Wednesday, July 18, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"--22 "வங்கார மார்பிலணி"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"--22 "வங்கார மார்பிலணி"

"பச்சைப்புயல் மெச்சத்தகுபொருள்" திருமாலின் ஒரு பெயர் கொண்ட அன்பர், முருகனடியார் திரு ஜி.ராகவன் கேட்ட இப்பாடல் சந்தம் மிகுந்தது.

சொல்லினிமை, பொருளினிமை கொண்டது.

பாடுதற்கு இனியது.

முருகனை, கந்தக்கடம்பனை 'நமோநம' எனத் துதித்து அருச்சிப்பது.

திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகனைப் போற்றும் இப்பாடலை இங்கு இடுவதில் மகிழ்கிறேன்.

பாடல் பெரிது!

பொருளும்
சற்று விரிவாகத்தான் இட்டிருக்கிறேன்.


அனைவரும் பொறுத்தருள்க!

ஜி.ரா.வுக்கு என் நன்றி!!

முருகனருள் எல்லார்க்கும்
முன்னிற்கட்டும்!

**********************************************************

ராகம் -- ஸிந்துபைரவி
தாளம் -- சதுஸ்ரத்ருவம்.. கண்டநடை

"தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன .... தனதான

............பாடல்................

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல

மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய .........விடுமாதர்

சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ....... னுழலாமற்

சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசிவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ........ புரிவாயே

சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ......... விருதோதை

சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே

இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ....... மணிமார்பா

எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்கோடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் .....பெருமாளே.


...........பொருள்.............

[பின் பார்த்து முன் பார்க்கலாம்.]

இப்பாடலின் சிறப்பு கந்தனைத் தோத்தரிப்பதில் இருந்து துவங்குகிறது.

சிங்கார ரூபமயில் வாகன நமோ நம என

அழகென்னும் பெயருக்கு அரும்பொருளே
நீதான் என அகில உலகமும் போற்றிடவே
அழகின் அழகாய் உருவெடுத்து,

அகிலமெலாம் காப்பதற்கு
அழகிய மயிலின் மீதேறி வந்து
நிற்கும் அழகே போற்றி, போற்றி! எனவும்

கந்தா குமார சிவதேசிக நமோ நம என

எதிர்த்துவரும் பகையாற்றலை
வற்றச் செய்பவன் கந்தன்
ஆறுதிருமேனியும் ஒன்றாய்ப்
பொருந்தி நிற்பவன் கந்தன்
சுழன்றலையும் ஆன்மாவிற்குப்
பற்றுகோடாய் இருப்பவன் கந்தன்

அம்மைக்கும் குமரனிவன்
அப்பனுக்கும் குமரனிவன்
அம்மையப்பருக்கும் குமரனிவன்
இம்மைக்கும் மறுமைக்கும் குமரனிவன்

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
அவ்வைக்கும் அருளுரைத்த பாலன்
அருணைக்கும் பம்பனுக்கும் ஆசான்
அவனே நமக்கெல்லாம் குருநாதன்

கந்தனாய்,குமரனாய்,சிவகுரு
தேசிகனாய் எமக்கெல்லாம்
அருள்பவனே போற்றி, போற்றி!எனவும்


சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என

குங்குமம் போலும் சிவந்த மேனியள்
குங்குமம் நிறை நெற்றியை உடையவள்
சிந்தூரத்தின் சொந்தக்காரன்
திருமாலின் அன்புத்தங்கை
பார்வதியெனும் பெயர் கொண்டவள்
பாரினை ஆளும் பரம்பொருள் சக்தி
பாரின் துயர் துடைக்க
சூரன் உடல் கிழிக்க
பார்புகழும் மகவெடுத்து
மாரினில் வைத்துக் கொஞ்சிய
பார்வதியாள் புத்திரனே
போற்றீ, போற்றி! எனவும்,விருது ஓதை சிந்தான சோதி கதிர்வேலவ நமோ நம என

கொன்றவர் ஆயிரமாயிரம் - ஒளிந்து
நின்றவர் ஆயிரமாயிரம் - அவர் பின்னே
சென்றது கந்தனின் கதிர்வேல் - அசுரர்களைக்
கொன்றது கடம்பனின் வீரவேல் -பகைமுடித்து
வென்றவர் ஆயிரமாயிரம் - அவரெல்லாம்
வெற்றிவேல்! வீரவேல் என - செய்திட்ட
சங்கெடுத்து ஆர்ப்பரித்த வீரமுழக்கம் - கடலோசை
தோற்றிடச் செய்திட அவ்வேளை - அவர்நடுவே
சுட்டெரிக்கும் சோதிவடிவாய் - வேலெடுத்து
நின்றிட்ட வேலவனே போற்றி, போற்றி - எனவும்கங்காள வேணி குருவானவ நமோ நம என

நடுநிசியில் சுடலைதனில்
நெடுமுடியும், எலும்புமாலைகளும்
கிடுகிடென்ன அசைந்துவர
நடனமிடும் சிவனாரின்
குருநாதன் ஆனவனே
பிரணவப் பொருளோனே
போற்றி, போற்றி எனவும்


பலவாறு உனைத் துதித்து முழங்கிடவும்,

திண்சூரர் ஆழிமலை தூள்பட வை வேலை விடு முருகோனே

கொடுமைபல செய்திட்ட சூரனையும்
அடி முதல் நுனிவரை அவன்தம் அசுரரையும்
மற்றுமாங்கு நெடுங்கடலையும்,
கிரவுஞ்ச மலைதனையும்
பொடிப்பொடியாய்ச் செய்திடவே
கூரிய வேல் செலுத்தி, தேவர்
குலம் காத்த முருகப் பெருமானே!


இங்கீத வேதபிரமாவை விழ மோதி

ஓதுதற்கும், பாடுதற்கும்,
படிப்பதற்கும் இனிமையான
வேதங்களைப் பயின்ற
பிரமனுக்கு அறிவுறுத்த
பிரணவப்பொருள் கேட்டு
அதுவறியா நான்முகனின்
தலையினில்குட்டி, எட்டியுதைத்து
மோதிக் கீழே விழுமாறுசெய்தும்,ஒரு பெண் காதலோடு வனம் ஏவி வளி நாயகியை
இன்பான தேனிரச மார்முலை விடாத கர மணிமார்பா


இச்சாசக்தியாம் வள்ளியின் மேலே
தாளாத மையல் கொண்டு
காதலாகிக் காடு புகுந்து
அவரை ஆட்கொண்டு தேன்போலும்
இன்பம்நிறை முலைகளைப்பற்றி
அதனை விட்டகலா கரமும்
அணைக்கத்தக்க அழகிய
மார்பினையும் கொண்டவனே!


எண் தோளர் காதல்கொடு காதல்கறியே பருகு

சிறுத்தொண்டரெனும் சிவபக்தர்
என்றும் மாறா அவர் அன்பினைச்
உலகுக்குக் காட்டச் சோதிக்க வேண்டி,
எட்டுத்தோள் உடைய சிவனாரும்
சிவனடியார் வேடம் பூண்டு அவர்தம்
வீடடைந்து, அமுது கேட்க,
சிறுத்தொண்டரும் அகமகிழ்ந்து
அடியார் வேண்டுவதெதுவென வினவ
"பிள்ளைக்கறி பருக உத்தேசம்" என
அடியரும் பகர, "அப்படியே ஆகுக" என
தொண்டரும் தன் மகனாம் சீராளனை
அழைத்து,'புண்ணியம் பெற்றோம் நாமெல்லாம்!
என் தலைமகனே! அடியார்க்கு உன்னை
அமுது படைக்கப் போகிறேன்' எனச் சொல்ல,
மகிழ்வுடன் மகனும் இசைய,
அவ்வண்ணமே மகனை வெட்டிக் கறி சமைத்து
அடியார்க்கு அமுதுபடைக்க, அடியாரும்
தன் வேடம் களைந்து தரிசனம் அளித்து
சிறுத்தொண்டரின் சீரான பக்தியை
உலகுக்குக் காட்டி, அனைவரையும் வாழ்த்திய


செங்கோடு மேவி பிரகாசமயில் மேல் அழகொடு

பெருமை பெற்ற திருத்தலமாம்
திருச்செங்காட்டுக்குடி அடைந்து
ஒளிவீசும் அழகிய மயில் மீதமர்ந்து


என் காதல் மாலை முடி ஆறுமுக வா அமரர் பெருமாளே.

நின்மீது யான் கொண்ட அன்பினால்
ஆசையுடன் புனைந்திட்டத் தமிழ் மாலையினை
கருணைமிகக்கொண்டு சூடிடும்
ஆறுமுகக் கடவுளே! தேவர் தலைவனே!


வங்கார மார்பில் அணி தாரொடு உயர் கோடு அசைய

அழகிய மார்பினில் அணிந்திருக்கும்
பொன்மாலையுடன் பாரத்துடன்
உயர்ந்து நிற்கும் மார்பகங்களும்
சேர்ந்து அழகுடன் அசைந்திட


கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள்புரள

இத்தனையும் போதாதென வளமாக
நீண்டு வளர்ந்த கூந்தலும், அதில் சூடிய
மலர்க்கொத்துகள் நிறைந்த மாலையும்
மணிமாலையும் தோள்களில் புரள


வண்காதில் ஓலை கதிர் போல ஒளி வீச

வளைந்த அழகுடன் விளங்கும்
காதுகளில் பூட்டியிருக்கும்
காதணிகள் கதிரவன் போல் ஒளிவீசஇதழ் மலர் போல

அன்பு ததும்பிடும் மலர் உதடுகள்
மொட்டவிழ்ந்த மலர் போல் விரிய


மஞ்சு ஆடு சாபநுதல்

மேகக்கூட்டத்தின் நடுவில் வளைவாகத்
தோன்றிநிற்கும் வானவில் போல
அழகிய புருவங்களுக்கும் கூந்தலுக்கும்
இடையினில் வளைவாகத் தோன்றிடும்
சீரான அழகிய நெற்றியும்


வாள் அனைய வேல்விழிகள்

கூரான வாளையும் வேலையும்
பழித்திடும் வேல் விழிகளும்


கொஞ்சார மோககிளியாக நகை பேசி

கொஞ்சிடும் கிளி போலும்
ஆசைமொழிகள் பல பேசி


உற வந்தாரை வாரும் இரு[ம்]நீர் உறவென

அருகினில் வருவோர் அனைவரையும்
வருகவென வரவேற்று இருக்க வைத்து
'நீர் எமக்கு உறவினர் அல்லவோ' என்றெல்லாம்


ஆசைமயல் இடு மாதர்

பசப்பு வார்த்தைகள் பலவும் பேசி
நெஞ்சில் மயக்கம் உண்டுபண்ணும்
பொல்லாத விலைமாதர்கள்


சங்காளர் சூது கொலைகாரர் குடிகேடர்

காரியம் ஆகவேண்டிக் கூட இருந்து
களித்து நிற்கும் பொய்யர்கள்
சூதாடலே தொழிலாய்க் கொண்டவர்
கொலைபாதகம் செய்யும் கொடியவர்
அடுத்துக் கெடுக்கும் குடிகேடர்கள்சுழல் சிங்காரதோளர் பணஆசையுளர் சாதியிலர் சண்டாளர்

வேலையின்றி வீணே சுற்றித் திரிபவர்கள்
சிங்காரமாய் தோளில் துண்டணிந்து
ஆடம்பரமாய்த் திரிபவர்கள்
பணத்தாசை கொண்டு பாவம் செய்பவர்
அது ஒன்றுமட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு
எல்ல சாதியினருடனும் கூடுபவர்
இவைஅத்தனையும் செய்யும் இழிந்த குலத்தவர்சீசியவர் மாயவலையோடு அடியென் உழலாமல்

இவர்கள் அனைவரையும் சிறுமையென ஒதுக்கி
சீ, சீ, என விலக்கி அவர் வலையில் சிக்காமல்
என் வாழ்வு இவர்களால் குலையாவண்ணம்

சங்கோதை நாதமொடு கூடி

மோகத்தில் மூழ்காமல்
யோகத்தில் எனை ஆழ்த்தி
அவ்வழியில் யோகியர் உணர்ந்திடும்
கிண்கிணி, சிலம்பு, மணி,
சங்கம், யாழ், தாளம்,
வேய்ங்குழல்,பேரி,மத்தளம்,
முகில்
என்னும் பத்துவகை
ஓசைகளும் நான் கேட்டு
அனுபவித்து, அதில் கலந்து,


வெகு மாயை இருள் வெந்து ஓட

மாயையென்னும் கொடிய இருள்
எனைத் தீண்டாமல் வெந்து
அழிந்து வெருண்டோட


மூலஅழல் வீசி உபதேசமது தண்காதில் ஓதி

நாத ஒலியால் நிறைந்து நின்று
மாயையெல்லாம் கழிந்த எனக்கு
யோகத்தால் மூலாதாரத்தினின்று
ஒரு பிழம்பு எழுந்து என்னுள் ஏற
அவ்வேளை, என் காது குளிரும்படி,
உன்னருள் உபதேச மந்திரத்தை
உணரும்படி சொல்லி


இரு பாதமலர் சேர அருள் புரிவாயே

அது கேட்டு, விம்மி விதிர்த்து
உள்ளமெல்லாம் உருகி
உன்னிரு தாளில் யான் சேரும்
உன் திருவருளைத் தரவேண்டும்
அருளைத் தந்தருள்க!
********************************************


அருஞ்சொற்பொருள் [இதுவும் நிறையவே!!]

வங்காரம் = பொன்மாலை [பங்காரம் என்பதறிக!]
தார் = மாலை
கோடு = மார்பகம்
கொந்தாரம் = கொத்து மலர்களாலான மாலை
ஆரம் = மாலை
ஓலை = காதணி
மஞ்சு = மேகம்
சாபம் = [வான]வில்
நுதல் = நெற்றி
கொஞ்சார = கொஞ்சுதல் மிக்க
சங்காளர் = கூடிக் களிப்பவர்கள்
சங்கோதை = யோகவழியில் உணரும் ஒலிகள்
நாதம் = பத்து [வித ஒலிகள்][பொருள் விளக்கத்தில் காண்க!]
அழல் = நெருப்பு
தண் = குளிர்ந்த
சிந்தூரம் = குங்குமம், சிவந்த
சுதாகர = பிள்ளை
விருது ஓதை = வெற்றிச் சின்னங்களின் ஓசை
ஓதை = ஒலி, ஓசை
சிந்து = கடல்
கங்காளன் = எலும்பு மாலை அணிந்தவன், சிவன்
வேணி = ஜடாமுடி அணிந்தவர், சிவன்
திண் = வலிமை
ஆழி = கடல்
இங்கீத = இனிமையான இசை
வளி = வள்ளி [சந்தத்திற்காக வளி என ஆனது!]
எண்தோளர் = எட்டுத்தோள்களை உடைய சிவன்
*********************************************


வேலும் மயிலும் துணை !

முருகனருள் முன்னிற்கும் !!

அருணகிரிநாதர் தாள் வாழ்க !!!
*************************************************


No comments: