Monday, October 16, 2006

"அ.அ. திருப்புகழ்" 12 -- "ஓராதொன்றைப்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 12 "ஓராதொன்றைப்"


"சூரனை அடர்ந்த வேலவரே! சிவபாலனே! செந்திலாதிபதியே! மாதர் வசப்படாது உமது புகழைப் பாட அருள் புரியும் !"

---------------------------பாடல்-----------------------------------
ஓரா தொன்றைப் பாரா தந்தத்

தோடே வந்திட் டுயிர் சோர
ஊடா நற்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் பெருமாளே.

---------------------------பொருள்:-----------------------------

[வழக்கம் போல் பின் பார்த்து முன்]

"தோரா வென்றி போரா"

போரினைப் புரிபவன்
வெற்றியும் காண்பான்
தோல்வியும் காணுவன்
குமரனுக்கோ வெற்றியன்றித்
தோல்வியே இல்லை- அங்ஙனம்
தோல்வியறியாது
வெற்றிப் போர் செய்பவரே !

"மன்றல் தோளா"

மன்றத்தில் வீசிவரும்
தென்றல் காற்றைப் போன்று
நறுமணம் வீசிடும்
தோள்களை உடையோரே !

"குன்றை தொளையாடீ"

கிரௌஞ்சமெனும் குன்றத்தை
வீரமுடன் வேலெடுத்து
தொளையாகிப் போகும்வண்ணம்
தீரமுடன் செய்தவரே!

"சூதாய் எண் திக்கு ஏயா"

நேரடியாய்ப் போர் செய்திட
துணிவு இன்றிச் சூதாக
மாயங்கள் பல காட்டி
திக்கெட்டிலும் பரவி நின்று

"வஞ்சச் சூர்மா அஞ்சப் பொரும்வேலா"

வஞ்சனையாய்ப் போர் செய்த
சூரனெனும் வலிய அரக்கன்
அஞ்சி நடுங்கும் வண்ணம்
வெஞ்சமர் செய்த வேலாயுதா

"சீர் ஆர் கொன்றைத் தார்மார்பு ஒன்றச்
சே ஏறு எந்தைக்கு இனியோனே"

சீராய்ப் பூத்து
சிறப்பாய் மலர்ந்திட்ட
ஆத்தி மலரினையும்
கொன்றை மலரினையும்
ஒன்றாகச் சேர்த்தங்கு
கட்டியதோர் மாலையினை
மார்பினில் பொருந்திட
அழகுறத் திகழ்ந்திடவே
திமிர்ந்த திமில் உடைய
நிமிர்ந்த எருதின் மேல்
உயர்ந்து எழுந்துவரும்
என்னப்பனாம் ஈசனுக்கு
மிகுதியும் இனியவரே!

"தேனே!
அன்பர்க்கே ஆம் இன்சொல் சேயே!
செந்தில் பெருமாளே!"

அடியவரின் சித்தத்தில்
தேன் போன்று தித்திக்க
நினைத்திடும் போதெல்லாம்
இனித்திடும் தெய்வமே!

அருள் புரிவதும் உன் செயலே
அவ்வருளைப் புரிகையிலே
வன்சொற்கள் பேசாமல்
இன்சொல்லால் எமை மகிழ்த்தும்
செம்மைப் பண்பு காட்டும்
இன்சொல் விசாகனே!

சிறப்பான தெய்வம் நாடி
ஆரும் அலையா வண்ணம்
ஆரலைவாயில் அமர்ந்திருக்கும்
பேரறிவாளன் திருவே!

"ஓராது ஒன்றைப் பாராது"

ஒன்றெனும் ஒருமொழியாம்
ஓம் எனும் பிரணவம்
அம்மொழியை அறிந்திடவோ
குருவருளின் துணை வேண்டும்
அறிந்த பின்னர் அம்மொழியை
ஆராய்ந்து பார்த்திடல் வேண்டும்
அத்தோடு நின்றிடாமல் அதையென்றும்
மனத்தினில் உன்னுதல் வேண்டும்

அவையெல்லாம் செய்யமாட்டார்
உண்மைப் பொருளை அறிய மாட்டார்

"அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர,
ஊடா,
நன்று அற்றாற் போல் நின்று,
எட்டா மால் தந்திட்டு,
உழல் மாதர்"

அளவற்ற அழகுடனே வந்து நின்று
ஆடவரின் உயிர் சோர்ந்து போகுமாறு
கூடாமல் கூடுவார் போல் பிணங்கியும்

விருப்புடன் அணைவார் போல் இணங்கியும்
தனக்கென ஒன்றும் இல்லாதார் போன்று

தம் நடிப்பைக் காட்டியே அங்கு நின்று
அளவிலா மயக்கத்தைத் தருகின்ற

விழியுருட்டி எனை மயக்கி
இங்குமங்குமாய்த் திரிகின்ற

விலை மக்கட் பெண்டிரின்

[மேற்கூறிய குணமிங்கே
விலைமகளிர்க்கே பொருந்துவதால்
மாதர் என்று சொன்ன போதும்
அது விலைமாதரையே குறிக்கும் என அறிக
கற்புடைப் பெண்டிர் செய்வதன்று
காசுக்குச் சோரம் போவது]

"கூரா அன்பில் சோரா நின்று
அக்கு ஓயா நின்று
உள் குலையாதே"

உண்மையிலே அன்பின்றி
வெளியினிலே பகட்டு காட்டி
நடிப்பதனைச் செய்கின்ற
பொய்யான தோற்றத்தில்
உடைமைகளைப் பறிகொடுத்து,
அத்தோடு நில்லாமல்
எலும்புடன் கூடி நிற்கும்
தோல், தசை, மூளை
சுக்கிலம், இரத்தம், இரதம்
என்னும் எழுபொருளால் ஆன
இவ்வுடம்பும் ஓய்ந்து போக,

உடைமையும் போகவிட்டு
உடலையும் ஓயவிட்டு
உள்ளமும் மிக வாடி
நிற்கின்ற நிலை வராமல்,

"கோடார் செம்பொம் தோளா!"

மலை போலும் சிவந்திருக்கும்
பொன்மயமாய தோளுடைய முருகனே!

"நின் சொல் கோடாது என்கைக்கு அருள் தாராய்!"

உனைப் பாடும் சொல் ஒன்றே
புகழ் என்ற சொல்லாகும்
அதுவே திருப்புகழாகும்
மற்றெல்லாம் வீணே

வீணான செயல்கள் இங்கு
நான் செய்து மாளாமல்
தளராது உன் புகழை
நாள்தோறும் சொல்லிவர

தளராது என்னுடலும்
மறவாது உன் புகழை!
இவ்வருள் தந்திடவே
நீயெனக்கு அருள் தருவாய்!********************************************************************

அருஞ்சொற்பொருள்:

ஓராது = முழு முதற் பொருளான பிரணவ்த்தை உணராது

அந்தத்தோடே = அழகுடனே

எட்டா மால் = அளவில்லாத மயக்கம்

கூரா = பொய்யான, விருப்பமில்லாத

அக்கு = எலும்பு

கோடார் = கோடு ஆர் = மலை போன்று [உ-ம்: திருச்செங்கோடு] கூம்பி, உயர்ந்து நிற்கின்ற

கோடாது = தாழாது, வளையாது [உ-ம்: கோடாமை சான்றோர்க்கு அணி]

தோரா = தோல்வி என்பதே இல்லாது

வென்றி = வெற்றி

போரா = போர் புரிபவனே

மன்றல் = வாசனை வீசும்

பொன்ற = பொருந்தச் செய்ய

சே = எருது

சே ஏறு எந்தை = எருதின் மேல் ஏறி அமர்ந்து வரும் ஈசன், சிவன்

*************************************************************

வேலும் மயிலும் துணை !

முருகனருள் முன்னிற்கும் !

அருணகிரிநாதர் தாள் வாழ்க !

No comments: