"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]-1
[முதல் பகுதி]
நண்பர் ரவி கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருவெழு கூற்றிருக்கை வகையில் அமைந்துள்ள இந்தத் திருப்புகழை எனக்குத் தெரிந்த அளவில் விளக்க முயன்றிருக்கிறேன்.
1 முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல், பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த்தட்டு போல மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த இந்தப் பாடல் சுவாமிமலை குருநாதனைப் போற்றிப் பாடும் அற்புதப் பாடல்.
ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் கீழிறங்கி, மேலேவந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும்.
1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321
என 7 வரை சென்றதும் இது ஒரு தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.
அதன்பின், இறைவனை அமரச் செய்ய ஒரு இடைத் தட்டு, பீடம்!
பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து, இறுதியில் தொடங்கிய அதே 1 என்னும் எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திரு எழு கூற்று இருக்கை எனப் பெயர்.
சம்பந்தரும் இன்ன பிறரும் இவ்வகையைத் தொட்டிருக்கிறார்கள்.
இப்போது பாடலைப் பார்ப்போம்!
*********** பாடல் ***********
ஓருரு வாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை
இருபிறப் பாளரி னொருவ னாயினை
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஒருசிறை விடுத்தனை
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக் கிளையோ னாயினை
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
கொருகுரு வாயினை
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
ஏரகத் திறைவ னென இருந்தனையே.
**************
*********** பொருள் ***********
இப்பாடலில் எண்களை வைத்து விளையாட அருணையார் முடிவெடுத்திருக்கிறார். அதற்காக அப்படியே விட்டு விடுவாரா?!!
சொற்களில் எண்களை வைத்தவர், கருத்தினில் கந்த புராணத்தையே சொல்லியிருக்கிறார்.
இறையருள் கைவந்த ஒருவரால் மட்டுமே இது இயலும் என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணம்.
பாடலின் பொருள் புரியவரும்போது, நமக்கும் இது புரியும்!
முதலில் இதைப் பதம் பிரித்துப் பார்ப்போம்!
ஓர் உருவாகிய தாரகப் பிரமத்து
ஒருவகைத் தோற்றத்து இரு மரபு எய்தி
ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை
இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை
ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஒருசிறை விடுத்தனை
ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்
முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீவலம் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத்து இருசெவி
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினில் இருவகைத்து ஆகிய
மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்தும்
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு
ஒரு குரு ஆயினை
ஒருநாள் உமையிரு முலைப்பால் அருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவன் என
எழில்தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை
அறுமீன் பயந்தனை ஐம்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்டு
அன்றில் அம் கிரி இருபிளவாக ஒருவேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற
ஏரகத்து இறைவன் என இருந்தனையே.
--------------------------------
இப்பவே கொஞ்சம் புரிஞ்சிருக்குமே!
இருந்தாலும், அவர் சொன்ன கந்தபுராணக் கதையை நான் சொல்வதற்காக, இதன் பொருளைப் பார்ப்போம்.
எண்களை வைத்து இப்பாடல் அமைந்திருப்பதனால், வழக்கம்போல் பின் பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பொருள் காணலாம்.
அருஞ்சொற்பொருளையும் ஒவ்வொரு பத்திக்கும் அடியில் இட்டிருக்கிறேன், பாடல் விளங்குவதற்காக!
சற்று விரிவாகவும், ஒரு மாறுபட்ட வடிவமைப்பிலும் இப்பாடலின் பொருளை விளக்க எண்ணியிருப்பதால், இது ஒரு சில பதிவுகளாகத் தினமும் வரும். பாடலின் பொருள், கந்தபுராணம் சொல்லும் கதை, மற்றும் திருவெழு கூற்றிருக்கையை எனது பாணியிலும் சொல்லியிருப்பதால் இந்த முறை! பொறுத்தருள்க! [அடுத்த பதிவு நாளை வரும்!]
**********************************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
--------------------------------
Tuesday, September 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிக அருமை! மேலும் பல பாடல்களைக் காண ஆவலுடன் உள்ளேன்!
Surendhar said...
மிக அருமை! மேலும் பல பாடல்களைக் காண ஆவலுடன் உள்ளேன்!//
இந்தப் பாடலின் அடுத்த பகுதிகளுக்கும், மேலும் சிலபாடல்களுக்கும் விளக்கம் சொல்ல முயன்றிருக்கிறேன் ஐயா! விரைவில் அவைகளை இங்கெ இடுகிறேன். வணக்கம்.
மேலும் ஒரு பத்து இடுகைகள் இட்டிருக்கிறேன் ஐயா! படித்து மகிழவும்! வணக்கம்!
Post a Comment