"அ. அ. திருப்புகழ் - 29” -- ’கொலைமத கரியன’
” திருமுருகன் நெறிவழியில் நிலையாகச் சென்று, இவ்வுலக இன்பங்களில் மனம் நாட்டம் கொள்ளாது இருக்க அருள் செய்யப்பா! திருச்செந்தூர் வேலா!”
----- பாடல் -----
தனதன தனதன தனதன தனதன
தன்னத் தனதான
கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத் தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற் றிடுநாயேன்
நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற் றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற் றடைவேனோ
சிலையென வடமலை யுடையவ ரருளிய
செஞ்சொற் சிறுபாலா
திரைகட லிடைவரு மசுரனை வதைசெய்த
செந்திற் பதிவேலா
விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப் புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப் பெருமாளே.
----- பொருள் -----
[வழக்கம் போல, பின் பார்த்து முன் பார்க்கலாம்.]
”சிலையென வடமலை உடையவர்”
முப்புரம் எரித்த நிகழ்வினைச் சொல்லும்
இவ்வரி சொல்லும் கதையினைக் காண்போம்!
முப்பெரும் அசுரர் பிரமனைக் குறித்து
வலியதோர் தவம் பல்லாண்டு செய்தார்
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி
எனுமிவர் தவத்தில் பிரமனும் மகிழ்ந்தார்
வரமொன்று அருளிட அவரும் கேட்டிட
அழியாவரமே வேண்டியிவர் நின்றார்
’சிவனார் தவிர அழியாதவரிங்கு
எவரும் இல்லை ! மற்றது கேள்! ’
எனவே பிரமனும் அசுரர்க்குச் சொல்ல
சற்றே யோசித்த அசுரரும் சொன்னார்:
‘வானுலகம் பூமி, கீழுலகம் மூன்றும்
ஒன்றாய்ச் சேர்ந்த ஓருலகம் வேண்டும்!
பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த
மதில்கள் அதற்குக் காவலாய் வேண்டும்!
எண்ணிய பொழுதினில் எங்கும் சென்றிடும்
வல்லமை அதற்குத் தந்திட வேண்டும்!
சிவனார் கணையன்றி வேறெதுவாலும்
அழித்திட முடியா வரமிங்கு வேண்டும்!’
வரமிதைக் கேட்ட நான்முகன் சிரித்து
அவ்வண்ணம் அருளித் தன்னிடம் சேர்ந்தார்
முப்புரம் அமைந்த செருக்கினால் அசுரரும்
தாங்கிடவொண்ணா கொடுமைகள் செய்தார்
தேவரும் மனிதரும் மனமிக வருந்த
திருமால் எதிர்த்துப் போரிட்டுத் தோற்றார்
சிவனை நினைந்திவர் தவங்கள் புரிய
தேவரை நோக்கி சிவனார் சொன்னார்
‘எம்மின் அடியார் அவரென அறிக
அவரை அழித்தலும் எவராலும் ஆகாது’
இதனையறிந்த திருமால் ஆங்கே
புத்தராய்த் தோன்றி ஆங்கிருந்தோரைப்
பௌத்தராய் மாற்றிட மூவர் மட்டும்
மாயையுள் சிக்கா ஓர்நிலை அறிந்து
மீண்டும் தேவர்கள் சிவனைப் பணிய
முப்புரர் அழித்திடத் தேரொன்று செய்க
என்னும் சிவனின் சொல்லினில் மகிழ்ந்து
தேரொன்று அமைக்க தேவரும் முனைந்தார்.
மந்திரம் கேசரி என்னும் மலைகள் அச்சாக
சூரிய சந்திரர் சக்கரங்களாக
ருதுக்கள் அனைவரும் சந்திகளாக
ஈரேழு லோகங்கள் நிலைகளாக
உதயாஸ்தகிரிகள் கொடிஞ்சியாக
நதிகள் எல்லாம் பறக்கும் கொடிகளாக
மோட்சலோகம் மேல்விரிவாகவும்
நாட்களும் திதிகளும் இடுக்கு மரமாகவும்
எட்டுமலைகளும் தூண்களாகவும்
திசையினைக் காக்கும் எட்டு யானைகள் இடைநிலை தாங்க
ஏழு கடல்களும் திரைச்சீலையாகவும்
ஞான,கன்மேந்திரியங்கள் கலனாகவும்
கலைகளெல்லாம் முனைகளாகவும்
புராண சாத்திரங்கள் மணிகளாகவும்
மருத்துகள் அனைத்தும் படிகளாகவும்
அமைந்ததோர் ரதத்தினைச் சமைத்து
வேதங்கள் நான்கினை குதிரையாய்ப் பூட்டி
நான்முகனாரைச் சாரதியாக்கி
ஓமெனும் பிரணவம் சாட்டையாய்ச் சொடுக்க
தேவநங்கையர் சாமரமிடவும்
தும்புரு நாரதர் இன்னிசை ஒலிக்க
அரம்பையர் எல்லாம் நடனமாடவும்
அழகிய தேரினைச் சிவனார் முன்னே
கொண்டுநிறுத்தி இன்னமும் செய்தார்
மேருமலையினை வில்லாய்க் கொண்டு
நாகராஜனை நாணியாய் வைத்து
பச்சைவண்ணனைப் பாணமாய்ச் செய்து
வாணியை வில்லின் மணியாய்க் கட்டி
தீயின் தேவனை அம்பின் முனையாய்
காற்றின் அரசனை அம்பின் இறகாய்
இத்தனை வண்ணம் செய்தவர் வந்தார்
சிவனார் மகிழ்ந்து தேரினில் ஏற
அச்சு முறிந்து ரதமும் சிதைந்தது!
நாரணர் இடபமாய் முன்னே வரவும்
அதனில் ஏறி சிவனும் சென்று
மேருவில்லினை வளைத்து நாணேற்ற
ஆயுதமின்றி அழித்திடும் வல்லமை
அனைவரும் அறிந்திடத் திருவுளம் கொண்டு
உமையினைப் பார்த்து புன்னகை செய்தார்
முப்புரம் எரிந்து சாம்பலானது
அடியவர் மூவரும் என்றே பரிந்து
அசுரர்க்கு அருளிக் காவலர் ஆக்கினார்!
அனைவரும் மகிழ்ந்து சிவனைப் பணிந்தனர்!
இதுவே ‘சிலையென வடமலை உடையவர்’ திருக்கதை!
”அருளிய செஞ்சொல் சிறுபாலா”
சிவனாரின் கண்ணினின்று பொறியாக வெளிவந்து
அறுமுகனாய் உருவெடுத்த சங்கரன்குமரா!
அழகிய தமிழெனும் மொழியிதன் அரசனாய்
அருளிடச் சிவனார் அருள்செய்த சிறு பாலகனே!
”திரைகடலிடை வரும் அசுரனை வதைசெய்த
செந்தில்தி வேலா”
அழகன் முருகனின் வேலுக்குப் பயந்து
ஆழ்கடல் அடியினில் [மா]மரமாய் ஒளிந்த
சூரபதுமனை வேலால் பிளந்து
சேவலும் மயிலுமாய் அருள் செய்த
செந்தூர் என்னும் திருச்சீரலைவாய்
தலத்தினில் அருளும் வேலாயுதனே!
”வி[ல்]லைநிகர் நுதல் இபமயில்,குறமகளும்
விரும்பிப் புணர்வோனே”
வில்லினைப் போலும் புருவங்கள் உடைய
மயிலென விளங்கு தேவயானியும்
தினைப்புனம் காத்து முருகனை நினைந்து
மனவேடன் தன்னின் மனதைக் கவர்ந்த
வேடர் குலத்துக் குறமகள் வள்ளியும்
விருப்புடன் வந்து நின்னைச் சேர்ந்திட
செயலும்,விருப்பும் கைவரப் பெற்றோனே!
[தெய்வயானை கிரியா சக்தி, வள்ளி இச்சா சக்தி]
”விருது அணி மரகத மயில் வரு[ம்] குமர
விடங்கப் பெருமாளே”
பச்சைவண்ண மரகத மயில்
விருதுகள் பல பெற்றது!
அமரர் தலைவன் முருகனின் வாகனம்!
அதனில் அமர்ந்து அருள்மழை பொழியும்
அழகிய முருகப் பெருமானே!
விடங்கர் என்றால் இன்னுமோர் பொருளுண்டு!
செந்தூர் முதல்வன் திருக்கோலம்
கையிலோர் மலருடன் நின்றிடும் கோலம்!
சூரனை அழித்து, போரினை முடித்து
செந்தூர் திரும்பி சிவனை வணங்கிடக்
கையில் மலருடன் நின்றிட்ட நேரம்
தேவர்கள் வந்து நன்றிகள் சொல்லிட
அவரைப் பார்க்க மலருடன் திரும்ப
அத்திருக்கோலம் தாங்கிய மூர்த்தியாய்
சிலையா நின்றார் என்றொரு வரலாறு!
‘உளிபடாச் சிலையாய்’ நின்றிடும் உருவுக்கு
‘விடங்கன்’ என்றொரு பொருளும் உண்டு!
செந்தூர் முதல்வன் விடங்கப் பெருமான்!
அவரைப் பணிவோம்! அருளைப் பெறுவோம்!
"கொலை மதகரியன ம்ருகமத தன கிரி
கும்பத்தனம் ஆனார்"
குத்தவரும் யானைக்குக் கொம்புகளாயிரு தந்தம்
அதுபோலப் பெண்டிருக்கு விளங்குமிரு முலைகள்!
குத்திவிடும் இருதந்தம் கொலையும் செய்துவிடும்
குத்துமுலை இவையிரண்டும் காமக்கொலை செய்துவிடும்!
மணம்பெறு கஸ்தூரி தன்கொம்பில் தான்கொண்டு
மயக்கிவிடும் மான்கூட்டம் எவரையுமே இங்கு!
மணம்கமழும் கொங்கைகளும் மயக்கிவிடும் எவரையுமே
அதில் விழுந்து முனைவோரை நாளுமே இங்கு!
பொன்மலையாய்த் தோற்றமுறும் பருமுலைகள் கண்டு
கண்பதித்துக் கை கவர்ந்துக் காமுறுவர் இங்கு!
கவிழ்த்துவைத்த கும்பம்போல் விளங்குமிரு முலைகளுமே
அவிழ்த்துவிடும் ஆசைகளை அதை அணைக்கத் துடிப்பவர்க்கே!
இப்படிப்பட்ட அழகிய தனங்களை உடையவராகிய
அழகிய பெண்களின்,
”குமுத அமுத இதழ் பருகி உருகி [மை]மயல்
கொண்டு உற்றிடும் நாயேன்”
அழகிய ஆம்பல் மலரை ஒத்த செவ்விதழ்களிலிருந்து
பெருகிவரும் நீரை அமுதம் எனப் புகழ்ந்து போற்றி
அதனைப்பருகிட ஆவல்கொண்டு காமமயக்கம் தலைக்கேற
மேலும் மேலும் அதனை நாடியேதிரியும் நாய்போன்ற எனது
”நிலையழி கவலைகள் கெட உனது அருள்விழி
நின்று உற்றிடவேதான்”
நிலையான தன்மையே கெடும்படியான
மனக்கவலைகள் வந்தென்னை வாட்டும்போது
அவையெல்லாம் அழியும்படியாக நினது
அருள்விழிப் பார்வையிலேயே நிலைக்கும்படியாகச்செய்து
அதுகாட்டும் வழியினிலே நிலைத்துச் செல்லும்படியான
உறுதியை எனக்கு அளிக்க அருள்புரியவும்
”நினது திருவடி மலர் இணை மனதினில் உற
நின் பற்று அடைவேனோ?”
உன்னுடைய அழகிய திருவடி மலர்கள்
இணையாக நின்று என் மனத்தாமரையில்
பொருந்தி நிற்கின்ற நின் அருளைப் பற்றிப் பெறுவேனோ?
[பெறுமாறு அருள் செய்வாய்! முருகா!]
******************
********* அருஞ்சொற்பொருள் *********
கரி = யானை
ம்ருகமத = கஸ்தூரி வாசனை
தனம் = முலை
கிரி = மலை
குமுதம் = செவ்வல்லி
சிலை = வில், உருவம்
நுதல் = நெற்றி, புருவம்
விடங்கர் = உளி படாத மூர்த்தி
கொடிஞ்சி = தேரின் கூம்பான மேல்பகுதி
*********************
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
******************
Sunday, March 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment