Thursday, November 30, 2006

அ.அ.திருப்புகழ் -- 14 - "திருமகள் உலாவும்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 14 - "திருமகள் உலாவும்"

முருகப்பெருமானின் எட்டுவிதக் குணங்களைக் கூறும் அருமையான பாடல் இது.
என்னை மிகவும் கவர்ந்த இப்பாடலில் அக்கருத்தினை எவ்வளவு அழகுறச் சொல்கிறார் பாருங்கள்!
இசைத்துப் பாடிக் கேட்பதற்கும் மிக இனிமையான பாடல்.

அதுவும் சித்ராவின் தேன்குரலில் இப்பாட்டினைக் கேட்கணும்!

வலையேற்ற முயற்சிக்கிறேன், தெரிந்தவர் உதவி கொண்டு.

.................பாடல்.....................

தனதனதந்தன தனதனதந்தன
தனதனதந்தன தனதான

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் --பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் --பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் --பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் --பெருமாள்காண்

அருவரைகள் நீறு பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் --பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் --பெருமாள்காண்

இருவினையி லாத தருவினை விடாத
இமையவர்கு லேசப் --பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் --பெருமாளே.

............................................................

.................பொருள்................


இதற்கான பொருள் மிகவும் எளிது!

"திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள் காண்"

காக்கும் கடவுளாம் பரந்தாமன்
காப்பதெல்லாம் யார்துணை கொண்டு?
வீரமிகு தோள்களில் வீற்றிருக்கும்
வீரலக்ஷ்மியின் வீரியத்தாலன்றோ!


முரனென்னும் அசுரனை அழித்து
முராரியெனப் பெயர்பெற்றதுவும்
இன்னுமிந்த உலகினைக் காப்பதுவும்
அவள் அளிக்கும் புயவலிமையாலன்றோ!

இவ்விருவர் மருகரென பேர்பெற்று விளங்கிடும்
எம்பெருமான் இவனெனவே அறிந்திடுவாய்!
அடியவர் மானம் காத்து அருளுவதால்
இவனே "மானமூர்த்தி" என உணர்ந்திடுவாய்!

"ஜெகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள் காண்"

மண்ணவரும் விண்ணவரும் மனமுருகிப் பாடுகின்ற
பண்ணிசைக்கும் பாடல்களின் இன்னிசையைக் கேட்டுணரும்
என்னருமைக் கந்தன்பிரான் இவனென்றே தெளிவாய் மனமே!
அண்ணலிவன் "கானமூர்த்தி" என உணர்வாய் மனமே!

"மருவும் அடியார்கள் மனதில் விளையாடும்
மரகத மயூரப் பெருமாள் காண்"


சிறுபிள்ளைக் குமரனவன்
சிரித்தாட இடம் வேண்டும்!
இரவும் பகலும் அவனை எண்ணி
உருகும் அடியார்கள் மனமே ஆடுகளம்!
பச்சைமயில் வாகனனும்
பரவசமாய் அதை நாடி
ஆடாமல் ஆடுகிறான்
அடியவரின் மனத்தினிலே!
அதை அறிந்து அவனொன்றே
"தியானமூர்த்தி" எனத் தெளிவாய்!

"மணிதரளம் வீசி அணி அருவி சூழ
மருவு "கதிர் காமப்" பெருமாள் காண்"

அவுணர்கோமானாம் சூரனை அழித்திடவே
சிவனார் கண்ணினின்று பிறந்திட்ட பாலனவன்
சீரலைவாய் கடந்து தென்னிலங்கை சென்றடைந்து
போர்க்கோலம் தாங்கி நின்று கோபாவேசமாய்
நின்றிட்ட புண்ணியத்தலம் கதிர்காமம்


பொங்கிவரும் மாணிக்கநதி நீரில் திரண்டுவரும்
இரத்தினமும் முத்துகளும் திருமுருகன் காலடியில்
அருவியங்கே பொழிந்துவரும் அழகான காட்சியுண்டு.
உருவமங்கு கிடையாது; திரையொன்றே வணங்கப்படும்
விண்ணுக்கும் மண்ணுக்கும் வானளாவி நிற்பவனை
"வானமூர்த்தி" என நீயும் வணங்கிடுவாய் மனமே!

"அருவரைகள் நீறுபட அசுரர் மாள
அமர் பொருத வீரப்பெருமாள் காண்"

அங்கிருந்து வேல்விடுத்து அசுரர் குலமழித்து
தீங்குசெய்த சூரனையும் மலைகளையும் பொடியாக்கி
வீரமிகு போர்செய்து அடியவர் துன்பமகற்றிய
தீரனிவனை "வீரமூர்த்தி" என பணிந்திடுவாய் நெஞ்சே!

"அரவு, பிறை, வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள் காண்"

தவமொன்றே தனிப்பயன் அளித்திடும்
சிவனெமக்கு வேண்டாமென்று ஆணவத்தால்
அபிசாரவேள்வி செய்து அழிக்கவல்ல பாம்புகளை
ஏவிவிட்ட முனிவர்களை முறியடித்து அரவங்களை
ஆபரணமாய் அணிதிட்டான் ஆலவாயழகன்.

தக்கன் சாபத்தால் கலையழிந்து உருக்குலைந்த
சந்திரனைக் காக்கவெண்ணி அஞ்சேலென்று
தன் தலையில் சூடிக்கொண்ட சந்திரமௌளி.

உலகத்தை அழிக்கவென உக்கிரமாய்ப் புறப்பட்ட
கங்கையின் சீற்றமடக்கி தன்சடையில் அதைத்தாங்கி
உலகுய்யச் செய்திட்ட உத்தமனாம் கங்காதரன்.

இத்தனையும் தான் கொண்டும்
அத்தலை பணிந்து வணங்க
பிரணவத்தின் பொருள் கேட்ட
தகப்பனுக்கே உபதேசித்த
குருநாதன் என்னப்பன்
சாமிநாதன் "ஞானமூர்த்தி"
என்றே வணங்கிடு நன்னெஞ்சே!

"இருவினை இலாத தருவினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்"

நல்வினை தீவினை என்னுமிரண்டும்
தமக்கென்று இல்லாமல், மனிதருக்கு
அவரவர் வினைக்கேற்ப பலனளிக்கும்
தேவர்களின் குலமழியாமல் காத்து
வாழ்வளித்த வள்ளலாம் குமரக்கடவுள்
"தியாகமூர்த்தி" என அல்லும் நினைத்திடுவாய்.

"இலகுசிலை வேடர் கொடியின் அதிபார
இருதன விநோதப் பெருமாளே."

பரம், அபரம் எனும் இருவித ஞானமுண்டு.

இவ்வுலக சிந்தனையில் இன்பமுடன் ஈடுபட்டு
செய்கருமம் செப்புடனே செய்து பரம் உணரலாம்.
செய்வதெல்லாம் அவன் செயலேயென்றுணர்ந்து
இறைவனிடம் பக்திவைத்து அபரம் அறியலாம்.

இவ்விரண்டும் தன்னகத்தே வைத்திருந்து
உலகனைத்தும் இன்புறவேயென்று இன்முகம் காட்டி
இன்பசக்தியாம் வள்ளியம்மையுடன் இனித்திருக்கும்
"போகமூர்த்தி"யாய் விளங்கும் முருகனை பணிந்திடுவாய்.
.............................................................

இவ்வண்ணம் இப்பாடலில் எட்டுமூர்த்தியும் காட்டி
நல்வண்ணம் நம்வாழ்வில் நாம் உய்ய நமக்களித்து
பொன்வண்ணக் குமரனின் கோலமெல்லாம் காட்டிய
பண்வண்ணன் அருணையானின் பதம் பணிந்து போற்றுவோம்.
------------------------------------------------------------


அருஞ்சொற்பொருள்:

தரளம் == முத்து
அருவரைகள் == சிறந்த மலைகள்
அரவு == பாம்பு
பிறை == நிலவு
வாரி == நீர் [கங்கை]
விரவு சடை வேணி == [மேற்கூறிய மூன்றும்] கலந்து வாழ்கின்ற சடைமுடியை உடைய [சிவன்]
அமலர் == சிவன்
தருவினை == நமது வினையால் வரும் விளைவுகள்
இமையவர் == தேவர்
இலகு சிலை வேடர் == கையில் வில் தாங்கி நிற்கும் வேடர்

-----------------------------------------------------------------


வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க!

******************************************************************

No comments: