Tuesday, July 13, 2010

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை] [இரண்டாம் பகுதி]

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]

[இரண்டாம் பகுதி] முதல் பகுதி1212321

ஓர் உருவாகிய தாரகப் பிரமத்து
ஒருவகைத் தோற்றத்து இரு மரபு எய்தி

ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை

இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை


அனைத்துக்கும் முதலான ஒருபொருள்
ஓமெனச் சொல்லும் பிரணவம் ஆகும்

ஐந்துமுகம் கொண்டதோர் சிவனாருடன்

இன்னொரு முகமாய்ப் பிரணவமும் சேர்ந்து

ஆறுமுகம் ஆனதோர் ஒருவகைத் தோற்றத்தில்

சக்தியும் சிவனுமென
இருவகைக் குணங்களும்
இணைந்ததோர் பிறப்பாய் விளைந்திடவேண்டி

அவையிரண்டும் ஒன்றினில் ஒன்றாகி

சக்தி சிவனெனும் இருவரிடமும் தோன்றி

மூன்றாவதான
ஒன்றாக உருவாகி
என்றும்
மூப்பே இலாத இளமையொடு விளங்குகிறாய்!

அந்தணர்க்கோர் வழக்கம் உண்டு

பிரணவப் பொருளை ஓதிடும் பழக்கம்

புரிநூல் அணிந்திடும் நிகழ்ச்சியில் தொடங்கும்
எனவே இவர்க்கு இருபிறப்பெனச் சொல்வார்!
நூலுக்கு முன்னால், நூலுக்குப் பின்னால்

அப்படி வழங்கும் ஓர் அந்தணர் குலத்தில்

ஒப்பிலா
ஒருவனாய் வந்துதித்த சம்பந்தன்!

[கந்தபுராணம் சொல்லும் கதை!]

தவத்தினில் இருந்த சிவனை எழுப்பி

சத்தியும் சிவனுமாய்ச் சேர்ந்தவோர்

திரு உருவினைக்கொண்டு

சூரனை அழித்திடும் திருச்செயல் நடக்கவேண்டி

மாரனை அனுப்பித் தவத்தைக் கலைக்க

நெற்றிக்கண்ணொளி நெருப்பினில் எரிந்து

மாரனும் சாம்பராகி மடிந்து வீழ்ந்திட

தவநிலை கலைந்த சிவனது அருளால்

அமரர் துயரம் தீர்த்திட வேண்டி

தேவியை நோக்கிய சிவனாரின் கருணை

சத்தியின் சக்தியும் சேர்ந்தவோர் அம்சமாய்

நெற்றிக்கண்ணினின்று பிறந்ததே கந்தனின் உருவாம்!


இருபிறப்பென்னும் வழக்கம் கொண்ட

அந்தணர் குலத்தில் ஒப்பற்ற ஒருவனாய்

திருஞான சம்பந்தராய் நீ அவதாரம் செய்தாய்!


[திருவெழுக்கூற்றிருக்கை! நமது பாணியில்!]
ஒரு
வனாய்ப் பிறந்தவன் இருவரின் அம்சமாய்

ஒரு
பொருள் சேர்த்து இருநிலை கலந்து

மூன்றாம்
பொருளாய் மூப்பின்றி விளங்கினான்!

இரு
பிறப்பென்னும் அந்தணகுலத்தில்

ஒப்பிலா ஒருவனாய் சம்பந்தன் ஆனாய்
!

அருஞ்சொற்பொருள்:
தாரகப் பிரமம்= முழுமுதற் பொருளான பிரணவம்

இரு மரபு= சக்தி, சிவம் என்னும் இரு அம்சங்கள்

மூவா= மூப்பே இல்லாத, மூன்றாவதான

**********************************************

1234321

ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


தகைமைக்குத் தகுதியற்ற ஓர்செயலைக்
கருவமுடன்
செய்ததனால் முன்னொருநாள்

பிரமனின் தலைக்குடுமி இமைப்பொழுதில்
கலைந்துபோகுமாறு
அவன் தலையினில்
குட்டிச் சிறையினில் தள்ளிட
அரியும் அரனும் இந்திரனும் மூவராய்
முன்வந்து
நின்னிடம் அயனைச் சிறைவிடுக்க

இரு
தாளிணைவேண்டிநிற்க அருள்மிகக் கொண்டு

அவனை ஒருசிறை விடுத்தனை


[கந்தபுராணக் கதை]

சிவனைக் காணவந்த பிரமனும் ஓர்நாள்

செருக்கு மிகக்கொண்டு சிறுபயல் என்றெண்ணி

வணக்கம் சொல்லாமல் குமரனைக் கடந்திட

அதட்டியழைத்து முன்னே நிறுத்தி
படைத்தொழில் செய்திடும் கருவமோ நினக்கு

பிரணவத்தின் ஒலியினின்றே அனைத்தும் பிறப்பதால்

ஓமென்னும் ஒருசொல்லின் பொருளுரைத்துச்
செல்கவென
முருகனும் அயனைக் கேட்டிட
பொருளறியாது விழித்தனன் பிரமனும் ஆங்கே

சினம்மிகக்கொண்டு காலாலுதைத்து

தலைமுடி கலைந்திடத் தலையினில் குட்டி

செய்தொழில் பெருமை அறியாது செய்திடும்

நின்னிடம் இனிமேல் சிறையினில் என்றே

அயனைச் சிறையினுள் எட்டித் தள்ளினான்

அழகன் முருகன்!


சேதிகேட்டுப் பதைபதைத்துத்

திருமாலும் சிவனாரும் இந்திரனும்
மூவருமாய்
அழகனிவன் எதிர்வந்து
அயனைச்
சிறைவிடுக்க வேண்டுமெனக் கேட்டிடவே
பிரணவத்தின் பொருளறியா மூடனிவன்

நீர் பொருள் சொல்லிச் சிறைவிடுப்பீர்

எனக்கேட்ட முருகனிடம் கைபொத்திச்
சிரம்தாழ்த்தி
சிவனாரும் பணிந்துநிற்க
அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாகி
அருள்புரிந்து அயனைச் சிறை விடுத்தான்

அழகன் முருகன்!


[திருவெழுக்கூற்றிருக்கை- நமது பாணியில்!]

தகுதியிலாதோர் ஆணவத்தால் ஓம் என்னும் ஈரெழுத்தை

முத்
தமிழில் விளக்காத நான்முகனின் தலையில்குட்ட

அரனரி யிந்திரன் மூவரும் முருகனின்
இருதாள்பணிய
அயனை அன்று ஒருசிறை விடுத்தனை!


அருஞ்சொற்பொருள்:

ஓரா= [இரு பொருள்] ஒன்று, தெரியாமல்

இருமை= [இரு பொருள்] இரண்டு, கர்வம்

நான்முகன்= பிரமன்

இமைப்பினில்= ஒரு நொடியில், கண்ணிமைக்கும் நேரத்தில்

மூவர்= அரி, அரன், இந்திரன்
*****************************************

123454321

ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்
முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீவலம் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருநொடிப்பொழுதில் இருசிறகினை விரிக்கும்
மயில்மீதேறி
முப்பக்கமும் கடல்சூழ்ந்த
முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் என்னும்

நானிலமே அஞ்சிநடுங்கி ஐந்தாம்வகையாம்
பாலையென வறளும் வேகத்துடன்

இப்பூவுலகை நீ வலமாக வந்தாய்


பெருமைக்குரிய நால்வகைத் தந்தங்களுடையதும்
மூ
வகையான மதம் பிடிக்கவல்லதும்
பனையோலைபோலும் பரந்த
இரு செவிகளையுடையதும்
நீண்டுதொங்கும் அழகிய
தொரு துதிக்கையையுடையதுமான வெள்ளிமலைபோலும் ஐராவதம் எனும்
யானையையுடைய
இந்திரனின் மகளாம் தேவயானையை
முறைப்படி மணம் செய்து கொண்டவன் நீ!


[கந்தபுராணம் சொல்லும் கதை]

கைலாயத்தில் அன்றொரு காட்சி
!
சிவனும் உமையும் அமர்ந்திருக்க
கணபதி முருகன் உடன் விளையாட

நானிலத்திற்கோர் உண்மை புகட்டிட

நாரதர் கொணர்ந்தார் நல்லதோர் மாம்பழம்!

அதனைப் பற்றிடச் சோதரர் இருவரும்
எனக்கே எனக்கே என மல்லுக்கு நிற்க

உலகினை எவரிங்கு முதலில் வலமாய்ச்

சுற்றிவருபவரோ அவருக்கே மாங்கனி
என்றிட
மயிலினை அழைத்து அதன்மீதேறி
பெருத்த சிறகினை விரித்திடும் மயிலினில்

மூன்று பரப்பினில் சுற்றிடும் கடலைக்

கொண்டிடும் பூமியை வலம்வரச் செய்திட

முருகன் பறந்தான் இமைப்பொழுதினிலே!


அருகினில் நின்ற பருத்த கணபதியும்
'அம்மையப்பனும் உலகும் ஒன்றலவோ' என

நாரதமுனியை நவின்று கேட்டிட

'ஓம்'என நாரதர் இருகைகூப்ப

அம்மையப்பனை அழகாய் வலம்செய்து

அன்னையின் கையினில் இருந்த மாங்கனியை

தொந்திக்கணபதி தான்பறித்துண்டான்!


விரைவாய் வலம்வந்து கனியைத் தட்டலாம்

எனவே வந்த குமரக்கடவுளும்
இந்நிலைகண்டு
கோபம் கொண்டு
அனைத்தையும் துறந்து
ஆண்டியாகிப்போனான்!


அனைத்தையும் துறந்து ஆண்டியானாலும்

பின்னவன் செய்திட்ட வீரச்செயலினால்

சூரனும் அழியத் தேவர்கள் மகிழ
பட்டத்து யானையாம் ஐராவதமென்னும்

வெள்ளையானை வளர்த்த பூமகள்

தேவயானை என்னும் குலமகள்

கந்தனுக்கென்றே பிறந்த நன்மகள்
கைத்தலம் பற்றிக் கந்தனும் அருளினான்!


[திருவெழுகூற்றிருக்கை- நமது பாணியில்!]

ஒரு
நொடிப்பொழுதில் சிறகிரண்டுவிரித்து

மூன்று
புறங்களில் கடலால் சூழ்ந்த

நானி
லம் அஞ்சிஉலகும் வறள

மாங்கனிவேண்டி நீ வலம் வந்தனை.

நாலு
தந்தமும் மூவகை மதமும்

முறங்கள்போலும் இருசெவியழகும்

நீண்டுவளர்ந்ததோர் தும்பிக்கையும்

ஒருங்கே அமைந்த வெள்ளையானையைத்

தனக்கெனக்கொண்ட இந்திரன் மகளாம்

தேவயானையை நீ திருமணம் செய்தனை
!

அருஞ்சொற்பொருள்:

சிறை- சிறகு, இறக்கை
முந்நீர்= மூன்று புறமும் சூழ்ந்த கடல்

நானிலம்= குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல் என்னும் நிலம்

மருப்பு= தந்தம்

பொருப்பன்= இந்திரன்

*****************************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
--------------------------------
[இதன் அடுத்த பகுதி இன்னும் சில மணி நேரங்களில்!]

No comments: