Thursday, July 13, 2006

"அ.அ.திருப்புகழ்" -- 4 "உனைத் தினம் தொழுதிலன் "

"அ.அ.திருப்புகழ்" -- 4 "உனைத் தினம் தொழுதிலன் "

இப்பாடல் சற்று கடினமான பாடல். விரித்துப் பொருள் சொல்ல வேண்டிய பாடல். பதிவு சற்றே நீளமாக இருக்கும். அருள் கூர்ந்து அருணகிரியார் மேலிருக்கும் அன்பினால், விரிவாகப் பொருள் சொல்லத் துணிந்தேன். இதனைப் பதிவெடுத்து, சிறிது சிறிதாகப் படித்து உணர்ந்தால், மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்!
*************************************************************************************

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 4"

"உனைத்தினந் தொழுதிலன்"

ராகம் -- சாவேரி
தாளம் -- ஆதி

தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன -- தனதான

>>>>>>>>>>>பாடல்>>>>>>>>>>>>

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடு னடியிணை
உறப்ப ணிந்தில னொருதவ மிலனுன -- தருள்மாறா

உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் -- மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலித னுழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு -- பொருபோதே

கலக்கு றுஞ்செய லொழிவற அழிவறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தி லென்பய மறமயில் முதுகினில் -- வருவாயே

வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுண
விரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் -- புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை -- யுடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுனி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுனி வரர்தொழ -- மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண -- பெருமாளே.

****************************************************************************************************
இப்பாடலின் இரண்டாம் பகுதிக்குப் பொருள் சொல்லி, பின்னர் முதற் பாதியை உணரலாம்!

"வினைத்தலம் தனில் அலகைகள் குதிகொள"

சீறுகின்ற வீரர்கள் தீரமுடன் போரிடும் வீரமிகு போர்க்களத்தில்
கோரமிகு பேய்களும் குறைவில்லா மகிழ்வுடனே குதித்துக் கூத்தாடவும்,

"விழுக்கு உடைந்தும், மெய் உகு தசை கழுகு உண"

தோலுக்கு உள்ளிருக்கும் நிணமென்னும் சதை உடைந்து
உடலினின்று சிந்துகின்ற தசையென்னும் மாமிசத்தை
கொடிய வல்லூறு எனும் கழுகுகள் கொத்தித் தின்னவும்,

"விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரிவேலா"

அள்ளி முடியும் வழக்கமிலாக் காரணத்தால்
விரிந்து கிடக்கின்ற தலைமுடியினையுடைய
அவுணர் எனும் இராக்கதக் கூட்டங்களை
அழித்திடவே போர்புரியும் வேலாயுதப் பெருமானே!

"மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுகடு உழு
நறைவிரைத்த சந்தன ம்ருகமத
புயவரை உடையோனே"


இனிய குரலுடன் அழகிய பண் பாடும்
குயிலினை ஒத்த மொழியினைப் பேசிடும்
கொடியினை நிகர்த்த இடையினையுடைய
குறிஞ்சிப்பெண்ணாம் வள்ளிமலைக்காரியின்
பொலிந்த குங்குமம் திளைந்த மார்பில்
வலிந்து பரவி, மணந்த சந்தனமும்
உயர்ந்த மானின் உடலினின்று விளைந்திடும்
கஸ்தூரியென்னும் வாசனைப்பொருளும்
படிந்து நிற்கும் தோளினை உடையோனே!

"தினத்தினம் சதுர் மறைமுனி முறைகொடு"

நல்வேதம் உணர்ந்திட்ட நான்முகனாம் பிரமனும்
வல்விதியில் சொன்னபடி நாள்தோறும் முறைப்படியே

"புனல் சொரிந்து அலர் பொதிய"

நன்நீரைக் கொண்டுவந்து திருமஞ்சன நீராட்டி
வாசமிகு பூக்களால் அருச்சனை செய்யவும்,

" விணவரொடு சினத்தை நிந்தனை செயும் முனிவரர் தொழ மகிழ்வோனே"

வானுறையும் விண்ணவரும், சினம் ஒழிந்த முனிவோரும்
உனைப்பணிந்து அடிதொழவும், உளம்மகிழச் சிரிப்பவனே!

"தெனத்தெனந்தன என வரியளி நறைதெவிட்ட
அன்பொடு பருகு உ யர் பொழில் திகழ்"


'தெனத்தெனந்தன'வென ரீங்காரம் செய்திடும்
வரிகளையுடைய வண்டுகளும் மலர்ந்திருக்கும் பூவின்
தேனினைத் தெவிட்டும் அளவினிலே மகிழ்வுடன் உண்ணும்
விண்ணினை எட்டும் உயர் சோலைகள் திகழும்,

"திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே"

திருப்பரங்குன்றமெனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
சரவணபவ எனும் பெருமைக்கு உடையவரே!

"உனைத் தினம் தொழுதிலன்"

முத்தி அடைந்திட முதல் படியாக
சத்திச் சரவணனை இருகை கூப்பி
பத்தியுடன் எப்போதும் பயனுறவே நானும்
துதித்திடும் செயலினைச் செய்ததுமில்லையே!

"உனது இயல்பினை உரைத்திலன்"

நாவு படைத்ததன் பயனறியாமலே
தாவும் மயிலேறி சங்கடங்கள் தீர்க்க வரு ம்
தேவயானைத் துணைவனைப் போற்றிடும்
மேவுகுணங்களைசொன்னதுமில்லையே!

"பல மலர்கொடு உன் அடி இணை
உறப் பணிந்திலன்"


கலி வந்து வாட்டிடுகையில் என்செய்வோமென
நலிந்தோரெல்லாம் நடுங்கி நிற்கையில்
'மலர்போலும் சிவனது பாத மலருண்டு
மலரிட்டு வணங்கிட நறுமலரும் உண்டு
குளிர்ந்த நீர்க் குளியாட்டலும் உண்டு'என
எளியவர்க்கு அருளிடும் கண்ணபிரான் உரைத்தபடி
விடியுமுன்னர் எழுந்திருந்து தூய நீராடி
கூடையினை நாபிக்குக் மேலேந்தி சோலை அடைந்து
முந்தை வினையழிக்கும் இறைவனது நாமம் சொல்லி
செடியினிலே பூத்திருக்கும் நறுமலரைப் பறித்து
வடிவான மாலைகளும் தனி மலரும் சேர்த்துவந்து
அடியார்க்கு அருளிடும் பரமனது நாமம் செப்பி
திருவடியிற் பொருந்துமாறு நெற்றியினை வைத்து
இருகால், இருதோள், இருகை, நெற்றி, மார்புயெனும்
எட்டங்கமும் படுமாறு நிலத்தில் வீழ்ந்து
உனை வணங்கும் நெறியினையும் புரிந்தேனில்லையே!

"ஒரு தவம் இலன்"

மன்னு பிறவி தந்த உந்தன் கருணையினை எண்ணி எண்ணி
உன்னை நினைந்தே உள்ளும் உடலும் உருகி உருகி
என்பெலாம் கரைந்திடவே கண்ணீர் விட்டு அழுது அழுது
அன்புமயமாகி அசைவற்று ஓரிடத்திலே நினைந்து நினைந்து
இன்பத்தவத்தினையே ஓர் கணமேனும் செய்தேனில்லையே!

"அருள்மாறா உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்"

உள்ளன்பு பூண்டு வெளிவேடம் காட்டாமல்
கள்ளமிலா மனத்துடன் உனைப் பணியும்
வெள்ளமெனப் பெருகிடும் அருளை வழங்கிடும்
நின்னடியார் இருக்கின்ற இடம் நாடி அவர் பாதம்
பணியும் திண்மையும் அறிந்தேனில்லையே!

"விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்"

கால்கள் பெற்ற பயன் நீ இருக்கும் மலைகளையும்
வேலவனின் கோயிலையும் வலம் வந்து பணிதலே என்னும்
சீலமிகு வழியினையும் செய்தேனில்லையே!

"உவப்பொடு உன் புகழ் துதிசெய விழைகிலன்"

உன்புகழைப் பாடுதலே உவப்பிலா இன்பமெனில்
திருப்புகழைப் பாடிடுதல் எத்துணை பேரின்பம்!
இப்புகழை உணராமல் வாழ்நாளை வீணாக்கி
நின்புகழை விருப்புடன்பாட விரும்பினேனில்லையே!

[இவையனைத்தும் செய்யாமல் இப்பொழுதைக் கழித்ததாலே]

"மலைபோலே கனைத்து எழும் பகடு அது பிடர்மிசை வரு
கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறடு கதைகொடு பொருபோதே"


மலை போலும் உருவுடன், சினத்துடன் கனைத்து எழும்
எருமையின் மீதேறி அடங்காக் கோபத்துடன்
காலனின் தூதுவர்கள் கையில் பாசக்கயிறேந்தி
கொல்லுகின்ற கதையெனும் ஆயுதமும் தாங்கியே
வெல்லுதற்காக என்னெதிரே வேகமாக வரும்போது,

"கலக்குறும் செயல் ஒழிவற அழிவறு"

'என் செய்வேன்'எனக் கலக்கம் எனை வாட்டிடும் வேளையில்
'யானிருக்க பயமேன்'என என்கவலை அனைத்தினையும்
அழிந்தும் ஒழிந்தும் போகுமாறு செய்திடவும்,

"கருத்து நைந்து அலம் உறுபொழுது
அளவைகொள் கணத்தில் என் பயம் அற"


பயத்திலும், சோகத்திலும் என்வசமிழந்து உளம் நலிந்து
நான் வருத்தம் கொண்டிடும் வேளையினில்
என்னிடம் ஏற்பட்ட இப்பயங்கள் நீங்கிடவும்,

"மயில் முதுகினில் வருவாயே"

குறையிலாத திருமயிலின் முதுகினில் நீ அமர்ந்து
விரைந்து வந்து எனக்கு அருளிட வேண்டும்!
___________________________________________________________________________________________________________

அருஞ்சொற்பொருள்:

பகடு:
எருமைகிடா
மறலி: எமன்
உழையினர்: தூதுவர்
அலம்: மனக்கவலை
<strong>அளவைகொள் கணத்தில்: அளவுபடுகின்ற ஒரு கணப்பொழுதில்
வினைத்தலம்: போர்க்களம்
<strong>அலகை: பேய்
விழுக்கு: சதை
குஞ்சியர்: தலைமுடியை உடையவர்
அவுணர்: இராக்கதர்
கொடிச்சி: கொடி போன்ற இடை உடையவள்
நறை: வாசனை
ம்ருகமத: கஸ்தூரி மான் உடலினின்று வரும் கஸ்தூரி எனும் வாசனைப் பொருள்
சதுர்மறைமுனி: பிரமன்
புனல்: நீர்
அலர்: மலர்
அளி: வண்டு
*************************************************************************************
வேலும் மயிலும் துணை!
முருகன் அருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
*************************************************************************************

...

No comments: