Tuesday, October 24, 2006

"அ.அ. திருப்புகழ்" - 13 "அந்தகன் வருந்தினம்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 13 "அந்தகன் வருந்தினம்"

மஹா ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு, திருச்செந்தூர் பெருமை பாடும் ஒரு பாடல்.

"பாடல்"

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையு மவிழ்ந் தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் படுவேனோ

கொந்தவிழ் சரண் சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே.
-----------------------------------------------------------


"பொருள்"
[பின் பார்த்து முன் !]

"கொந்து அவிழ் சரண் சரண் சரண் எனக்
கும்பிடு புரந்தரன் பதி பெற"


சிவனாரை வணங்கித் தவமியற்றி
அவராலே பற்பல வரங்கள் பெற்று
எவராலும் வெல்லவொணா வீரங்கொண்டு
அவுணர் தலைவனாம் சூரபதுமன்
இந்திர லோகத்தைத் தாக்கவே

தந்திரமாய் இந்திரனும்
மனைவியுடன் தப்பியோடி
மேருமலைக் குகையொன்றிலெ
மறைந்து ஒளிந்திருக்க,

சூரனும் தன் மகனாம் பானுகோபனை
'சென்று சிறைபிடித்துக் கொண்டுவா' என ஏவ
மைந்தனும் தந்தை சொல் ஏற்று
இந்திரனைக் காணாது கோபமுற்று
இந்திரபுரியைத் தீக்கு உணவாக்கி
இந்திரன் மகனாம் சயந்தனையும்
மற்றுமுள்ள தேவரையும் சிறைப்பிடிக்க,

நகரிழந்த விண்னவர்கோனும் மனம்வருந்தி
நாயகனாம் கந்தவேளைத் தஞ்சமுற
அஞ்சேல் என அபயம் அளித்து கந்தவேளும்
வேல்விடுத்து சூரனை அழித்து தேவரைச்
சிறைமீட்டு பொன்னுலகு அளித்து அருளவும்,

"குஞ்சரி குயம் புயம் பெற"

தேவர்கோனின் யானையாம் ஐராவதம்
அன்புடன் வளர்த்த தேவயானையின்
மார்புத் தனங்கள் முருகனது
சீர்மிகு தோளில் இசைந்து பரவவும்,

"அரக்கரும் மாள, குன்று இடிய"

அரக்கர் குலம் மாளவும்
கிரௌஞ்சமலை பொடிபடவும்,

"அம் பொனின் திருவரைக் கிண்கிணி
கிணின்கிணின் கிணினென,
குண்டலம் அசைந்து இளம் குழைகளில் ப்ரபைவீச,
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கை கொஞ்சிட,
மணித் தண்டைகள் கலின்கலின் கலினென,"


அழகுறு பொன்னாலான கிண்கிணி என்னிடும்
எழில்மிகு இடுப்பினில் ஆடும் ஒலியும்,

இளமையாய செவிகளிலே குண்டலங்கள்
அசைவதினால் பேரொளி வீசிடவும்,

பாதச் சலங்கைகள் பல்வித ஓசையை
தந்தன தனந்தனந் தனவென எழுப்பவும்,

இரத்தினத்தால் செய்திட்ட மணித் தண்டைகள்
கலின்கலின் கலினென சுகமாய் ஒலிக்கவும்,

"திருவான சங்கரி மனம் குழைந்து
உருகமுத்தம் தர"

தனம் தரும் திருமகளும் சேர்ந்தமைந்த
இதம் தரும் உமையவளும் மனம் கனிந்து
அன்பு மிகக் கொண்டு முத்தம் தந்திடவும்,

"வரும் செழுந் தளர்நடைச் சந்ததி
சகம் தொழும் சரவணப் பெருமாளே."


மெல்ல அசைந்து தளர்நடை போட்டுவரும்
சிவனாரின் இளங்குமரனே!
இவுலகெலாம் உய்யும் பொருட்டும்
உன்னைத் தொழும் பொருட்டும்
சரவணப் பொய்கையினில் வெளிப்பட்ட
பெருமையிற் சிறந்த முருகோனே!

"அந்தகன் வரும் தினம் பிறகிட"

எனை நாடி, என் உயிர் பறிக்க
இயமன் வரும் நாளன்று எனைப் பார்த்து
குமரக்கடவுள் தெரிசனம் கண்டவன் இவன்
எனத் தெளிந்து, புறம் கொடுத்து ஓடவும்,

"சந்ததமும் வந்து கண்டு
அரிவையர்க்கு அன்பு உருகு சங்கதம் தவிர"


விலைமகளிர் இடம் நாடி நாளும் வந்து
அவர்தம் அழகினைக் கண்டு மயங்கி உருகி
அவரோடு இணங்கிடும் குணம் நீங்கவும்,

"முக் குணம் மாள, அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து,
இந்திரிய சஞ்சலங்களை அறுத்து"

சத்துவம், இராசசம், தாமசம் என்கின்ற
மூவகைக் குணங்களும் மாண்டு போகவும்,

அந்தியில் வருவது தூக்கம்
அப்போது நிகழ்வது மறப்பு
பகலில் வருவது விழிப்பு
உடன் நிகழ்வதோ நினைப்பு
அந்தி பகல் என்கின்ற,
மறப்பு நினைப்பு என்கின்ற,
கேவலம் சகலம் என்கின்ற,
இரு அவத்தைகளும் அழியவும்,

மெய்,வாய், கண், நாசி, செவி எனப்படும்
ஐம்புலனால் வருகின்ற துன்பமனைத்தையும்
அடியோடு அறுத்தெறிந்து ஒழிக்கவும்,

"அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி"

தாமரை மலரினையொத்த
திருவடிகளின் துதி பாடி,

"செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற"

செந்திலை உணர்தல் எங்ஙனம்?

அலைகள் வந்து ஓயும் இடமாதலின்
அலைவாய் எனப் பெயரும் செந்திலுக்குண்டு!

அந்தியும் பகலும் அனவரதமும்
மறப்பு நினைப்பெனும் அலைகள் நம்மை
வாட்டுவதெல்லாம் செந்தில் அலைவாயை
நினைத்திடவே ஒடுங்கிடுமாம்!

ஆலயத்தின் உட்சுற்று எப்போதும்
வட்டமாயோ சதுரமாயோ அமைந்திருக்கும்
செந்தில் கோவில் சுற்றோ ஓம் எனும்
பிரண்வத்தின் பால் விளங்கி நிற்கும்

தூண்டுகை விநாயகர் தொடங்கி
ஆனந்தவிலாசம் சென்று
வதனாரம்ப தீர்த்தம் அடைந்து
ஷன்முக விலாசம் வழியே நடந்து
செந்திலாண்டவனைத் தெரிசிக்க
சுற்றி வந்த சுற்று ஓம் எனும் வடிவமையும்!

செந்திலை நினைக்குங்கால்
ஈதெல்லாம் உணர்ந்து உணர்ந்து
உணர்வுறுதல் வேண்டும்!

"கந்தனை அறிந்து அறிந்து
அறிவினில் சென்று செருகும் தடம் தெளி தர"

சொந்தக் கடவுளாம் கந்தக் கடம்பனை
சிந்தையில் பற்றி அவன் பெருமை உணர்ந்து......

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
குறிஞ்சி என்றாலோ அழகென்னும் பொருள்படும்
குறிஞ்சிக்கடவுளாம் கந்தனும் அழகே
காந்தமென இழுப்பவன் கந்தன்
மனதிற்கு இனியவன் கந்தன்
இவ்வுலகில் நிலைத்து நிற்பவன் கந்தன்
இப்படி பலவாறும் கந்தனை மனதில்
அறிந்து அறிந்து அவ்வறிவின் மூலம்
அறவழிச் சென்று, தன் செயல் அழிந்து
அனைத்தும் அவனே அவனே என்பதை உணரும்

"என்றுநின் தெரிசனைப் படுவேனோ"

நின் தெரிசனம் என்று யான் பெறுவேன்?
---------------------------------------------------


"அருஞ்சொற்பொருள்"

அந்தகன் = இயமன், கூற்றுவன்
பிறகிட = புறமுதுகிட்டு ஓட
சந்ததமும் = எப்போதும்
அரிவையர் = பொது மாதர்
சங்கதம் = நட்பு
அம்புயம் = தாமரை [அம்புஜம்]
கொந்து அவிழ் சரண் = பூங்கொத்துகள் மலர்ந்திருக்கும் திருவடிகள்
புரந்தரன் = இந்திரன்
குஞ்சரி = ஐராவதம் எனும் தேவ யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானை
குயம் = மார்பகங்கல்
புயம் = தோள்கள்
அம் = அழகிய
குழை = செவி
திரு = இலக்குமி
சங்கரி = பார்வதி, சுகத்தைக் கொடுப்பவள்
சந்ததி = புதல்வன் [குலம் தழைக்கப் பிறந்தவன்]
சகம் = உலகம்
--------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !!
அருணகிரிநாதர் தாள் வாழ்க !!!

----------------------------------------------------------

Monday, October 16, 2006

"அ.அ. திருப்புகழ்" 12 -- "ஓராதொன்றைப்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 12 "ஓராதொன்றைப்"


"சூரனை அடர்ந்த வேலவரே! சிவபாலனே! செந்திலாதிபதியே! மாதர் வசப்படாது உமது புகழைப் பாட அருள் புரியும் !"

---------------------------பாடல்-----------------------------------
ஓரா தொன்றைப் பாரா தந்தத்

தோடே வந்திட் டுயிர் சோர
ஊடா நற்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் பெருமாளே.

---------------------------பொருள்:-----------------------------

[வழக்கம் போல் பின் பார்த்து முன்]

"தோரா வென்றி போரா"

போரினைப் புரிபவன்
வெற்றியும் காண்பான்
தோல்வியும் காணுவன்
குமரனுக்கோ வெற்றியன்றித்
தோல்வியே இல்லை- அங்ஙனம்
தோல்வியறியாது
வெற்றிப் போர் செய்பவரே !

"மன்றல் தோளா"

மன்றத்தில் வீசிவரும்
தென்றல் காற்றைப் போன்று
நறுமணம் வீசிடும்
தோள்களை உடையோரே !

"குன்றை தொளையாடீ"

கிரௌஞ்சமெனும் குன்றத்தை
வீரமுடன் வேலெடுத்து
தொளையாகிப் போகும்வண்ணம்
தீரமுடன் செய்தவரே!

"சூதாய் எண் திக்கு ஏயா"

நேரடியாய்ப் போர் செய்திட
துணிவு இன்றிச் சூதாக
மாயங்கள் பல காட்டி
திக்கெட்டிலும் பரவி நின்று

"வஞ்சச் சூர்மா அஞ்சப் பொரும்வேலா"

வஞ்சனையாய்ப் போர் செய்த
சூரனெனும் வலிய அரக்கன்
அஞ்சி நடுங்கும் வண்ணம்
வெஞ்சமர் செய்த வேலாயுதா

"சீர் ஆர் கொன்றைத் தார்மார்பு ஒன்றச்
சே ஏறு எந்தைக்கு இனியோனே"

சீராய்ப் பூத்து
சிறப்பாய் மலர்ந்திட்ட
ஆத்தி மலரினையும்
கொன்றை மலரினையும்
ஒன்றாகச் சேர்த்தங்கு
கட்டியதோர் மாலையினை
மார்பினில் பொருந்திட
அழகுறத் திகழ்ந்திடவே
திமிர்ந்த திமில் உடைய
நிமிர்ந்த எருதின் மேல்
உயர்ந்து எழுந்துவரும்
என்னப்பனாம் ஈசனுக்கு
மிகுதியும் இனியவரே!

"தேனே!
அன்பர்க்கே ஆம் இன்சொல் சேயே!
செந்தில் பெருமாளே!"

அடியவரின் சித்தத்தில்
தேன் போன்று தித்திக்க
நினைத்திடும் போதெல்லாம்
இனித்திடும் தெய்வமே!

அருள் புரிவதும் உன் செயலே
அவ்வருளைப் புரிகையிலே
வன்சொற்கள் பேசாமல்
இன்சொல்லால் எமை மகிழ்த்தும்
செம்மைப் பண்பு காட்டும்
இன்சொல் விசாகனே!

சிறப்பான தெய்வம் நாடி
ஆரும் அலையா வண்ணம்
ஆரலைவாயில் அமர்ந்திருக்கும்
பேரறிவாளன் திருவே!

"ஓராது ஒன்றைப் பாராது"

ஒன்றெனும் ஒருமொழியாம்
ஓம் எனும் பிரணவம்
அம்மொழியை அறிந்திடவோ
குருவருளின் துணை வேண்டும்
அறிந்த பின்னர் அம்மொழியை
ஆராய்ந்து பார்த்திடல் வேண்டும்
அத்தோடு நின்றிடாமல் அதையென்றும்
மனத்தினில் உன்னுதல் வேண்டும்

அவையெல்லாம் செய்யமாட்டார்
உண்மைப் பொருளை அறிய மாட்டார்

"அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர,
ஊடா,
நன்று அற்றாற் போல் நின்று,
எட்டா மால் தந்திட்டு,
உழல் மாதர்"

அளவற்ற அழகுடனே வந்து நின்று
ஆடவரின் உயிர் சோர்ந்து போகுமாறு
கூடாமல் கூடுவார் போல் பிணங்கியும்

விருப்புடன் அணைவார் போல் இணங்கியும்
தனக்கென ஒன்றும் இல்லாதார் போன்று

தம் நடிப்பைக் காட்டியே அங்கு நின்று
அளவிலா மயக்கத்தைத் தருகின்ற

விழியுருட்டி எனை மயக்கி
இங்குமங்குமாய்த் திரிகின்ற

விலை மக்கட் பெண்டிரின்

[மேற்கூறிய குணமிங்கே
விலைமகளிர்க்கே பொருந்துவதால்
மாதர் என்று சொன்ன போதும்
அது விலைமாதரையே குறிக்கும் என அறிக
கற்புடைப் பெண்டிர் செய்வதன்று
காசுக்குச் சோரம் போவது]

"கூரா அன்பில் சோரா நின்று
அக்கு ஓயா நின்று
உள் குலையாதே"

உண்மையிலே அன்பின்றி
வெளியினிலே பகட்டு காட்டி
நடிப்பதனைச் செய்கின்ற
பொய்யான தோற்றத்தில்
உடைமைகளைப் பறிகொடுத்து,
அத்தோடு நில்லாமல்
எலும்புடன் கூடி நிற்கும்
தோல், தசை, மூளை
சுக்கிலம், இரத்தம், இரதம்
என்னும் எழுபொருளால் ஆன
இவ்வுடம்பும் ஓய்ந்து போக,

உடைமையும் போகவிட்டு
உடலையும் ஓயவிட்டு
உள்ளமும் மிக வாடி
நிற்கின்ற நிலை வராமல்,

"கோடார் செம்பொம் தோளா!"

மலை போலும் சிவந்திருக்கும்
பொன்மயமாய தோளுடைய முருகனே!

"நின் சொல் கோடாது என்கைக்கு அருள் தாராய்!"

உனைப் பாடும் சொல் ஒன்றே
புகழ் என்ற சொல்லாகும்
அதுவே திருப்புகழாகும்
மற்றெல்லாம் வீணே

வீணான செயல்கள் இங்கு
நான் செய்து மாளாமல்
தளராது உன் புகழை
நாள்தோறும் சொல்லிவர

தளராது என்னுடலும்
மறவாது உன் புகழை!
இவ்வருள் தந்திடவே
நீயெனக்கு அருள் தருவாய்!********************************************************************

அருஞ்சொற்பொருள்:

ஓராது = முழு முதற் பொருளான பிரணவ்த்தை உணராது

அந்தத்தோடே = அழகுடனே

எட்டா மால் = அளவில்லாத மயக்கம்

கூரா = பொய்யான, விருப்பமில்லாத

அக்கு = எலும்பு

கோடார் = கோடு ஆர் = மலை போன்று [உ-ம்: திருச்செங்கோடு] கூம்பி, உயர்ந்து நிற்கின்ற

கோடாது = தாழாது, வளையாது [உ-ம்: கோடாமை சான்றோர்க்கு அணி]

தோரா = தோல்வி என்பதே இல்லாது

வென்றி = வெற்றி

போரா = போர் புரிபவனே

மன்றல் = வாசனை வீசும்

பொன்ற = பொருந்தச் செய்ய

சே = எருது

சே ஏறு எந்தை = எருதின் மேல் ஏறி அமர்ந்து வரும் ஈசன், சிவன்

*************************************************************

வேலும் மயிலும் துணை !

முருகனருள் முன்னிற்கும் !

அருணகிரிநாதர் தாள் வாழ்க !

Tuesday, October 10, 2006

"அ.அ. திருப்புகழ்" -- 11 "சந்ததம்"

"அருணகிரிநாதரின் திருப்புகழ்" -- 11 "சந்ததம்"

இந்த வாரம் ஒரு எளிமையான, இனிமையான, பொருள் பொதிந்த, சுருக்கமான திருப்புகழ்!

" பாடல்"

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.

"பொருள்"

"சந்ததம் பந்தத் தொடராலே"

தன்மைக்குத் தக்கவாறு கயிறு பிணைக்கப்படும்
பசுவினைக் கட்டுவதோ ஒரு கயிற்றால்
யானையைப் பிணைப்பது இரு சங்கிலியால்
குதிரையைக் கட்டவோ கயிறு மூன்று வேண்டும்
ஊஞ்சலைக் கட்ட சங்கிலிகள் நான்கு வேண்டும்
ஆன்மாவைக் கட்டவோ ஐந்து கயிறு வேண்டும்!

கயிற்றின் எண்ணிக்கை கூடக்கூட
கட்டுவதின் முரட்டுத்தனம் விளங்கும்.
ஒருகயிற்றால் கட்டிய பசு
சுற்றளவைச் சுற்றிவரும்
இருகயிற்று யானையோ
அங்குமிங்கும் அசைந்து நிற்கும்
முக்கயிற்று குதிரையும்
முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும்.
நாற்கயிற்று ஊஞ்சலும்
மேலும் கீழும் ஆடிவரும்
ஐங்கயிற்று ஆன்மாவோ
சொர்க்கம் நரகம் பூதலம் என்னும்
மூவுலகும் சுற்றிவரும்.

கயிற்றினை அறுத்துவிடின்
கட்டுகளும் விட்டுவிடும்
பசுவென்னும் ஆன்மாவும்
பஞ்ச சங்கிலி அறுந்திடவே
பரமான்வைப் பரவி நிற்கும்.

அது போல,
தொடராக வந்து நிற்கும்
கட்டிங்கே அமைவதினால்,

"சஞ்சலத் துஞ்சித் திரியாதே
"

கட்டுண்ட ஆன்மாவும்
காலா காலமும்
உள்ளம் மடிந்து
துன்பம் அடைந்து
உணர்வு மடிந்து
உழலாமல் இருப்பதற்கு,

"கந்தன் என்று என்று உற்று
உனைநாளும் கண்டுகொண்டு
அன்புற்றிடுவேனோ"

கலியாணப் பந்தலிலே
கால்கள் கட்டியிருக்கும்
குழந்தைகளும் அதைச் சுற்றி
களிப்புடனே ஆடிடுவர்
கம்பில்லா குழந்தை அங்கே
தான் சுழன்று ஆடுகையில்
தலை சுற்றிக் கீழே வீழும்
அது போல,
உயிர்களுக்கும் ஆன்மாவிற்கும்
உறுதுணையாய்க் கம்பமாய்
உறுப்பவனே கந்தனாவான்
அவன் தாளைப் பற்றியவர்
உலகின்பம் அடைய மாட்டார்.

கந்து என்றால் தறியாகும்
ஆனையைக் கட்டுதற்கு அது பேராகும்
கந்தன் என்றால் அது போன்றே
நம் கயிற்றை அவன் பிணைப்பான்.
கந்தனைக் கண்டு அவன் தாள்பற்றி
இன்பம் அடைந்திடும் வழியென்றோ?

"தந்தியின் கொம்பைப் புணர்வோனே"

திருமாலின் கண்ணின்றே அவதரித்த
அமுதவல்லியெனும் பெண்ணாளும் குழந்தைவடிவாகி
சூரனிடம் பயந்து ஒளிந்திருந்த
இந்திரன்பால் சென்றடைய விண்ணவர்கோனும்
ஐராவதமெனும் தன்யானையிடம் அதை அளிக்க
அன்புடன் துதிக்கையால் தூக்கிச் சென்று
கற்பகவனத்தினிலே ஆசையாய் வளர்த்திடவே
சூரனை வதைத்தபின்னர் இந்திரனும்
வீரனுக்கு பரிசாக கொடுத்திட்ட தெய்வமகள்
தெய்வயானையை மணம் செய்த முருகோனே!

"சங்கரன் பங்கில் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங்குன்றில் பெருமாளே."

உமையொருபாகம் அளித்து மகிழ்கின்ற
சிவசங்கரியின் அருங்குமரா!
செந்திலையும் கண்டியையும்
ஆள்கின்ற கதிர் வேலா,
திருப்பரங்குன்றத்தில் தெய்வயானையை
மணந்திட்ட பெரியோனே!
-------------------------------------------------------------------------
அருஞ்சொற் பொருள்

சந்ததம் = தினந்தோறும்
பந்தம் = கட்டு, கட்டுப்பாடு
சஞ்சலம் = துன்பம்
துஞ்சி = அடைந்து
கந்து+அன் = கந்தன்
கந்து = யானையைக் கட்டும் தறி
தந்தி = தந்தம் உடையதால் யானை
கொம்பு = [இங்கு] பூங்கொம்பு போன்ற தெய்வயானை
சங்கரன் பங்கு = உமை, பார்வதி, சிவனிடம் ஒரு பாகம் பெற்றவள்
சிவை பலா = உமையின் மைந்தன்
------------------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !