Monday, September 11, 2006

அ.அ. திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய'

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய"


"ஆவி பிரியுங்கால் மயில் மீது வந்து எனையாள்!"

.............பாடல்.............

தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன -- தனதான

தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி

தொண்டுகிழவ னிவனாரென இருமல்
கிண்கிணெனமு னுரையே குழறவிழி
துஞ்சுகுருடு படவே செவிடுபடு -- செவியாகி

வந்தபிணியு மதிலே மிடையுமொரு
பண்டிதனுமெ யுறுவே தனையுமிள
மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்றிசருவ மலமே யொழுகவுயிர்
மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும்

எந்தைவருக ரகுநா யகவருக
மைந்தவருக மகனே யினிவருக
என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம

இங்குவருக அரசே வருகமுலை
யுண்கவருக மலர்சூ டிடவருக
என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன்

சிந்தைமகிழு மருகா குறவரிள
வஞ்சிமருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -- அதிதீரா

திங்களரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே.
00000000000000000000000000000000000000000000000000000000000
சைவம், வைணவம் இவற்றில் பேதம் ஒன்றுமில்லை எனப் பகரும் அற்புதக் கவிதை இது!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


...........பொருள்.................

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம் !]

"எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனது ஆருயிர் வருக
அபிராம இங்கு வருக அரசே வருக
முலைஉண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினோடு கோசலை புகல
வருமாயன்சிந்தை மகிழு மருகா"

பலவாறு தவம் செய்துவேண்டியதின் விளைவாய்
மன்னு புகழ் கோசலைதன்மணிவயிறு வாய்த்த
ரகுகுலம் தழைக்க வந்தஎந்தையே வருக!

'மைந்த வருக' வென அழைத்ததற்கோர்
காரணமும் இங்குண்டு!

தனக்குரிய வயது வந்தும்
தன் கையை நம்பாமல்
தந்தையின் வருவாய் அறியாமலும்,
அவர் அணைப்பில் இருக்கிறவன் 'பாலன்'.

வயதான தந்தையங்கு
வருவாயைக் கொன்டுவர,
தானதற்கு உதவிடாமல்
தான் தோன்றியாய் இருப்பவன் 'பிள்ளை'.

தந்தைக்கே ஞானம் உரைக்கும்
அறிவு பெற்றவன் 'குமாரன்'.

தந்தை தாயின் நலம் பேணி
அவர்க்குக் கருமம் செய்தங்கே
நற்கதிக்கு அனுப்புபவன் 'புத்திரன்'.

இருக்கும் காலத்தில்
பெற்றவர் நலம் பேணி
நற்செயல்கள் புரிபவன் 'புதல்வன்'.

தன் குடும்ப நலன் பேணி
தந்தையவன் கடனேற்று
ஆலமரம் போல் காப்பவ்னே 'மகன்'.

தன் குடும்பம், தன் தாய்
தந்தையர் குடும்பம்
குருவின் குடும்பம் மற்றும்தம்
நண்பரின் குடும்பம்
இவையனைத்தும்
தன் குடும்பம் போல்காப்பவனோ 'மைந்தன்'!

இராமனோ தன் குடும்பம் மட்டுமின்றி
குகன், சுக்ரீவன், விபீடணன்குடும்பமதையும்
காத்திடுவான் நாளை என அறிந்து
'மைந்த வருக' வென வழைத்து,
பின், தன் குடும்ப மானமும்
காப்பவனும் இவனெனத் தெளிந்து
'இனி மகனே வருக' வெனவும்
அழைத்திட்டாள் மாதரசி கோசலை!

எனது கண்ணின் மணியே வருவாய்!
என் ஆருயிர்க்கு நிகரானவனே வருவாய்!
அழகிற் சிறந்தவனே வருவாய்!
இம்மாநிலத்தின் அரசனே வருவாய்!

தான் அந்தக் குண நலன்கள்
தன்னங்கே கொண்டதனால்,
தாயின் முலைப்பாலைக் குடிக்கின்ற
அவனுக்கும் அந்நலங்கள் வரட்டுமென
'முலையுண்க வருக'
வெனவும் அழைக்கின்றாள்!

மணக்கும் இந்த நறுமலரைச்
சூடிடவே வருவாய்!

என அன்னையாம் கோசலையும்
மகிழ்ந்து கொண்டாடி
மனம் குளிர அழைக்கின்ற
மாயவனாம் இராமனெனும்
அவதாரமாய் வந்த அந்தநாராயணனும் ,

தானங்கு மாயத்தால் கோசலையின் அன்பிற்குக்
கட்டுண்டு கிடந்த நிலை போலே
இங்கிந்த சரவணனும் கார்த்திகைப்
பெண்டிர் அழைத்திடவே அறுமுலையுண்ணும்
காட்சியினைக் கண்டே மனம் மகிழும் படி
திருவிளையாடும் முருகா!

"குறவர் இளவஞ்சி மருவும் அழகா"

அழகன் இவனே எனத் தெளிந்து
உனை அணைக்க வருகின்ற
குறவள்ளியின் மணாளனே!

"அமரர் சிறை சிந்த,
அசுரர் கிளை வேரொடு மடிய அதிதீரா"

பல யுகமாய் சிறையில் உழன்று
நெடுந்துயர் அடைந்திட்ட
தேவரெனும் நற்குணங்கள்
அசதி, சோம்பல் எனும்
தாமச குணம் என்னும்
அசுரரால் வருந்தி நிற்க
அயர்வை அகற்றி, நல்லுணர்வை அளிக்க,
அசுரரை வாட்டி, தேவரை சிறை மீட்ட
பெருவீரம் படைத்த முருகா!

"திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர"

நீயே சரணமெனத் தனை
நாடி வந்த சந்திரனையும்,
உனைக் கொல்வேன் எனச் சபதம் செய்து
ஓடி வந்த பாம்பினையும்,
ஒரு சேர அன்பு கொண்டு அபயமளித்து,
பாய்ந்து வந்த கங்கையின்
சீற்றமடக்கிக் கருணையினால்,
தன் தலையில் இன்பமுடன்
சூடிக்கொண்ட சிவனாரின் திருக்குமரா!

"அலையே கரை பொருத செந்தில் நகரில்
இனிதே மருவி வளர் பெருமாளே"

பல்வகையாம் எண்ணமெனும்
பெருஅலைகள் ஓடிவந்து
தன்னடியில் கலந்தங்கே
தாம் அமைதி எய்துமாறு
செந்திலம்பதியினிலே
உறைகின்ற பெரிய கடவுளே!

"தொந்தி சரிய, மயிரே வெளிற,நிரை தந்தம் அசைய,
முதுகே வளைய,இதழ் தொங்க, ஒரு கை தடி மேல் வர
மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவன் ஆர் என"

என் வயது ஏறிடும் காலத்தே
வயிறங்கே பெருத்து முன்னே
தொந்தியெனச் சரியவும்,

கருநிறமாய் நான் காத்த
முடியங்கு வெளுத்துப் போய்
நரைமுடியாய் ஆகிடவும்,

உறுதியாய் நான் தேய்த்து
நிதம் வளர்த்த பற்களும்
அங்கங்கே அசைந்திடவும்,

வீரமாய் நிமிர்ந்தங்கு காட்டிய முதுகும்
பல்லக்கு போலின்று வளைந்திடவும்,

பவழம் போல் விரிந்திருந்த
உதடதுவும் தொங்கிடவும்,

இருகரம் வீசி நடந்த நான் இன்று
ஒருகரத்தில் தடி ஒன்றை ஊன்றி
நடக்கவே நேர்ந்திடவும்,

அதைக்கண்டு இளவயது
மங்கையரெலாம் 'யார் இந்தத்
தொண்டு கிழவன் இங்கே' என நகைத்திடவும்,

"இருமல் கிண்கிணென
முன் உரையே குழற
விழி துஞ்சு குருடு படவே
செவிடுபடு செவியாகி
வந்த பிணியும்
அதிலே மிடையும் ஒரு பண்டிதனும்
மெய் உறு வேதனையும்"

இருமல் எனும் கொடும்பாவி
'கிண் கிண்' எனஓசையுடன் வெளிக்கிளம்பி,

இதுகாறும் திருத்தமாய்ப்
பேசிய பேச்சுகளும் குழறிப்போய்,

ஒளியுடன் விளங்கிய கண்பார்வை
இன்று தூங்குதல் போலே மங்கிடவும்,

துல்லியமாய் இதுவரையில்
கேட்டுவந்த காதுகளும்இன்று
பஞ்சடைத்து செவிடாகவும்,

மிடுக்கென வாழ்ந்த தேகம் இன்று
நொடிக்கொரு நோயென ஆட்பட்டு,

அதனாலதை அகற்றவே ஒரு வைத்தியனும்
நிதம் எந்தன் வீடு தேடி வந்திடலும்,

நோயின் துயரால் என் மேனி வாடுதலும்,

"இள மைந்தர் உடைமை கடன் ஏதென,
முடுகு -- துயர்மேவி, மங்கை அழுது விழவே,
யமபடர்கள் நின்று சருவ,
மலமே யொழுக,உயிர் மங்குபொழுது,
கடிதே மயிலின் மிசை வரவேணும்."

என்னுயிர் போதல் நிச்சயமெனத் தெளிந்து,
தன் தந்தை இன்னுமென்ன கடன் விட்டுச் செல்கிறான் என
என் இளவயது மக்களும் கணக்கிட்டு நின்றிடவும்,

வாய் பேச வழியின்றி, இதனை நான் கேட்டே
மனது துயர் பெருகி மயங்கிடவும்,

என் மனையாள் ஓவெனக் கதறி
என்மீது விழுந்து அழுதிடவும்,

எமதூதர் வந்தங்கு என்னுயிர் பற்றிடவே
எதிர்பார்ப்பாய் வந்திடவும்,

என் மலம் அங்கு நீர் போல் ஒழுகிடவும்,
என் உயிர் சற்றே எனை விட்டுப் போகின்ற

நேரமதில் முருகா நீ
அழகான மயில் மீதேறி
எனை வந்து காத்திட வேண்டுகிறேன்!
0000000000000000000000000000000000000000000000000000000000000000

அருஞ்சொற்பொருள்:

தந்தம்= பல்
துஞ்சு= தூங்குதல்
மிடையும்= நெருங்கும்
முடுகு= இதனால் ஆகிய
கடிதே= விரைவாக
அபிராம= அழகிற் சிறந்தவன்

------------------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!


**************************************************************************

No comments: