Tuesday, July 13, 2010

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 36 "ஏது புத்தி ஐயா எனக்கு?"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 36 "ஏது புத்தி ஐயா எனக்கு?"


திருத்தணி வாழ் முருகப் பெருமானைப் புகழ்ந்து அமைந்திருக்கும் இந்தப் பாடலைப் படித்தவுடன் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் இதுதான்!
அருணகிரிநாதர் மகா குறும்புக்காரர்!

மிக மிக எளிய, படித்தாலே எவராலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பாடலை இயற்றிவிட்டு, சந்தத்தில் அதனைப் போடும் போது, இங்குமங்குமாய்ப் பல இடங்களில் கூட்டிச் சுருக்கி, ஏதோ ஒரு கடினமான பாடல் போலத் தோன்றுமாறு இதனை அருளியிருக்கிறார்!
பொருள் விளக்கம் என ஒன்றுகூட இப்பாடலுக்கு அநேகமாகத் தேவையிருக்காது! பதம் பிரித்தபின், வெகு எளிதாகப் புரியும் பாடல் இது!
முதலில் பாடலையும், பின்னர், அதனைப் பதம் பிரித்தும் பார்க்கலாம்!



தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

ஏது புத்திஐ யாஎ னக்கினி

யாரை நத்திடு வேன வத்தினி

லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்


றேயி ருக்கவு நானு மிப்படி

யேத வித்திட வோச கத்தவ

ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்


பாதம் வைத்திடை யாதே ரித்தெனை

தாளில் வைக்கநி யேம றுத்திடில்

பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்


பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்

யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ

பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ


ஓத முற்றெழு பால்கொ தித்தது

போல எட்டிகை நீசமுட்டரை

யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே


ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்

மான்ம ழுக்கர மாட பொற்கழ

லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே


மாதி னைப்புன மீதி ருக்குமை

வாள்வி ழிக்குற மாதி னைத்திரு

மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே


மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ

லார்வி யப்புற நீடு மெய்த்தவர்

வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன ...... தந்ததான

****************

......... பொருள் .........

[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்! ]

ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே


ஓதம் உற்று எழு பால் கொதித்தது போல
எண் திகை நீச முட்டரை ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள்கோவே

நீர்கலந்தபாலை நெருப்பின்மீதுவைக்க
அது சூடாகிக் கொதித்து வரும்வேளை
நீர்வற்றிப் பாலெழுந்து பொங்குதல்போல்,
எட்டுத்திசையிருந்தும் ஈசல்போல் அழிந்துபடப்
போர்செய்யவந்த இழிந்த மூடரான அசுரரை
வெட்டிக் கொன்றிட்ட சூரியவொளிபோலப்
பிரகாசிக்கும் சக்திவேலைக் கையேந்திய
எங்கள் தலைவனே!

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே


ஓத மொய்ச்சடை ஆட உற்றுஅமர் மான் மழுக்கரம் ஆட
பொன்கழல் ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே

நீர்பெருகும் கங்கைநதி பொருந்திவரும் சடைமுடியாட
எழிலாகப் பொலிந்திருக்கும் மான் ஒருகரத்திலும்
மழுவென்னும் ஆயுதம் தாங்கிய மறுகரமும் அசைந்தாட
தாளகதி தவறாத நாட்டியத்தால் அசைந்தாடும்
பொன்னாலாகிய வீரக்கழல் இசைந்து ஒலிக்கவும்
ஆனந்த நடனமாடும் சிவனார் தந்த எங்கள்பெருவாழ்வே!

மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே


மா தினைப்புனம் மீது இருக்கும் மை வாள் விழிக் குறமாதினைத்
திரு மார்பு அணைத்த மயூர அற்புத கந்தவேளே

நம்பிராஜன் தினைப்புனத்தில் கவண்கல் வீசியள்ளும்
மைதீட்டிய வாள்போலும் விழிபடைத்த குறவள்ளியை
அன்புறத் தழுவி மாரணைத்துக் கொள்ளும் மயில்வாகனனே
அளப்பரிய ஆற்றலுடைக் கந்தனெனும் அரசனே!
அனைவராலும் விரும்பப்படுகின்றவரே!

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழலார் வியப்புற
நீடு மெய்த் தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே.

அழகுக் கடவுளையே வெல்லும் படியான அழகுள்ள மாதர்கள்
மலரிட்டு முடிந்திருக்கும் நீண்ட கூந்தலைக் காட்டியும் கலங்காத
மெய்யான தவம் செய்யும் முனிவர்கள் நிறைந்துவாழும்
திருத்தலமாம் திருத்தணிகை மலைமீது வதியும் தலைவரே!

ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்கு


ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன்
அவத்தினிலே இறத்தல் கொலோ எனக்கு

இனி எனக்கு என்ன புத்தி சொல்லப் போகிறீர்?
எவரை அண்டி இனி நான் பிழைத்திடுவேன்?
கதியேதுமின்றி வீணே இறந்துபடலே எனக்கு விதித்ததோ?

னி ...... தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோ


நீ.. தந்தை தாயென்றே இருக்கவும் நானும் இப்படியே தவித்திடவோ
சகத்தவர் ஏசலில் படவோ

யாருமெனக்கு இல்லையெனில் இதனைப் பொறுக்கலாம்
ஆனால் தந்தையும் தாயுமாய் நீ எனக்கு இருக்கையிலே
இவ்வண்ணம் நான் தவித்தழிதல் தகுமோ?
உலகத்தவர் பழிச்சொல்லுக்கு ஆளாதலும் முறையோ?

ந கைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடை யா


நகைத்தவர் கண்கள் காணப் பாதம் வைத்திடு ஐயா

எனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பவரெல்லாம் காணுமாறு
நின் திருமலர்ப் பாதங்களை என் தலைமீது வைப்பாய் ஐயா!

தே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யா


தெரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா


அப்படி நீ எனை நின் தாளிணையில் சேர்க்காவிடிலோ
இந்த உலகமே எனைப்பார்த்து எள்ளி நகையாடும் ஐயா!

த கப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோ


தகப்பன் முன் மைந்தன் ஓடிப் பால்மொழிக்குரல் ஓலம் இட்டிடில்
யார் எடுப்பது என வெறுத்து அழ பார் விடுப்பர்களோ

பால்மணம் மாறாப் பச்சிளங்குழந்தை தன்
தந்தை முன்னே சென்று நின்றுகொண்டுத்
தன் மழலைக் குரலெழுப்பி ஓலமிட்டு அழுகையிலே
யார் பெற்ற பிள்ளையோ இது என எவரேனும்
வெறுத்தொதுக்கி விட்டு விடுவரோ?

எ னக்கிது ...... சிந்தியாதோ


எனக்கு இது சிந்தியாதோ ?

[இதுவரை இப்படிப் புலம்பிய அருணையாருக்கு இப்போது சட்டென ஒரு எண்ணம் வருகிறது!
இந்த அடி வரை, திருமுருகனைக் கடிந்து எழுதிய பாடல் போலத் தோன்றிய இது,
இப்போது அருணையாருக்கே ஏற்பட்ட ஞானோதயமாக மாறுகிறது!]


இந்தச் சிந்தனை என் சிந்தையில்
எப்படித் தோன்றாமல் போயிற்று!
வருவான்! முருகன் அருள்வான்!
முருகனருள் முன்னிற்கும்!

[எனக் கூத்தாடுகிறார்! நாமும்தான்!]


அனைவரும் இப்பாடலை தினமும் ஓதி முருகப் பெருமானின் அருளைப் பெறுவோம்!
****************


**** அருஞ்சொற் பொருள் ****

நத்துதல் = பற்றுக்கோடாய் அணுகுதல்
ஓதம் = நீர், தண்ணீர்
நீச = இழிந்த
முட்டர் = மூடர்கள்
பானு = சூரியன்
மொய் = பொருந்தியிருக்கும்
மாரன் = மன்மதன்
நீடு = நீண்ட, அதிகமான
தம்பிரான் = தலைவர்
*******************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
******************************

No comments: