Sunday, March 25, 2007

"அ.அ.திருப்புகழ்--17 [தொடர்ச்சி] "சீரான கோலகால"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 17[தொடர்ச்சி]
"சீரான கோலகால நவமணி"


சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.

[முதல் பகுதியை இங்கு பார்க்கவும்]

"சீரான கோல கால நவமணி
மாலா அபிஷேக பார"


அறுமுகனுக்கு முடிகள் ஆறு.
சீறான சிறப்பு மிக்கதும்
கோலாகலமானதும் ஆன
நவமணிகளால் வரிசையாக
இழைக்கப்பட்ட திருமுடிகளைத்
தாங்கி நிற்கும் முகங்களை உடையதும்,
[கோலாகலம் எனும் சொல் சந்தத்திற்காக கோலகால என மாறியது.]


"வெகுவித தேவாதி தேவர் சேவை செயு முகமலர் ஆறும்"

முப்பத்து முக்கோடி அமரர்களும்
அவர்களின் தலைவர்களும் சேர்ந்து வங்து
அடிபணிந்து சேவித்து வணங்கி நிற்கும்
தாமரை மலர் போலும் முகங்கள் ஆறும்

"சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும்"

பெருமைமிகு வீரஇலக்குமி தேவி
எப்போதும் நீங்க நிற்கும் வீரமுடை
"ஆறிரு தடந்தோள் வாழ்க" என
முதல் வரியால் கச்சியப்பர்
கந்தபுராணத்தில் போற்றிப் புகழும்
சீர்மிகு பன்னிரு தோள்களும்


"நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும்"

நீள்வரிகளால் கோடிழைத்து
ரீங்காரம் செய்கின்ற வண்டினங்கள்
ஸ்ரீராகம் என்னும் பண்னைப்பாடி
மொய்த்திருக்கும் கடப்ப மலர்களால்
அலங்கரிக்கப்பெற்ற மணமிகுந்த
சிவந்த இரு பொற்பாதங்களும்


"ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்
ஆதார பூதமாக வலம் இட முறைவாழ்வும்"

தணியாக் காதல் கொண்டு தான் தேடி மணந்த
வேடக்குறமகளாம் வள்ளிநாச்சியாரும்,
மேகத்தை வாகனமாகக் கொண்டு
அதன் மீது ஏறி உலா வருபவனும்,
வலன் எனும் நிருதன் எனும் அரக்கனை
வதம் செய்தவனுமான இந்திரனின்


மற்றவர் கூறுகின்ற நல்ல குணங்களைக்
கொண்டதும் பட்டென்று பற்றிக்கொள்ளும்
'கொளுத்தியது விடாமை' என்கின்ற 'மடம்' என்னும்
குணம் நிறைந்த தெய்வயானை அம்மையும்
உலகங்கட்கு ஆதார சக்தியாக வலமும் இடமுமாக
உறைகின்ற உத்தம வாழ்வினையும்
[மட சாம்பிராணி எனும் சொல் இப்போது நன்கு புரியுணுமே!]


"ஆராயு நீதி வேலு மயிலும் மெய்ஞ்
ஞான அபிராம தாப வடிவமும்"


நல்லது செய்யவே செலுத்தப்படும்
நீதி புரியவே நாட்டப்படும் ஞானவேலும்
அதற்கெனவே காத்திருக்கும் மயில் வாகனத்தையும்,
மெய்யென்னும் 'சத்', ஞானமென்னும் 'சித்'
அழகின் மிகுதியால் விளையும் 'ஆனந்தம்'
இது மூன்றும் நிறைந்திருக்கும் நின் திருவுருவையும்


"ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும்"

நற்குணங்கள் ஏதுமில்லா கொடியோனாய யான்
நாள்தோறும் நினைந்து, நினைந்து உருகும்
தன்மையினைப் பெற்று எவருக்கும் கிட்டா
பேறு பெற்று உய்ய வேண்டும் என வேண்டுகிறேன்.

அருஞ்சொற்பொருள்:

அபிஷேகபார= அலங்கரிக்கப்பட்ட முடிகளை உடைய
மருவிய= தழுவி வாழ்கின்ற
நீளும்= நீண்ட
சீராகம்= ஸ்ரீராகம்
நீப பரிமள= கடப்ப மலர்களால் மணமிகுந்த

ஜீமுதம்= மேகம்
அபிராம தாபம்= அழகின் மிகுதி
ஆபாதனேன்= கொடியவனாகிய நான்
ஏர் ஆரும்= அழகு நிறைந்த
ஏழ் ஏழ் பேர்கள்= நாற்பத்தொன்பது புலவர்கள்
ஊமர்= ஊமை
ஆலவாய்= மதுரை
விசார= ஆராய்ச்சி உடையவர்
வீய= சபதம் செய்தல்
ஆழி= சக்கரப்படை
பாநு= ஆதவன், சூரியன்
கோடாமல்= குறைவின்றி

[இன்று மாத சஷ்டி பூஜை செய்ய வேண்டியிருந்ததால் இருபகுதிகளாக வெளிவர நேரிட்டது! இப்பாடலை ஸ்ரீராகத்தில் பாடுதல் உகந்தது எனச் சொல்லுவர்.]


வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!

No comments: