Tuesday, July 13, 2010

அ. அ. திருப்புகழ். -- 39 -- 'துப்பாரப்பா'

அருணையார் அருளிய திருப்புகழ். -- 39

சந்தத்தின் சிறப்பே திருப்புகழின் சிறப்பு! சந்தத்திற்குள்ளும் ஒரு பொருளை
வைத்துப் பாடுவதே திருப்புகழின் பெருஞ்சிறப்பு! அதனை விளக்கும் ஒரு புகழே இந்தத் திருப்புகழ்!
ஐம்புலன்களை அடக்கி, உடலை ஒடுக்கி, அறிவுக்கும் எட்டாத அவனை அடைவது எப்படி என
இந்தத் திருப்புகழ் மெய்யுற விளக்குகிறது! வாருங்கள்! பகிர்வோம்!

முருகனருள் முன்னிற்கும்!

********** பாடல் ************

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான


துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
*********************

************ பொருள் ************

[வழக்கம்போல் முன் பார்த்துப் பின் பார்க்கலாம்!]


தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தப்பாமல் பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக் களைவோனே

நாளென்செயும் வினைதான் என்செயும்
எனச் சொல்வார் நாமாரும் குமரனைப் பாடினால்

நாடோறும் தவறாமல் நல்லோனைப் பாடிவந்தால்
தீராத வினையெல்லாம் தீர்த்துவைக்கும் முருகோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

தற்கு ஆழிச் சூர் செற்றாய்
மெய்ப் போதத்தாய் தணிகைத் தனிவேலா

எனை மிஞ்சி எவருமிலை எனும்
அகந்தையினைத் தான் கொண்டு

ஆயிரத்தெட்டு அண்டங்களையும்
ஆளுகின்ற ஆக்ஞா சக்கரத்தால்

அனைத்துலகும் ஆண்டுவந்த சூரபதுமனை
தனிவேல்விடுத்து வெற்றிகொண்டவனே

சிவஞான வடிவேயான மெய்ப்பொருளோனே
தணிகைமலை வீற்றருளும் தண்டபாணித் தெய்வமே!

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அப்பாகைப் பாலைப்போல் சொல்
காவல் பாவை தனத்து அணைவோனே

பரண்மீது நின்று பறவைகளை விரட்டுதற்காய்
'சோ...சோ...'வெனத் தீங்குரல் எழுப்புகையிலும்

'ஆரடா நீ'யென்று வேடனாய் வந்தவனை
விரட்டுமொழி பேசுகையிலும்

'தேனுண்டு தினையுண்டு தின்றுபசி தீர்ந்திடவே
வா'வென்று வந்தவொரு கிழவனையே உபசரிக்கையிலும்

'ஆனைமுகா சரண'மென அண்ணனையே அழைத்தங்கு
காமுற்ற கிழவனையே வெருட்டிநின்ற போதினிலுமே

தீம்பாகாய்க் குரலெழுப்பி சிந்தைமனம் கவர்ந்தவளாம்
நம்பியவன் திருமகளாம் வனக்குறத்தி வள்ளியவள்

தினைப்புனத்தைக் காவல்செய்த தீதில்லா தெய்வமகள்
த்னமணைத்து தினம் மகிழும் தனிப்பெருந் தெய்வமே!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

து பார் அப்பு ஆடல் தீ மொய்க் கால்
சொல் பா வெளி முக்குண மோகம்
துற்றாய பீறல் தோல் இட்டே
சுற்றா மதனப் பிணிதோயும்

பயிர் விளைந்து உணவுநல்கும் நிலமும்
உயிர் நிறைக்க உவந்தளிக்கும் நீரும்

கீழிருந்து மேலெழும்பி அசைகின்ற தீயும்
மெய்தழுவி நமையணைத்து வீசுகின்ற காற்றும்

சொல்லுக்கும் அடங்காது பரந்திருக்கும் வான்வெளியும்
சத்துவம் ராஜஸம் தாமசம் என்கின்ற முக்குணமும்

மண் பெண் பொன் என்னும் மூவகையாம் ஆசைகளும்
நெருக்கமாய் உள்ளுள்ளே ஒடுக்கமாய் வைத்திருந்து

ஒன்பது ஓட்டைகள் அடங்கிய தோலால்
நன்றாகச் சுற்றி மூடிய இவ்வுடம்பில்

கூடவே பிணைத்திருக்கும் காமமெனும் நோயும்
தோய்ந்திருக்கும் எப்போதும் எமையே வாட்டிநிற்கும்


இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

இப் பாவக் காயத்து ஆசைப்பாடு
ஏற்றே உலகில் பிறவாதே

நிலம்புகுந்து பயிரழிக்கும் திருட்டு மாட்டுக்குக்
கட்டையொன்றைக் கட்டியங்கே அனுப்புதல்போல்

வினைநிறைந்த காரணத்தால் விளைகின்ற இவ்வுடம்பும்
ஆசைகளைக் கூட்டிவந்து அல்லலுற வந்ததிங்கே

பாவம்நிறைப் பொய்யுடம்பைப் பெற்றிங்கே வாழாமல்
மீண்டுமொரு பிறப்பிங்கே இனிமேலும் நிகழாமல்


எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

ஏத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

நின்புகழை நாடோறும் நித்தமிங்கே பாடாதார்
ஆரவாரக் கல்விஞானம் பெற்றதனால் கிட்டாத

அன்பிலார்க்கு என்றுமிங்கே எட்டாது நின்றிருக்கும்
அன்புருவாய் நிறைந்திருக்கும் நின்னருளைத் தரவேண்டும்!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!
**********************

********* அருஞ்சொற்பொருள் **********

து = உணவுப் பொருள்,
பார் = அதை நல்கும் பூமி
அப்பு = நீர்
ஆடல் தீ = அசைகின்ற நெருப்பு
சொல் பா வெளி = சொற்களால் புகழப்படுகின்ற ஆகாய வெளி
துற்றாய = நெருக்கமாய் வைக்கப்பட்டுள்ள
பீறல் = கிழியல்
பாவக் காயம் = பாவ மூட்டையான உடம்பு
எத்தார் = ஏத்தார் = போற்றிப் பாடாதார்
வித்தாரத்தே = ஆரவாரமான கல்வி ஞானம்; அகம்பாவக் கல்வி ஞானம்
தற்கு = தருக்கு; செருக்கு; ஆணவம்
ஆழி = ஆக்ஞா சக்கரம்
செற்றாய் = அழித்தவரே
பாகைப் பால் = பாகு + பால்; இனிமை
அத்தா = குரு; மூத்தோன்
நித்தா = என்றும் நிலைத்திருப்பவன்
முத்தா = ஆசா பாசங்களில் இருந்து நீங்கியவன்
சித்தா = சித்துக்களை உடையவன்
*************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

2 comments:

http://machamuni.blogspot.com/ said...

அருணகிரிநாதரின் திருப்புகழ் படிக்கவே மிக நிரடானது.அதை படித்து பொருள் புரிந்து பிரித்து பதவுரை எழுதி வெளியிடுகிறீர்கள்.அரும் பணி.
நன்றி
இப்படிக்கு
சாமீ அழகப்பன்

VSK said...

மனமுவந்து நன்மொழிகள் சொல்லியமைக்கு பணிவன்புடன் வணங்கிக் கொள்கிறேன் ஐயா!
இப்போது 'கந்தரநுபூதி'க்கு விளக்கவுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நாளை முதல் வாரமிரு முறையாக அதனை வெளியிடுகிறேன். அதனையும் படிக்க வேணுமாய்ப் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.