"இருப்பவல் திருப்புகழ்"
திருப்புகழ் விளக்கம் எழுதி அதிக நாட்களாயிற்று. ஒவ்வொரு நாளும் இந்த நினைப்பு வரும்! அதே வேகத்தில், எடுத்துக் கொண்டிருந்த மற்ற பணிகளுக்கிடையில், வந்த வேகத்தில் மறைந்தும் போய்க்கொண்டிருந்தது! இந்த சமயத்தில்தான், எனது இனிய நண்பர் ரவி ஒரு
திருத்தணி திருப்புகழைக் கொடுத்து இதற்கு விளக்கம் சொல்லும்படி பணித்தார்!
அப்போதுதான், போர் முடித்த சினம் தணிய திருத்தணி மலையில் வந்தமர்ந்து, தேவசேனாவுடன் தனித்திருந்த தணிகைவேலன், நாரதர் தூண்டலின் காரணமாக தினைப்புனத்தில் காவல் செய்து வந்த வள்ளியைக் கைபிடித்து, வள்ளி தேவசேனா உடனிருக்க திருத்தணி மலையினில் அருள் செய்து கொண்டிருக்கும் கந்தபுராணக்
கதையை எழுதி முடித்திருந்தேன்! அதன் தொடர்ச்சியாக இந்த புகழை இங்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று எனது பிறந்தநாள்! இந்த நாளில் எனது சிறப்புப் பதிவாக இதனை இடுகிறேன். இனி வாரம் ஒரு திருப்புகழ் தவறாது இட எண்ணம்!
முருகனருள் அனைவர்க்கும் முன்னிற்கும்!
************************************
------------- பாடல் -------------
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புடனொளித்தெய்த மதவேளை
கருத்தினில் நினைத்தவ நெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே."
***********************************
------------- பொருள் ------------
[வழக்கம்போல், பின்பார்த்து, முன்னுக்கு வருவோம்!]
"கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புடனொளித்தெய்த மதவேளை"
கருப்பு வில் வளைத்து அணி மலர்க் கணை தொடுத்து இயல்
களிப்புடன் ஒளித்து எய்த மதவேளை
தேவரின் குறைகளை நீக்கிட வேண்டி
தேவாதி தேவனை வேண்டிட வந்த
தேவர்கள் சிவனின் தவத்தினைக் கலைக்க
மன்மத பாணம் எய்திடச் சொல்லி
காமனை அங்கே அனுப்பியே வைத்தார்.
தன்செயல் மீது தருக்குற்ற காமன்
இயல்பாய் தனக்குள்ள செருக்குடன் வந்து
மலரிடை மறைந்து மலர்க்கணை தொடுத்து
சிவனின் மீது எய்திடும் வேளை,
"கருத்தினில் நினைத்தவ நெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர்"
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதற்படு
கனல் க[ண்]ணில் எரித்தவர்
அடாது செய்திட்ட காமனை மனத்தில்
ஒருகருத்துடன் சினந்து நெற்றிக்கண் திறந்து
நினைத்த நொடியினில் சாம்பலாய் எரித்தவரும்,
"கயிலாயப் பொருப்பினி லிருப்பவர்"
கயிலாயப் பொருப்பினில் இருப்பவர்
கயிலை மலையினில் வீற்றிருப்பவரும்,
"பருப்பத வுமைக்கொரு புறத்தினை யளித்தவர் தருசேயே"
பருப்பத உமைக்கு ஒரு புறத்தினை அளித்தவர் தரு சேயே !
இமயமலையினில் வளர்ந்திருந்த
உமையவள் தனக்கு தன்னில்
ஒரு பாதி உடலை அளித்த
சிவனார் தந்த பாலகரே!
"புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே."
புயல்பொழில் வயல்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே.பொங்கிவரும் மேகங்கள் வானோக்கி வளர்ந்திருக்கும்
நெடுமரங்களைத் தழுவிடும் வனப்புறு சோலைகளும்
நிறைந்த வயல்களும் ஊர்களும் சிறந்திருக்கும்
திருத்தணி மலைமீது விருப்பமுடன் அமர்ந்திருக்கும்
பெருமை மிகுந்தவரே!
"இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு மெனவோதும்"
இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை அறுத்திடு என ஓதும்
காடுவழி செல்லுகையில் கட்டுணவு கொள்வதுண்டு
பாதிவழி போனதுமே அதுவுமங்கு தீர்ந்துவிடும்
மீதிவழி செல்வதற்கு உணவாக அமைவதெல்லாம்
கையிருப்பாய்க் கொண்டுசெல்லும் பச்சை அவல் மட்டுமே!
நீரெடுத்து அதை நனைத்து வட்டிலிலே இட்டிருந்தால்
சீனியொடும் சேர்ந்துவிடும் உப்புடனும் சேர்ந்துவக்கும்
வழித்துணையாய் வருவதிங்கு இருப்பு அவல் மாத்திரமே
கெட்டதுவும் போகாது கையிருப்பும் குறையாது
சிறிதளவு அவல் இருந்தால் சேரும்வழி எளிதாகும்!
அவலையிங்கு எடுத்துக்காட்டாய் அருணையாரும் சொல்கின்றார்
எதுவிங்கு போனாலும் புகழொன்று... திருப்புகழொன்று... கூடவரின்
அடியாரின் துயரமெலாம் நொடிப்பொழுதில் மறைந்துவிடும்
என்கின்ற பெருமைதனை எடுத்திங்கு கூறுகின்ற,
"இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத லறியாதே"
இசைத்தமிழ் நடத்தமிழ் எனத் துறை விருப்புடன்
இலக்கண இலக்கிய கவி நாலும்
தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிகச் சக
தலத்தினில் நவிற்றுதல் அறியாதே
இசைவழி புகழினைப் பாடிடச் செய்யும்
இசைத்தமிழ் என்னும் வகையாலும்,
காட்சிகள் காட்டிடும் முறையினைச் சொல்லும்
நாடகத் தமிழ் என்னும் வகையாலும்,
அகம் எனும் துறையினைச் சொல்லிடும் இனிய
இயற்றமிழ் என்னும் வகையாலும்,
இலக்கண முறைகளை இனிதுடன் பயின்று
இலக்கியம் படைத்திடும்,
பொருளினைக் கருவாய் உளத்தினில் கொண்டு
அதனை உடனே வரிகளில் வடித்து
நயமுடன் படிக்கும் ஆசு கவி,
அழகுறு சொற்களை எழிலுடன் சமைத்து
எதுகையும் மோனையும் இயல்பாய் அமைத்து
இலக்கியச் சுவையைக் காட்டிடும் மதுர கவி,
ஒரு சிறு கருவை ஊதிப் பெருக்கி
மலையென அதனை மாண்புற வளர்த்து
அழகுறப் பாடிடும் சித்திர கவி,
நெடிதொரு கதையினை அங்கமாய்க் கொண்டு
உரைநடைச் சுவையை உள்ளே புகுத்தி
புராணம் பாடிடும் வித்தார கவி,
எனும் நால்வகைக் கவிகளால்
அன்புடன் மனத்தில் தரிப்பவரும்,
நாவினால் சொல்லி நயம்படப் படிப்பவரும்,
மனதினில் என்றும் அதனையே நினைப்பாய்க்
கொண்டிங்கு வாழ்பவருமாய் இருக்கும்
திருப்புகழ் அன்பரை ஒருபோதும்
இவ்வுலகினில் போற்றிப் புகழ்வது அறியாது,
"தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ"
தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ?
தம்முடை முலைகளும் முகவெழிலும் காட்டி
மனத்தினை உருகிடச் செய்கின்ற
வல்லமை கொண்ட பொதுமகளிர் மயக்கம்
என்னும் படுகுழி அதனில் அடியேன்
வீழ்ந்து போகக் கடவேனோ?
தேவரீர் முருகப்பெம்மானே!
திருத்தணித் தலத்தினில் உறைபவரே!
எம்மை அவ்வாறு செய்யாது தடுத்தாட் கொள்க!
***********************************************
அருஞ்சொற்பொருள்:
இடுக்கு- துயரம், தடைகள்
நவிற்றுதல்- முறையாக ஓதுதல்
சமர்த்திகள்- சாகசம் செய்யும் பெண்கள் [பொதுமகளிர்]
கருப்புவில்- கரும்பு வில்
நுதல்- நெற்றி
பொருப்பு- மலை
பருப்பதம்- மலை, பர்வதம்
புயல் பொழில்- மேகம் தவழும் சோலைகள்
***************************************************
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**************************
3 comments:
பிறந்த நாள் வாழ்த்துக்கள். அறுபதாம் பிறந்த நாள் என்றறிகிறேன். முருகன் இன்னும் பல ஆண்டுகள் இனிதாய் செல்ல துணை நிற்பான்.
நன்றி பத்மா அவர்களே!
நன்றி
Post a Comment