Tuesday, June 20, 2006

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"அன்பு வலைப்பூ நண்பர்களே!
வணக்கம்.
ஆத்திகம் எனத் தலைப்பு வைத்தும், இன்னும் ஒரு பதிவும் அது பற்றிப் போடவில்லையே என ஒரு குறை மனத்தில் இருந்து கொண்டே வந்தது!
நண்பர்கள் குமரனும், இராகவனும், செல்வனும் வேறு திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர்!
திருப்புகழுக்குப் பொருள் சொல்லேன் எனவும் சொன்னார்கள்!
திருப்புகழுக்கு பொருள் சொல்லுவது என்பதை விடுத்து, அப்பொருள் வருமாறு எளிய நடையில், கவிதையாகச் சொல்லலாம் என ஒரு கருத்து பதிந்தது, மனத்தில்!
ஆகவே, 'அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி' முழு முதற்கடவுளாம் விநாயகனின் திருப்புகழோடு இதனைத் தொடங்குகிறேன்.
குற்றம், குறை எதுவானாலும், நடை கடினமாக இருந்தாலும், உடனே சொல்லி என்னைத் திருத்துமாறும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
வாரம் ஒரு பதிவிடலாம் என எண்ணுகிறேன்.
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!

1. கைத்தல நிறைகனி... [விநாயகர் துதி]


ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

தந்தன தனதன தந்தன தனதன
தந்தன தனதன......தனதான

.......பாடல்......

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக.....னடி பேணிக்

கற்றிடு மடியவர்பு த்தியி லுறைபவ
கற்பக மெனவினை..... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை

மத்தள வயிறனை உத்தமிபு தல்வனை
மட்டவிழ் மலர்கொடு...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த......அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை.....இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்.....பெருமாளே.

.....விளக்கம்.....

//கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக.....னடி பேணிக்//


இருகைகளில் நானேந்தி மனமுவந்துஅளிக்கின்ற
பழம், அப்பம், பொரி அவல் இவையனைத்தையும்,
துதிக்கையால் வாரி விருப்பமுடன் உண்ணுகின்ற
வேழமுகத்தானின் திருவடியை மிக விரும்பி,

//கற்றிடு மடியவர்பு த்தியி லுறைபவ
கற்பக மெனவினை..... கடிதேகும்//


இறைநூலைக் கற்கின்ற அடியவரின் சித்தத்தில்
நிறைவாக நீங்காது வாழ்கின்ற தெய்வமே!
குறைவின்றித் தருகின்ற கற்பகத் தருவே!- என
நிறைவாக உனை வாழ்த்த, வினையெல்லாம் விரைந்தோடும்.

//மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை//


ஊமத்தை மலருடனே, பிறைநிலவும் சடை தரித்த
அழிக்கின்ற தொழில் செய்யும் சிவன் மகனும்,
போருக்குச் செல்கின்ற வலுவான தோளுடையவனும்,
மதயானை போல்கின்ற பலத்தினை உடையவனும்,

//மத்தள வயிறனை உத்தமிபு தல்வனை
மட்டவிழ் மலர்கொடு...... பணிவேனே//


மத்தளம் போலொரு பெரு வயிறு படைத்தவனும்,
உத்தமியாம் பார்வதியாள் செல்வனாம் கணபதியை
தேன் துளிர்த்துப் பூத்திருக்கும் புதுமலர் கொண்டு
நானிங்கு வணங்கிப் பதமலர் பணிவேனே!

//முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே//


இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் நூல்வகையை
பயில்வதற்கு மனமிரங்கி, மலைகளிலே முதன்மையான
மேருவென்னும் மாமலையில், முதன்முதலில் எழுதிவைத்த
மூத்தவனே! முதன்மையானவனே! முழுமையானவனே!

//முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த......அதிதீரா//


நின்னை வணங்காமல், திரிபுரத்தை அழிக்க எண்ணி
போர்புரிய விரைந்துசென்ற சிவனாரின் திருத்தேரின்
முன்னச்சு முறிந்து, பொடிப்பொடியாய் போகச் செய்த
தன்நிகரில்லா வீரனே! தீரனே! சூரனே!

//அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை.....இபமாகி//


தினைப்புனத்தில் குறத்தியினைத் தேடிச்சென்று
அவள்மீது மையல்கொண்டு மனம் வருந்தி
நடைநடையாய் நடந்து சென்ற தம்பியாம்
சுப்பிரமணியன் துயர் தீர ஆனையாய் முன் தோன்றி.

//அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்.....பெருமாளே.//


குறமகளைப் பயமுறுத்தி சிறியவனிடம் செல்லவைத்து
எதிர்த்து வந்த அனைவரையும் திறத்தாலே வெருளவைத்து
அப்போதே அங்கேயே அவளை இளையவனுக்கு மணம் முடிக்க
அருள் செய்த பெருமகனே! பெரியவனே! பெருமாளே!

No comments: