Saturday, August 19, 2006

a.a.thiruppugazh -- 7 "allasaladai-ndha"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் [7] -- "அல்லசலடைந்த"

தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த தனதான

............பாடல்............

அல்லசல டைந்த வில்லடல/னங்கன்
அல்லிமல ரம்பு தனையேவ

அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமுது கிண்ட அணையூடே

சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று முனியாதே

துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு தரவேணும்

கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
கல்விகரை கண்ட புலவோனே

கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை யருள்வோனே

வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த மயில்வீரா

வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே.

********************************************************************


அகப்பொருள் துறையில் பாடப்பெற்ற அற்புதப் பாடல் இது.
நாயகனை விரும்பி, வேட்கை கொண்டு வாடி வருந்தும் தன் மகளைக் குறித்துத் தாய் இரங்கிப் பாடுகின்றாள் என்னும் வகையில் அமைந்துள்ளது.
துணையைப் பிரிந்தோ, அல்லது இணக்கமின்றியோ வருந்தும் ஒவ்வொருவரும் பாடி வேண்டக் கூடிய பாடல்.
இனி பொருளைப் பார்ப்போம்! பின் பாதி முதலில் கண்டு, முன் பாதி அடுத்து வரும்.

********************************************************************

"கல் அசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரைகண்ட புலவோனே"


அன்றொரு நாள் தேவரும், முனிவரும் கூடி
இன்றிங்கு வீற்றிருக்கும் புலவோரில்
முன்நின்று முதன்மை செய்யும்
நன்றான புலவர்க்கு விருதளித்து
சிறப்பொன்று செய்தல் வேண்டுமென
ஒன்றாக முடிவு செய்து,

நாமகளின் வடிவான ஔவைக்கே
பூமாலை சூட்டவெண்ணி
தாம்பூலம் பெற்று தயவு செய்கவென
வேண்டிக் கேட்டிடவே ஔவையும்,
"புலவரெனில் அது மற்றும்
தேவரையே குறித்தலாயின்
அவர்க்குத் தலைவனாம்
இந்திரனையே அது சாரும்
ஐந்திரமெனும் இலக்கண
நூலொன்று படைத்ததனால்"
எனப் புகல, அவ்வண்ணமே அவரும்
இந்திரனை நாடியே தாம்பூலம் நீட்ட,

இந்திரனும் நடு நடுங்கி
"ஒரு நூலைச் செய்ததினால்
நான் புலவன் ஆகமாட்டேன்!
பல நூலும் கற்றிட்ட
அகத்தியரையே இது சாரும்!
அவரிடமே தந்திடுக!" எனச் சொல்லி,

அகத்தியரிடம் நீட்டுங்கால்
அகத்தியரும் தான் நகைத்து,
"பலநூலைக் கற்றதினால்
நான் புலவன் ஆவேனோ?
எனக்கிதனைத் தந்தவளாம்
கலைவாணி அவர்க்கன்றோ
இவ்வருமை தரலாகும்!" என அனுப்ப,

வாணியோ தான் மறுத்து
"வேதத்தில் வல்லவராம்
என் கணவர்க்கே இது சேரும்" எனச் சொல்ல,
பிரமனோ மனம் கலங்கி,
"வாக்கிற்கும், அறிவிற்கும்
தலைவியாம் உமையவளே
இதைப் பெற்றிடும் தகைவுடையாள்!
அவரிடமே ஈந்திடுக! எனப் பணிக்க,

அவ்வாறே இவர்களும் உமையை நாடி வேண்ட,
வாகீச்வரியும் முறுவலித்து,
"நன்று, நன்று ! நான் இதற்கு
உரியவள் அன்று! என் குமரன்
ஞானஸ்கந்தன், ஞானபண்டிதன்
சிவகுருநாதன் குமரவேளே
இதற்குரியவன்!" என அருள,

"மூவர் முதல்வா! முத்தமிழ் வேளே!
வித்வத் தாம்பூலம் ஏற்றருள்க!" எனப் பணிய,
"நல்லது! அவ்வண்ணமே ஆகுக!" என
கந்தவேளும் தாம்பூலம் ஏற்றருளினார்!

இவ்வண்ணம் மலைமங்கை வரையில் போய்
அவ்வம்மையே "புலவன் என் குமரனே!"
எனச் சொன்னதனாலே 'புலவன்'
எனும் பெருமை படைத்த முருகோனே!

"கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று
கல்லல் அற ஒன்றை அருள்வோனே"


'நமசிவாய'வெனும் ஐந்தெழுத்தைக்
குறித்தாற்போல் ஐந்துஇதழ் கொண்டு
அதன் நடுவே வளைந்திருக்கும்
தோகையும் 'ஓம்'என்னும் பிரணவத்தைக்
காட்டுதல் போல் வடிவமைந்த

கொன்றையெனும் மலர் சூடி
அடியவர்க்கு அனைத்தையும் வழங்குதலால்
வள்ளலெனும் பெயர் கொண்ட
சிவன் பணிந்து கேட்டிடவே
அன்றவர்க்கு பிரணவத்தின் பொருள் சொல்லி
அவர் ஐயம் தீர்த்திட்ட அருள் மழையே!

"வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச
வல்லமை தெரிந்த மயில்வீரா"


பலம்கொண்ட அசுரர்படை அஞ்சி ஓட
நலமான விண்ணவரும் பிழைக்கும் வண்ணம்
திறம் காட்டிச் சமர் புரிந்த
மயில் மீதமர்ந்த பெருவீரனே!

"வள்ளி படர்கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே"


வள்ளிக்கொடி படர்கின்ற
வள்ளிமலை அடைந்து
வள்ளியெனும் குறமகளை
அள்ளி மணம் செய்த பெருமாளே!

"அல் அசல் அடைந்த வில் அடல் அனங்கன்
அல்லிமலர் அம்பு தனையேவ"


காரிருள் படரும் நள்ளிரவு வேளையினில்
வேறிடத்தினின்று வந்து வில்லேந்தி
அன்றங்கு சிவனால் உடல் எரிந்து போனதினால்
'அனங்கன்' எனும் பேர் படைத்த மன்மதனும்
தாமரை மலர்க்கணையைச் செலுத்தவும்,

"பிள்ளைமதி தென்றல் அள்ளி எரி சிந்த"

பிறை நிலவும், வீசு தென்றலும்
தன்நிலை மறந்து இயல்புக்கு மாறாய்
கொதிக்கின்ற நெருப்பினையே
அள்ளி வீசித் துயர் செய்யவும்,

"ஐயம் உது கிண்ட அணையூடே"

என் தலைவன் வருவானோ, வந்தருள் புரிவானோ
என்னுமொரு ஐயத்தை தன் மனதில் கொண்டு
மலர்ப்படுக்கையும் நொந்து போக

"சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று
தொல்லை வினை என்று முனியாதே"


தோழியர் சொல்லுகின்ற சொற்களால் மனம் வருந்தி
தாமரை மலர் வாழும் இலக்குமி போலும் இம்மங்கை
தனியே படுத்து தான் நோக உளம் வாடி
'யான் செய்த தீவினையால் இவ்வண்ணம் வாடுகிறேன்'
என வருந்தி, வெறுத்து, நொந்து போகா வண்ணம்,

"துய்யவரி வண்டு செய்ய மது உண்டு
துள்ளிய கடம்பு தரவேணும்"


சுத்தமான வரிகளைக் கொண்ட வண்டினங்கள்
உத்தமமான சிவந்த தேனை உன்டு
மதிமயங்கித் துள்ளிக் குதித்திடும்
கடம்ப மலர்களால் ஆன மாலையினை நீயிங்கு
நங்கையவள் துயர் தீரும் வண்ணம்
தந்தருளிக் காக்க வேணும்!
*****************************************************************************

அருஞ்சொற்பொருள்:

அல்
= இரவு
அசல் = அயல்= வேறிடம்
அனங்கன் = உடல் எரிந்து போனதால், உடல் இல்லாதவன் = மன்மதன், காமன்
எரி = தணல், நெருப்பு
உது கிண்ட = கலக்கம் வந்து வாட்ட
அரவிந்தவல்லி = தாமரை மலர் மேல் வாசம் செய்யும் இலக்குமி, அலர் மேல் வல்லி
முனியாதே = வெறுக்காமல்
துய்ய வரி வண்டு = தூய்மையான வரிகளைக் கோண்ட வண்டுகள்
கல் அசல மங்கை = மலை மேல் வாழும் மலைமகள்
வள்ளல் = அனைத்தையும் குறைவறத் தரும் சிவபெருமான்
கல்லல் அற = குழப்பம் நீங்குமாறு
ஒன்றை = முழு முதற் பொருளான ஓம் எனும் பிரணவம்
சுரர் = விண்ணவர்
விஞ்ச = பிழைக்குமாறு
******************************************************************

முருகன் அருள் முன்னிற்கும் !
வேலும் மயிலும் துணை !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !
**********************************************************************

No comments: