங்குமமும்
அழகிய சந்தனமும்
அளவோடு சேர்த்து
அரும்பெரும் மார்பினில்
அணிந்திருக்கும் அழகனே!


"கனகம் மிகும்பதி மதுரை வளம்பதி
அதனில் வளர்ந்து அருள் பெருமாளே."


பொன்னாலான மாடங்கள் சூழ்ந்திருக்கும்
மதுரை என்கின்ற வளம்பெரு நகரினிலே
அருள்கொண்டு அமர்ந்திருக்கும்
பெருமையுடை தலைவனே!



"பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய
பவனி வரும்படி அதனாலே

பகர வளங்களும் நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே

வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி"

கதிரவன், நிலவு, மலை
இவை மூன்றிற்கும் ஓர்
சொந்தமுண்டு!

கதிரவன் எழுவதுவும் மலையினிலே!
மதியவள் உதிப்பதுவும் மலையினிலே!

காலை எழுவதும் கதிரவனாலே!
அவன் செங்கதிர் வீசி
தரையெலாம் பரவி
திசையினில் செல்வதும்
உலகோர் விரும்பிடவே!
அந்த உலாவரும் காட்சி
அதனாலே உலகோரின் மாட்சி!
இதுவோ அது!

மாலை மலருவதும் மதியாலே!
பணி முடிந்து வீடு வந்து
மனையாளுடன் மனம் மகிழ்ந்து
மொட்டை மாடி மீதமர்ந்து
மனம் களிக்கும் வேளையிலே
இருளகற்றி ஒளி விளக்கி
உதிப்பதுவும் மதியொளியே!
இதுவோ அது!

மலை மலையாய்த் துனபம் வரும்
மலை மலையாய் இன்பம் வரும்
மலையெல்லாம் தன் மலையாய்
கொண்டு நிற்கும் மன்னனவன்

இவ்வண்ணம் கதிரவனாய்
மாலைமதியாய் மலைகளாய்
எங்கணும் பரவி வரிசையாகி
நிற்கின்ற நின் திருவடிகளை
நான் அனுதினமும் பாடி

"வளமொடு செந்தமிழ் உரைசெய
அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே"


சொல்லிய சொல்லில் நயம் வேண்டும்
சொல்லும் சொல்லில் வளம் வேண்டும்
சொல்லுதலில் பொருளும் வேண்டும்
இம்மூன்றும் சேர்ந்தால் செந்தமிழ் ஆகும்

இத்தகு செந்தமிழ்ப் பாக்களை
நான் சூடி உனைப் போற்ற
அதுகேட்டு அடியவர் மனமகிழ
அருள் வரம் தந்து அருள வேண்டும்!

அருஞ்சொற்பொருள்:

பகர = சொல்லத்தக்க
வரை = மலை
அசல = மலை
நெடு = பெருமை வாய்ந்த
கருதரு = நினைப்பதற்கு அருமையான
களபம் = சந்தனம்
கனகம் = பொன், தங்கம்

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Tuesday, April 17, 2007

அ.அ. திருப்புகழ் -- 18 "அல்லில்"

[ஜி.ரா. கேட்ட]"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" --18 "அல்லில்"

அல்லில் நேருமி னதுதானும்
அல்ல தாகிய உடல்மாயை

கல்லினேர அ வழிதோறுங்
கையு நானுமு லையலாமோ

சொல்லி நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா

வல்லி மாரிரு புறமாக
வள்ளி யூருறை பெருமாளே.

வழக்கம் போல், பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

"சொல்லி நேர்படு முதுசூரர் தொய்ய"

எம்போல யாருண்டு எமை வெல்ல எவருண்டு
தேவரும் எம்முன்னே திகைத்து நிற்பர் எனத்
தம் வீரம் தம் திறனைச் சொல்லிக்கொண்டு
எதிர்த்து நின்ற சூரர்படை அயர்வுறவும்,

"ஊர்கெட விடும் வேலா"

அப்படிச் சொல்லிய அந்த அவுணர்கள்
வாழ்ந்து வந்த ஊரே அழியும்படி
தன்னுடைய வீரவேலை அவர்பால்
செலுத்தி அவர்களை அழித்தவரே!


"வல்லிமார் இருபுறமாக
வள்ளியூர் உறை பெருமாளே."


கஜவல்லி எனும் தெய்வானையும்
வனவல்லியெனும் வள்ளியம்மையும்
தன்னிருபக்கமும் தகைவாய்த் திகழ
வள்ளியூரென்னும் தலத்தில் திகழ்பவரே!


"அல்லில் நேரும் மின் அதுதானும்
அல்லது ஆகிய உடல்"


இரவில் தோன்றி மறையும்
மின்னல் அதுவாகினும்
ஓரிரு நொடிகள் மின்னி நிற்கும்

அத்துணை நேரமும் கூட
நிலையாது இந்தவுடல்
கணத்தில் மறையும் இது!

"கல்லினேர அ வழி தோறும்
கையும் நானும் உலையலாமோ?"


கல்லும் முள்ளும் நிறைந்த பாதை
அதுவே நமை இழுக்கும் மாயையின் பாதை
அவ்வழி செல்லுதல் எனக்குக் கூடாது
என் ஒழுக்கநிலையும் தவறலாமோ?

[என்னைக் காத்தருள்வது
நின்னருட் கடனே!]


அருஞ்சொற்பொருள்


அல்= இரவு

அ= அந்த

கை=ஒழுக்கம்

தொய்ய= அயர்வுற

வேலும் மயிலும் துணை!


முருகனருள் முன்னிற்கும்!


அருணகிரிநாதர் தாள் வாழ்க!

Sunday, March 25, 2007

"அ.அ.திருப்புகழ்--17 [தொடர்ச்சி] "சீரான கோலகால"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 17[தொடர்ச்சி]
"சீரான கோலகால நவமணி"


சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.

[முதல் பகுதியை இங்கு பார்க்கவும்]

"சீரான கோல கால நவமணி
மாலா அபிஷேக பார"


அறுமுகனுக்கு முடிகள் ஆறு.
சீறான சிறப்பு மிக்கதும்
கோலாகலமானதும் ஆன
நவமணிகளால் வரிசையாக
இழைக்கப்பட்ட திருமுடிகளைத்
தாங்கி நிற்கும் முகங்களை உடையதும்,
[கோலாகலம் எனும் சொல் சந்தத்திற்காக கோலகால என மாறியது.]


"வெகுவித தேவாதி தேவர் சேவை செயு முகமலர் ஆறும்"

முப்பத்து முக்கோடி அமரர்களும்
அவர்களின் தலைவர்களும் சேர்ந்து வங்து
அடிபணிந்து சேவித்து வணங்கி நிற்கும்
தாமரை மலர் போலும் முகங்கள் ஆறும்

"சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும்"

பெருமைமிகு வீரஇலக்குமி தேவி
எப்போதும் நீங்க நிற்கும் வீரமுடை
"ஆறிரு தடந்தோள் வாழ்க" என
முதல் வரியால் கச்சியப்பர்
கந்தபுராணத்தில் போற்றிப் புகழும்
சீர்மிகு பன்னிரு தோள்களும்


"நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும்"

நீள்வரிகளால் கோடிழைத்து
ரீங்காரம் செய்கின்ற வண்டினங்கள்
ஸ்ரீராகம் என்னும் பண்னைப்பாடி
மொய்த்திருக்கும் கடப்ப மலர்களால்
அலங்கரிக்கப்பெற்ற மணமிகுந்த
சிவந்த இரு பொற்பாதங்களும்


"ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்
ஆதார பூதமாக வலம் இட முறைவாழ்வும்"

தணியாக் காதல் கொண்டு தான் தேடி மணந்த
வேடக்குறமகளாம் வள்ளிநாச்சியாரும்,
மேகத்தை வாகனமாகக் கொண்டு
அதன் மீது ஏறி உலா வருபவனும்,
வலன் எனும் நிருதன் எனும் அரக்கனை
வதம் செய்தவனுமான இந்திரனின்


மற்றவர் கூறுகின்ற நல்ல குணங்களைக்
கொண்டதும் பட்டென்று பற்றிக்கொள்ளும்
'கொளுத்தியது விடாமை' என்கின்ற 'மடம்' என்னும்
குணம் நிறைந்த தெய்வயானை அம்மையும்
உலகங்கட்கு ஆதார சக்தியாக வலமும் இடமுமாக
உறைகின்ற உத்தம வாழ்வினையும்
[மட சாம்பிராணி எனும் சொல் இப்போது நன்கு புரியுணுமே!]


"ஆராயு நீதி வேலு மயிலும் மெய்ஞ்
ஞான அபிராம தாப வடிவமும்"


நல்லது செய்யவே செலுத்தப்படும்
நீதி புரியவே நாட்டப்படும் ஞானவேலும்
அதற்கெனவே காத்திருக்கும் மயில் வாகனத்தையும்,
மெய்யென்னும் 'சத்', ஞானமென்னும் 'சித்'
அழகின் மிகுதியால் விளையும் 'ஆனந்தம்'
இது மூன்றும் நிறைந்திருக்கும் நின் திருவுருவையும்


"ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும்"

நற்குணங்கள் ஏதுமில்லா கொடியோனாய யான்
நாள்தோறும் நினைந்து, நினைந்து உருகும்
தன்மையினைப் பெற்று எவருக்கும் கிட்டா
பேறு பெற்று உய்ய வேண்டும் என வேண்டுகிறேன்.

அருஞ்சொற்பொருள்:

அபிஷேகபார= அலங்கரிக்கப்பட்ட முடிகளை உடைய
மருவிய= தழுவி வாழ்கின்ற
நீளும்= நீண்ட
சீராகம்= ஸ்ரீராகம்
நீப பரிமள= கடப்ப மலர்களால் மணமிகுந்த

ஜீமுதம்= மேகம்
அபிராம தாபம்= அழகின் மிகுதி
ஆபாதனேன்= கொடியவனாகிய நான்
ஏர் ஆரும்= அழகு நிறைந்த
ஏழ் ஏழ் பேர்கள்= நாற்பத்தொன்பது புலவர்கள்
ஊமர்= ஊமை
ஆலவாய்= மதுரை
விசார= ஆராய்ச்சி உடையவர்
வீய= சபதம் செய்தல்
ஆழி= சக்கரப்படை
பாநு= ஆதவன், சூரியன்
கோடாமல்= குறைவின்றி

[இன்று மாத சஷ்டி பூஜை செய்ய வேண்டியிருந்ததால் இருபகுதிகளாக வெளிவர நேரிட்டது! இப்பாடலை ஸ்ரீராகத்தில் பாடுதல் உகந்தது எனச் சொல்லுவர்.]


வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!

Saturday, March 24, 2007

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.



எப்போதும் போல, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

"ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடும் இறையவர்"


ஆயகலைகள் அறுபத்து நான்கு கலைகளிலும்
நன்குணர்ந்த மதுரையம்பதியின் மன்னனாம்
இராஜசேகர பாண்டியன் அரசவைக்கு வந்தவொரு
புலவனன்று, சோழமன்னன் கரிகால் வளவனின்
திறமைதனைப் புகழ்ந்தங்கு சொல்லிடவே
தானும் மீதமுள்ள ஓர் கலையாம் பரதம் பயின்றிட,

தனக்கு வந்த கால்வலியால் வாடிநொந்து
"சற்றுநேரம் பயின்றிடவே இவ்வலியென்றால்
அனவரதமும் ஓயாது ஆடிநிற்கும் ஆடல்வல்லானுக்கு
எத்துணை வலி இருந்திருக்கும்? அவர் ஆட்டம்
நின்றுபோனாலோ உலகியக்கம் நின்றுபோம்.
எனவே கால் மாறி ஆடச் சொல்லி வேண்டிடுவோம்"

என நினைந்து வெள்ளியம்பலம் விரைந்து சென்று
விரிசடைக் கூத்தனைக் கண்டு வணங்கி
கால் மாறி ஆட வேண்டித் தவம் செய்ய,
அரசன் உயிர்விடும் நிலைகண்டு,
"வான்மாறினும் மொழி மாறாத மனம் களிக்க"
கால்மாறி ஆடத் துவங்கினான் ஆடல்வல்லானும்!

அத்தகைய கருணை நிறை தெய்வம் வாழும்
அழகுநிறை மாடகூடம் நிறை எழிலான
கூடலம்பதியின் வெள்ளியம்பலத்தில் ஏறி
கால்மாறி ஆடிநிற்கும் கண்நுதற்கடவுள்,

"ஏழேழு பேர்கள் கூற வருபொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதிசெய்த
லீலாவிசார தீர வரதர குருநாதா"

பின்னொருகாலம் மதுரையை ஆண்ட
வம்சசூடாமணி எனும் பாண்டிய மன்னன்
சண்பகமலர் கொண்டு சோமசுந்தரக்கடவுளை
அர்ச்சித்து வந்தமையால் சண்பக பாண்டியன்
எனும் பெயர் பெற்று முறையரசு செய்யும்வேளை,
காலத்தின் கூற்றால் பஞ்சம் தலை விரித்தாடியது.

பஞ்சத்தால் வாடிய பலநூறு புலவர்களை
சண்பக மன்னனும் பரிவுடன் ஆதரித்து
'நம்மிடையே தங்கி நன்நூல் படைத்து
நம்மையும் மகிழ்விக்க' என வேண்ட,
புலவோரும், 'பொருள்நூலின்றி பா இயற்றல்
இயலாதே' எனச் சொல்ல, அரசனும்

ஆலயம் ஏகி இறைவனை வணங்கி
தமிழுக்கு வந்த குறையகற்றி பொருள்நூல்
தந்தருள வேண்டிடவே, சொக்கலிங்கப் பெருமானும்
'இறையனார் அகப்பொருள்'என்னும் நூலியற்றி
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம்
தன் பீடத்தின் கீழ் வைத்து அருளினார்.

'பொருளுக்குப்' பொருள் சொல்ல புலவரை வேண்ட
ஆளொருவராய் அதற்குப் பொருளுரைத்து
தத்தம் விளக்கமே சிறந்ததென வாதாட
மீண்டும் இறைவனையே தஞ்சமடைந்து
கலகத்தை நீக்கி நல்வழி காட்ட வேண்ட,
இறைவனும் அசரீரியாக வந்து,

"உப்பரிகுடிகிழாரின் மகனாம் உருத்திரசன்மனை
அழைத்து வந்து பொருளுக்கு உரை கேட்கச் செய்"
என நல்லுரை சொல்லவே, அவ்வண்ணமே
உருத்திரசன்மனை, செட்டிப் பாலகனை,
பாலறியா மணத்தினனை, வாய் பேசா ஊமையினை
அழைத்துவந்து புலவோரின் உரை கேட்க வேண்ட,

முகக்குறிப்பாலேயே பலர் உரையினையும் கேட்டு
சிலரதை உவந்து, சிலரதை வெறுத்து,
சிலரதை புகழ்ந்து, சிலரதை இகழ்ந்து,
கபிலர், பரணர் உரைகேட்டு ஆங்காங்கு மகிழ்ந்து
நக்கீரர் உரை கேட்டு ஒவ்வொரு சொல்லுக்கும்
மகிழ்ந்து, கண்ணீர் சொரிந்து இதுவே உண்மையுரை

எனப்பாராட்டி குமரனே உருத்திரசன்மனய்
வந்து விளக்கமளித்ததைக் குறிப்பால் காட்டி
தமிழுக்குப் புகழ் சேர்த்த திருவிளையாடல்
தரணிக்குக் காட்டிய லீலா விநோதரே!
தீரம் மிகுந்தவரே! வரங்களை அருள்பவரே!
எனக்கும் இவ்வுலகுக்கும் குருநாதரே!


"கூராழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மறு பானு மறைவுசெய்
கோபாலராயன் நேயமுள திருமருகோனே"

தன்மகனைக் கொன்ற ஜயத்ரதனை பகல் பொழுதுக்குள்
கொன்றழிப்பேன் என சபதமிட்ட அருச்சனனுக்காக
பாரதப் போரில் பதினான்காம் நாளதனில்
ஆழிவிட்டு ஆதித்தனை மறைத்து
உள்ளிருந்த ஜயத்ரதனை வெளிக்கொணர்ந்து
ஆழியை திரும்ப வாங்கி பார்த்தனுக்கு உதவிட்ட

கோபாலராயன் என உலகம் போற்றும்
கண்ணபிரான் மனம் மகிழும் திருமருகனே!


[மேல் விளக்கம் வேண்டுவோர் இங்கு பார்க்கவும்!]

"கோடாமல் ஆரவார அலையெறி
காவேரியாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலையுறை பெருமாளே."


எக்காலமும் குறைவின்றி ஆரவார அலை வீசி
பெருக்கெடுத்து ஓடுகின்ற காவிரி நதி பாய்ந்து
வளம் கொழிக்கும் "வயலூர் எனும் திருத்தலத்திலும்,
கோனாடு எனப்புகழ் பெறும் "விராலிமலை"என்னும்
திருத்தலத்திலும் எந்நாளும் வீற்றிருந்து
அருள் சுரக்கும் இன்னமுதே! எம் தலைவனே!

[மீதிப் பகுதியும், அருஞ்சொற்பொருளும் இன்றிரவு வரும்!]

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!

Thursday, March 8, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16--சரவணஜாதா நமோ நம

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.


[பொருள்]

{முன் பார்த்து பின் பார்க்கலாம்!}


"இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற"

புழுதி பறந்தது ஆதவனின் மண்டலம் தனிலும்,
விண்வெளியெங்கிலும், மண்ணுலகம்தனிலும்
மூவுலகும் மறைந்தது புழுதியின் மிகுதியால்


"வானவர் எவர்களும் ஈடேற ஏழ்கடல் முறையோ என்று
அடர் பட"


புழுதியின் துகள் எழக் கண்டு வானவரும்
பொழுதினி ந்ன்கினி நமக்கே விடிந்ததென
வானவரும் மகிழ்வுடனே கூத்தாடி களிகூற
ஏழுகடல்களும் குய்யோ முறையோவென
கூக்குரலிட்டுக் கதறிக் கதறி வருந்திட


"மாமேரு பூதரம் இடிபடவேதான் நிசாசரர்
இகல் கெட"

மலைகளிலே பெருமலையாம் மாமேரு மலையும்
தன்நிலை மறைந்து துகளாகி இடிபடவும்,
எவருக்கும் பயமின்றி இரவிலே உலவுகின்ற
இராக்கதரும் தம்நிலை மறந்து ஒழிந்திடவும்


"மா வேக நீடு அயில் விடுவோனே"

இத்துணை இயல்புகளும் இவ்வாறு நிகழ்ந்திடவே
செயுமாறு தன் வீரவேலை விட்டெறிந்த வேலாயுதரே!

"மரகத ஆகார ஆயனும், இரணிய ஆகார வேதனும்,
வசு எனும் ஆகார ஈசனும், அடிபேண"


பச்சை நிறம் கொண்ட ஆயர் குலத்துதித்த
'மச்சாவதார மால்எனும் திருமாலும்,
பொன்னிறம் கொண்ட மறைகளின் தலைவனாம்
பிரமனெனும் படைப்புக் கடவுளும்,
நெருப்பு நிறம் கொண்ட சிவந்த வண்னமுடை
உருத்திரன் என்னும் உக்கிர மூர்த்தியும்,
அனைத்துக்கும் முதலான, அனைத்தையும் ஆளுவிக்கும்
உனது திருவடியை விரும்பி வணங்கிடவும்,

"மயில் உறை வாழ்வே"

அழகிய மயிலினை வாகனமய்க்
கொண்டுவரும் என் இறைவனே!

"விநாயக மலை உறை வேலா"

திருப்பத்தூருக்குக் கிழக்கே
ஐந்து மைல் தள்ளி அழகுடனே
பிள்ளையார்பட்டியெனும் விநாயகர்மலையினில்
விருப்புடன் அமர்ந்திருக்கும் வேலாயுதரே!

"மகீதர வனசரர் ஆதாரம் ஆகிய பெருமாளே!"

மலையும் மலை சார்ந்த இடமாகும்
குறிஞ்சி யெனும் காட்டில் வாழ்கின்ற
வேடருக்கு ஆதாரமாகிய பெருமைக்கு
என்றென்றும் உரியவரான பெரியவரே!

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!


"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!

"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!


"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!

"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!


அருஞ்சொற்பொருள்:
ஜாதா -- தோன்றியவரே
அதீதா -- கடந்து நின்ற பொருளே
சததளபாதா -- நூறு இதழ்த் தாமரை போலும் பாதங்கள் உடையவரே
அபிராம -- பேரழகு
தருண -- இளமை
நிருப அமர் -- தலைமை தங்கிய
பூபா -- தலைவரே
பகவதி -- ஐஸ்வர்யம், வீர்யம், புகழ், திர்ரு, ஞானம், வைராக்யம் எனும் ஆறு குணமுடையவர்
விரவிய -- மறையுமாறு
பூதரம் -- மிகப் பெரிய
நிசாசரர் -- இரவில் உலவும் இராக்கதர்
அயில் -- வேலாயுதம்ம்
ஆகார -- நிறமுடைய
இரணிய -- பொன்னிறம்
மகீதர -- மலைகளுடன்கூடிய
வனசரர்- வனத்தில் உறையும் வேடர்

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!



Wednesday, March 7, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.

[பொருள்]

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!

"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!


"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!

"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!


"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!

[இன்னும் வரும்!]

வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!